Saturday, May 15, 2010

ஆசையே துன்பங்களுக்குக் காரணமாம்!



சிலருக்கு சர்க்கரை வியாதி இருக்கும். ஆனால் இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை விட முடியாமல் தவிப்பார்கள். விசேஷ நாட்களில் வீட்டம்மணிகள் சக்கரை வியாதி கணவன் மார்களின் கைகளில் திருட்டுத் தனமாக புகுந்து விடும் இனிப்புப் பண்டங்களை பிடுங்கி வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். 'ஏங்க திங்காதிங்க... உங்களுக்கு சுகர்ன்னா ஏன் கேக்க மாட்றீங்க்!" என்று அன்போடு அதட்டுவார்கள்.

ரத்தக் கொதிப்பு இருக்கும் பெண்களை 'உப்புகாரத்தோடு திங்காதேன்னு சொன்னா கேக்க மாட்டேன்ற, அப்பறம் தலை சுத்துது, மயக்கம் வருதுன்னு சொன்னா நான் பாக்க மாட்டேன், சொல்லிட்டேன்?' என்று அன்புடன் எச்சரிக்கும் கணவன் மார்களையும் பார்த்திருப்போம்.

இந்த எச்சரிக்கைகளும், அடக்க முடியாத ஆசைகளும் நம்மை விட்டு நீங்குவதே இல்லை. ஏன்? மனிதனின் ஆசைகள் என்றைக்கும் குறைவதே கிடையாது. புலன்களை மனிதர்களால் அடக்க முடிவதே இல்லை. புலன்களால் எழும் காமம் கூட இயற்கையானதே ஆயினும்
அதை எப்படியேனும் தீர்த்துக்கொண்டே ஆக வேண்டும் என்ற அடக்க முடியாத உந்துதல் பல சமூகத்தவறுகளுக்கு காரணமாகிவிடுவதும் உண்டு.

ஆனால் ஆசைகளை அடக்கி வாழ்பவனே நிம்மதியான வாழ்வை பெறுவான் என்கிறார்கள் பெரியோர்கள். அதாவது ஆசையால் உண்டாகும் உந்துதலிலிருந்து விடுபட வேண்டும். சிற்றின்பங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்ற வேட்கையை, வெறியை மனதில் வைத்துக் கொள்ளாமல் வாழ வேண்டும். நிம்மதியான மன அமைதியுடனான வாழ்க்கைக்கு அதுவே வழி. சுருக்கமாகச் சொன்னால் 'டெம்ப்ட்' ஆகாதீங்க!


அட, 'டெம்ப்ட்' ஆகாதீங்கன்னு சொல்றேன்ல!


சிற்றின்ப மயக்கத்தைப் பற்றி வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்..

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

அதாவது, நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும் என்கிறார்.

மேலும்...

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை என்றும் கூறுகிறார்.

ஒரு உதாரணத்திற்கு இப்படிச் சொல்லலாம், சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புப் பொருள்கள் மீது ஆசை கொள்ளாதிருந்தால் அந்தப் பொருள்களால் உண்டாகப்போகும் துன்பத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன விஷயங்கள் நிரந்தரமான பரமாத்ம நிலையை அடைய வேண்டும் என்கிற பொருளில் சிற்றின்ப ஆசைகள் கொள்ளாதீர்கள் என்று சொல்லப்பட்டவை ஆகும்.

கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.

"அர்ஜுனா! மனிதனின் புலன்கள் அதிக சக்தி உடையவை. ஏனெனில் ஆன்ம உலகிற்காக முயற்சி செய்யும் ஞானிகளைக் கூட அவர்கள் தங்கள் புலன்களை அடக்க முயற்சி செய்தாலும், கொந்தளிக்கும் இயல்புடைய புலன்கள் அவர்களின் மனதை வலிமையாகக் கவர்ந்து கொண்டு போகின்றன.

பலம் பொருந்திய அத்தகைய புலன்கள் அனைத்தையும் நன்றாக தன் வசப்படுத்திக் கொண்டு மன உறுதியுடையவனாய் என்னிடத்தே நிலை பெற்ற மனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் யாருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவனது புத்தியே நிலையானது" - என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

ஆசைகள் அளவற்றது என்பதையும் அது எத்தனைகாலம் வாழ்ந்தாலும் தீர்க்க முடியாதது என்பதையும் யயாதி என்ற மன்னனின் கதை மூலம் நம் முன்னோர்கள் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

விருஷபர்வா அசுரகுல அரசன். அவருக்கு குல குருவாக சுக்ராச்சாரியார் இருந்தார். அரசனின் மகள் சர்மிஷ்டையும் குருவின் மகள் தேவயானியும் தோழிகளாக இருந்தார்கள். ஒரு நாள் மன்னரின் மகள் அவமதித்து விட்டதால் இந்த இரு தோழிகளுக்கும் சண்டை மூண்டு விட்டது. இதனால் சுக்கிராச்சாரியார் தனது மகளின் விருப்பத்திற்கினங்க நாட்டை விட்டு வெளியேற நினைத்தார். ஆனால் விஷயம் அறிந்து மன்னர் விருஷபர்வா, சுக்கிராச்சாரியாரின் மகளிடம் மன்னிப்பு கோரினார். இந்த அவமதிப்புக்கு பரிகாரமாக சுக்கிராச்சாரியாரின் மகள் தெய்வயானியின் விருப்பப்படி அவளின் பணிப்பெண்ணாக தன் மகளை ஒப்புக்கொடுத்து விட்டான்.

