பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று நம் முன்னோர்கள் வாழ்த்துவதுண்டு. இதைக் கேட்டவுடன் நம்மவர்களுக்கு ஒன்று தோன்றும். அதென்ன பதினாறு பெறுவது. பதினாறு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதா! ஒன்று இரண்டிற்கே இன்றைய குடும்பம் தாங்க மாட்டென் என்கிறதே, பதினாறு பெற்றால் எப்படி வாழ்வது என்றும் தொன்றும்.
பழமைகளைக் கேலி செய்வதே நாகரீகம் என்ற தொனியை சமூகத்தில் விதைக்கும் நமது தமிழ் சினிமாவும் கதையின் உச்சக்கட்ட காட்சியில் நாயகன் நாயகிக்கு திருமணம் நடக்கும் போது, ஒரு வயதானவர் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பார். உடனே ஒரு நகைச்சுவை நடிகர் "என்னது இருக்கிற ஜனத் தொகையில் பதினாறு பெற்றால் நாடு என்ன ஆகும்? ரெண்டு பெற்று இனிதே வாழ்க!" என்று வாழ்த்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில் இப்படி வாழ்த்துவதையே விட்டு விட்டனர்.
சரி அப்படி பெரியவர்கள் சொன்ன பதினாறும் பெறுவது என்றால் என்ன?
அதாவது பதினாறு வகை செல்வங்கள் பெற்று பெறுவாழ்வு வாழவேண்டும் என்றனர். இந்த பதினாறு செல்வங்களையும் அபிராமி பட்டர் தனது பாடல் மூலம் இவ்வாறு தெரிவிக்கிறார்.
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலா மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாரத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துண்பமில்லாத வாழ்வும்,
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாய்நீ அபிராமியே!
என்று அன்னை அபிராமியிடம் வேண்டுவதாக வருகிறது இந்தப் பாடல்.
அபிராமி பட்டர் என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார். அரசரிடம் மரண தண்டனை பெற்ற போது அன்னை அபிராமியை வேண்டி இவர் பாடிய அபிராமி அந்தாதி புகழ் பெற்றது. அன்னை அபிராமி, இவர் அந்தாதி பாடி முடிக்கும் தருவாயில் தண்டனையிலிருந்து பட்டரை காப்பாற்றியதாக கதை உண்டு.
அத்தகைய சிறப்பு பெற்ற அபிராமிபட்டர் இப்பாடல் மூலம் கூறும் பதினாறு செல்வங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. கபடற்ற நட்பு
4. கன்றா வளமை
5. குன்றாத இளமை
6. பிணியற்ற உடல்
7. சலியா மனம்
8. அன்பான வாழ்க்கைத் துணை
9. தவறாத மக்கட்பேறு
10.தாழாத புகழ்
11.வார்த்தை தவறாத நேர்மை
12.தொடரும் கொடை
13.தொலையாத நிதியம்
14.நடுநிலையான அரசு
15.துன்பம் அறியாத வாழ்க்கை
16.இறையருள்
இதைக் குறித்தே நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று வாழ்த்த துவங்கினார்கள்.
இப்படிப் பட்ட நல்ல வாழ்த்துரையைத் தான் நம் மக்கள் கிண்டலுக்கான வாக்கியமாக்கிவிட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நம் முன்னோர்கள் அர்த்தமுடனேயே பல விஷயங்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
ஆக இதைப் படிப்பவர்கள் எல்லோரும் பதினாறு பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டி நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
2 comments:
I came through this website containing meaning for Marriage mantras. There, some other 16 things are defined.
Please refer to two continuous posts written by அருண் (Posted 13 டிசம்பர் 2006 - 04:14 மாலை)
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/4372-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/page__st__180
The whole meaning of marriage mantra itself is good. Hope you will write a new post with that info.
Thanks,
Sarathy
thanks partha. i will read that nd will soon answer ur question.
Post a Comment