Sunday, June 6, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!


வாழ்க வளமுடன்


எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி
செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற
எண்ணமே ஆகும்.

எவரும் எதுவும் பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை. இறக்கும் போது கொண்டு போஅதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.

எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளமுடன் இருக்கும். எல்லோரும் அதன் கீழ் இன்புற்று வாழலாம்.

சமுதாயத்தில் மக்கள் ஒவ்வொரு வரும் தேவை, விருப்பம், தகுதி ஆகியவற்றால் வேறுபட்ட நிலைகளில் வாழுகின்றார்கள். பலர் விருப்பத்திற்கும் தேவைக்கும் மதிப்பளித்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது பாதுகாப்பான ஒழுக்கமான உயர் முறையாகும்.

தனிமனிதன் சொத்துரிமையின் கீழ் வாழும் மக்கள் தங்கள் பொருள் வருவாய் அல்லது அறிவு, உடல் ஆற்றல்கள் இவற்றில் நூறில் ஒரு பங்கேனும் சமுதாய நலனுக்கென ஈடையாக்கி ஒதுக்கிப் பயன்படுத்துவது சமுதாயத்தைச் சிறப்பிக்கச் செய்யும் நற்தொண்டாகும்.

ஆராய்ச்சியில்லாத நம்பிக்கை தாழ்ப்பாள் இல்லாத கதவு போல ஆகும். லட்சியம் இல்லாத ஆராய்ச்சி கதவு இல்லாத வீடு போல ஆகும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் ஞானியாகத் திகழலாம்.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.




1 comment:

Paarvai said...

Where can we buy his books?