தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்ற இரு இளைஞர்கள் நண்பர்களாயிருந்தனர். அவர்கள் வியாபாரத்திற்காக ஒர் நாள் பயணம் சென்றனர். வழியில் ஒரு காட்டில் அவர்களுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன.
தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் "நாம் இருவரும் இதை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழலாம்" என்றான். ஆனால் துஷ்டபுத்திக் காரனோ வஞ்சகம் ஒன்றை நினைத்தான். அவன் தர்மபுத்தியிடம் "இப்போது இந்தப் புதையலை நாம் ஊருக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். தற்போது செலவுக்காக ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். மீதியை இந்த மரத்தடியில் புதைத்து வைப்போம். பின்னர் தேவைப்படும்போது வந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.
துஷ்டபுத்தியின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத தர்மபுத்தி அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் புதையலை மரத்தடியில் புதைத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தனர். துஷ்டபுத்தி தன் கையிலுள்ள காசுகளைச் சீக்கிரமே செலவு செய்து விட்டான். மரத்தடியிலுள்ள மொத்த காசுகளையும் தர்மபுத்திக்குத் தெரியாமல் தாமே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவன் காட்டுக்குச் சென்று மொத்த தங்கக் காசுகளையும் எடுத்து வந்தான்.
சில மாதங்கள் கழிந்தன. தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் வந்தான். மரத்தடியிலுள்ள காசுகளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று அழைத்தான். இருவரும் காட்டிற்குச் சென்றனர். மரத்தடியில் தோண்டினர். அங்கே புதையல் பானையைக் காணவில்லை. காசுகளை துஷ்டபுத்திதான் எடுத்திருக்க வேண்டும் என தர்மபுத்திக்கு சந்தேகம் வந்தது. அவன் அதுபற்றி துஷ்டபுத்தியிடம் கேட்டான். துஷ்டபுத்தியோ தான் எடுக்க வில்லை என்று மறுத்தான். இறுதியாக தர்மபுத்தி அரசரிடம் சென்று வழக்கு தொடுத்தான்.
துஷ்டபுத்தி அரசரிடம் "அரசே! நான் நண்பனுக்குத் துரோகம் செய்பவன் அல்ல. காசுகளை நான் எடுக்கவில்லை. இதற்கு வனதேவதையே சாட்சி" என்றான்.
"வன தேவதை வந்து சாட்சி சொல்லுமா உனக்காக?" என்றார் அரசர்.
துஷ்டபுத்தியோ காட்டிற்கு சென்று வனதேவதையிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்றான். மறுநாளே கட்டுக்குச் சென்று பார்ப்போம் என்று அரசர் முடிவு செய்தார்.
அன்றைய இரவு வீட்டிற்கு வந்த துஷ்டபுத்தி தன் தந்தையை அழைத்தான். நடந்த அனைத்தையும் கூறினான். பிறகு தன் தந்தையையே வன தேவதை போல் நடிக்கத் தயார் செய்தான். அன்றிரவே ஒரு மர பொந்தில் தந்தையை ஒளிந்திருக்கச் செய்து அரசர் கேட்கும் போது தன் மகன் குற்றவாளி இல்லை என்று அசரீரி போல பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
மறுநாள் அரசரும் துஷ்டபுத்தி மற்றும் தர்மபுத்தி ஆகியோரும் காட்டை அடைந்தனர். வனதேவதையிடம் அரசர் கேள்வி கேட்டார். உடனே மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை "நான் வனதேவதை பேசுகிறேன். என் பிள்ளை குற்றம் செய்யவில்லை. தர்மபுத்தி தான் திருடினான்" என்று அசரீரி போலக் கூறினார்.
அரசர் அந்த மரபொந்திற்கு அருகே சென்று சற்று நேரம் அமைதியாக சிந்தித்தார். அரசருக்கு சந்தேகம் வந்தது. தர்மபுத்தியோ அரசரிடம் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவும், உண்மையைக் கொண்டு வெளியே கொண்டு வர ஒரு யோசனை இருப்பதாகவும் கூறினான். அரசர் அவ்வாறே செய்யுமாறு தர்மபுத்தியை அனுமதித்தார்.
தர்மபுத்தி ஓடிச் சென்று காய்ந்த சருகுகளையும் குச்சிகளையும் திரட்டி வந்து, மரத்தடியில் போட்டு தீமூட்டினான். குபுகுபுவென தீப்பற்றிக் கொண்டது. தர்மபுத்தியின் செயலைக் கண்டு மன்னர் திகைத்தார்.
சற்று நேரத்தில் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டிருந்த துஷ்டபுத்தியின் தந்தைக்கு உடல் வெந்து போனது. மறுநொடியே மரப்பொந்திலிருந்து அவர் வெளியே குதித்தார்.
"மன்னா! ஏதோ பிள்ளைப் பாசத்தால் என் மகனுக்காக நான் தான் மரப்பொந்திலிருந்து வனதேவதை போல பேசினேன்" என்று உண்மையைக் கூறிவிட்டார். காசுகளைத் திருடியதோடு அல்லாமல் நண்பன் மீது பழியும் சுமத்திய துஷ்டபுத்திக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.
நீதி: பேராசை பெருநஷ்டத்தையே தரும்.
2 comments:
உங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.
madhavan 17-12.2010
//இவரு பல விஷயங்களை சொல்லுறாரு.. உங்களுக்கு எது புடிக்குதோ அதப் படிங்க..// சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். நமது பாரம்பரிய கதைகள் அடுத்த தலைமுறையினருக்கு போய்ச் சேரவேண்டும். தெனாலி ராமன் மரியாதை ராமன் போறவர்களை பற்றி நமது சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்துச் சொன்னதற்கு நன்றிகள் மாதவன்.
Post a Comment