அதாவது முனிவரின் மகளுக்கு மன்னரின் மகள் பணிப்பெண். இந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் அரசன் யயாதி சுக்கிராச்சாரியாரின் மகள் தெய்வயானியை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். தெய்வயானியுடன் அவன் ஊர் திரும்பும் போது அவளுக்கு பணிப்பெண்ணாக இருந்த மன்னரின் மகள் சர்மிஷ்டையும் உடல் செல்ல வேண்டியதாகிறது.

இங்கே தான் யயாதியின் ஆசைக்குச் சோதனை தொடங்குகிறது. சர்மிஷ்டையை தன் மகள் தெய்வயானியுடன் அனுப்பும் முன் சுக்கிராச்சாரியார் யயாதியிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். “இவள் விருஷபர்வாவின் மகள். தேவயானியின் பணிப்பெண், ஆகையால் இவளையும் என் மகளுடன் அனுப்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ இவளுடன் பேசுவதோ, இவளைத் தீண்டுவதோ கூடாது” என்று எச்சரித்தார்.

ஆனால் ஆசை யாரை விட்டது. என்ன தான் பணிப்பெண்ணாக வேலை செய்தாலும் மன்னரின் மகளான சர்மிஷ்டைக்கு தானும் ராஜா யயாதியின் மனைவியாக வாழவேண்டும் என்ற ஆசை பிறந்தது. யயாதிக்கும் தெய்வயானியையும் தாண்டி சர்மிஷ்டை மீதும் ஆசை வந்தது. இருவரும் ஒருவராக கலக்க இரு மனைவியரைக் கொண்ட மன்னனாக யயாதி வாழத்துவங்கினான்.


யயாதி-சர்மிஷ்டையின் பந்தத்தை தேவயானி அறிந்தாள். தந்தையிடம் அது பற்றிக் கூறினாள். சுக்கிராச்சாரியார் கடும் கோபம் கொண்டார். யயாதியை உடனே முதுமையடையும் சாபத்தைக் கொடுத்தார். இச்சாபத்தை அடைந்த யயாதியின் கை கால்கள் நடுங்கத் தொடங்கின. தலை நரைத்தது. உடனே வயோதிகன் ஆனான் யயாதி.

யயாதி சுக்கிராச்சாரியார் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். தீராத ஆசைகள் அதிகம் கொண்ட எனக்கு மீண்டும் இளமை திரும்ப அருளுங்கள் என்றான். அதற்கு சுக்கிராச்சாரியார் ‘ஒரு வாலிபன் தனது இளமையை விரும்பி உனக்கு அளிக்க முன்வந்தால், இந்த முதுமையை அவனுடன் மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறினார்.

சுக போகங்களில் அதிகமான ஆசை கொண்ட யயாதி அசிங்கமான முதிய தோற்றத்தை மாற்றி இளமையை மீண்டும் அடைய முயன்றான். தனது மூத்த மகன் யதுவிடம் சென்று நடந்தவற்றைக் கூறி அவனது இளமையை சிறிது காலத்திற்கு அவனுக்கு அளிக்க வேண்டினான்.

அதற்கு யது ‘தந்தையே இடைக்காலத்தில் வந்த உனது மூப்பை ஏற்றுக்கொள்ளும் வல்லமை எனக்கு இல்லை’ என்று கூறி மறுத்துவிட்டான். தேவயானியின் இரண்டு குமாரர்களும் சர்மிஷ்டையின் முதல் இரண்டு மகன்களும் தங்கள் இயலாமையைத் தெரிவித்ததும், இறுதியாக தனது கடைசி மகன் பூருவை யயாதி அணுகி, அவனுடைய இளமையைச் சிறிதுகாலம் தனக்கு அளிக்க வேண்டினான்.

பூரு ‘தந்தையே, ஒருவனுக்குத் தந்தைதான் உடலை அளிக்கிறார். தந்தையின் அருளால் தனயன் உயர்ந்த சிறப்புகளை அடையக்கூடும். தந்தைக்குக் கைமாறு செய்ய மகனால் முடியுமா? தந்தையின் எண்ணத்தைக் குறிப்பால் உணர்ந்து செய்பவன் தலைமகன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று உணர்ந்து அவர் சொல்லியதை மனமுவந்து செய்து முடிப்பவன் இடைமகன்.

தந்தையின் கட்டளையை விருப்பமில்லாமல் நிறைவேற்றுபவன் கடை மகன். தந்தை சொற்படி நடக்காதவன் அழுகிய குப்பைக்குச் சமம் என்பது எனக்குத் தெரியும். எனவே தந்தையே நான் மனமுவந்து எனது இளமையை உங்களுக்கு அளித்து உங்கள் முதுமையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பணிவுடன் கூறினான்.

