நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் செய்யும் கெட்ட காரியம், வாயால் புரளிப் பேசுகிறோம், மனத்தினால் கெட்ட நினைவுகள்
கொள்கிறோம், பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.
எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்
பழகிக்கொள்ள வேண்டும்.
சம்பாதிப்பதற்கே பொழுதெல்லாம் போய் விடுகிறது, இதற்கெல்லாம் நேரம் ஏது
என்பீர்கள். சம்பாதிப்பது குடும்பஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால்
யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லையே!
வீண் பேச்சு, பிறரைக் கேலி செய்தல், வேடிக்கை பார்த்தல், நியூஸ் பேப்பர்
விமர்சனம் இவற்றில் எவ்வளவு நேரம் வீணாகிறது.
அந்த நேரத்தையெல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையில் செலவழிக்கலாமே! தனியாக நேரம் ஒதுக்காவிட்டாலும் பஸ்ஸிலோ ரயிலிலோ பாதுகாப்பான முறையில் அமர்ந்து பிரயாணிக்கும் போது இறைவனைப் இறைவனை தியானித்துச் செல்லலாமே!
ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராது.
மறு உலகத்திற்கான செலாவனி இறைவனின் நாமமும் இறைசிந்தனை மட்டும் தான்.
மனசு பகவானின் இடம். அதை குப்பைத் தொட்டியாக்கி வைத்திருக்கிறோம்.
அதை சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அதில் அமரவைத்து நாமும் அமைதியாக
அமைந்து விட வேண்டும்.
உலகமே மூழ்கிப்போனாலும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் நிஜமாகவே உலகம் மூழ்கும் போதும் நமக்குக் கைகொடுப்பது இதுவே ஆகும்.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஆனால் நம்மைப் போன்ற குடும்பஸ்தர்களுக்கு மனதை கட்டுப்படுத்த எந்த
அளவுக்கு முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஜென் கதை
தான் ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.
மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.
இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.
மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.
நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்.
நான் இப்போதைக்கு இந்த அளவிற்குத் தான். நீங்கள் எப்படி?
2 comments:
நான் பேசவே மாட்டேனே...
//ஸ்ரீராம். said...
நான் பேசவே மாட்டேனே...///
வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்.
என் கூட பேசுங்க தப்பில்லை. நல்ல விஷயங்களா பேசினா தப்பே இல்லை.
அன்புடன்
ராம்
Post a Comment