பூருவின் இளமையைப் பெற்றுக்கொண்ட யயாதி, சிற்றின்பத்தில் உழன்றான்.

மேன்மேலும் மகிழ்ச்சியாக ஆசைகளை அனுபவிக்கலானான். அவன் தொடர்ந்து பல நூறு ஆண்டு காலம் இளமையாகவே இருந்தான். சிற்றின்ப சுகங்களை முழுவதுமாக அனுபவித்து வந்தான். ஆனால் மாறாத இளமையும் சுகபோக வாழ்வும் பெண்ணாசையும் மீண்டும் மீண்டும் அனுபவித்து அதுவே அவனுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தியது. எத்தனைகாலம் ஆனாலும் ஆசைகள் தீர்வதே இல்லை என்பதை அவன் உணரத்தொடங்கினான். காலப் போக்கில் ஆசை ஒரு பொழுதும் அடங்காது. அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டேபோகும் என்பதை உணர்ந்தான்.

தீயில் எவ்வளவு விறகுபோட்டாலும், அத்தனையையும் அது எரித்துவிட்டு, மேலும் விறகு வேண்டி நிற்பதுபோன்று காமத்திற்கு எத்தனை தீனிபோட்டாலும் அது மேலும் மேலும் வளருமேயன்றி ஒருபொழுதும் குறையாது என்ற ஞானம் யாயதிக்கு உதித்தது.

அக்கணமே, யயாதி பூருவிடம் அவனது இளமையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு
தனது முதுமையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆட்சியைத் தன் மகன்களிடம் கொடுத்துவிட்டு, கானகம் சென்று சித்தத்தை சிவன்பால் வைத்து வீடுபேறு பெற்றான்.

எனவே, ஆசைகள் அடங்காதது என்றும் நமது மனத்தை புலன்கள் ஆட்சி செய்யாமல் காத்துக் கொண்டால் எத்தகைய சூழலிலும் ஆசையால் உண்டாகும் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பதும் யயாதியின் வாழ்க்கை மூலமாக புலனாகிறது.

அது சரி...ஆசையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ரொம்ப ஸிம்பிள், 'டெம்ப்ட்' ஆகாதீங்க.

அதுதான் முதல் படி!

7 comments:

kppradeep said...

பொன்னும் மாயை அல்ல பெண்ணும் மாயை அல்ல மனதில் இருக்கும் ஆசை தான் மாயை. தலைவர் ரஜினியின் பாபா படத்தில் வரும் இந்த வசனம்
good post.
Paramahansa Yogananda says in a lecture- Temptations are charming otherwise no body will be tempted.
i am trying still not to be tempted!!!

hayyram said...

//பொன்னும் மாயை அல்ல பெண்ணும் மாயை அல்ல மனதில் இருக்கும் ஆசை தான் மாயை. தலைவர் ரஜினியின் பாபா படத்தில் வரும் இந்த வசனம்//

ஓஹோ! ரஜினி பெரிய விஷயமெல்லாம் போகிற போக்கில் பேசிச் சென்று விடுகிறார். மேலும் பரஹம்ஸ யோகானந்தா பற்றி சொன்னதற்கும் நன்றி. அவர் யார் எங்கே இருப்பவர் என்று முடிந்தால் அடுத்த பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இன்னும் தெரிந்து கொள்கிறேன்.

//i am trying still not to be tempted!// yes. mee too. but we will try.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரதீப்.

kppradeep said...

Dear Hayyram,
That dialogue is spoken by the actor who played Subramanya Bharathi in BABA. That movie was an eye opener for me and thank Thalaivar for that.
Visit the following link for more about Paramahansa Yogananda
http://www.yssofindia.org/.
His Guru was Sri Yukteswar Giri and Yukteswar's guru was Lahari mahasaya. Now you would have guessed Sri lahari's guru- yes Mahaavataar Babaji.
Yogananda is the author of the book Autobiography of an Yogi-any one who has eyes should read this book which is available in all languages.
I have forwarded your bajagovindam's translation to all my friends. i just loved it after knowing the meaning. hope you do not mind it
You are doing wonderful job and please keep it up

hayyram said...

thanks for the info pradeep.

regards
ram

அ. நம்பி said...

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே. - திருமூலர்

hayyram said...

thanks for the lines nambi sir.

Pandi A said...

திரு ராம்,

நல்ல தலைப்பு !
சிந்திக்க கூடிய விஷயம் !
இந்த கட்டுரை உங்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது !

அதே சமயம் இது போன்ற கடினமான உதாரண(புராண ) கதைகளை தவிர்த்து மெல்லிய தற்கால உதாரணம் இன்னும் கட்டுரைக்கு வலு சேர்க்கும்!

நான் மிகவும் ரசித்து படித்தேன் !

தொடரட்டும் உங்கள் எழுத்து சேவை !

அன்புடன் - பாண்டி