Friday, November 5, 2010

வளைகாப்பு என்னும் வரவேற்பு - 1






சிறுவனாக இருந்த போது சர்கஸ் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே யானைகளைக் கொண்டு வித்தை காண்பிக்கப்பட்டு கொண்டிருந்தது. முரட்டு யானைகள் மூன்று வட்டமாக அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. கடைசியாக சென்ற யானைக்கு முன்னும் பின்னுமாக இரண்டு தும்பிக்கை இருப்பதைக் கண்டு துணுக்குற்றேன். யானை இரண்டு தும்புக்கையும் முன்னும் புன்னுமாக ஆட்டிக்கொண்டிருந்தது. சுருட்டியும் நீட்டியும் செய்து கொண்டிருந்தது. இரண்டு தும்பிக்கைகளுமே தரையில் புறள்வதும் சுருள்வதுமாக இருந்தது. எனக்கு இவற்றை பார்க்க மிகவும் வினோதமாக இருந்தது.

இந்த யானைக்கு மட்டும் ஏன் இரண்டு தும்புக்கைகள்? இதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாத பருவம். பார்த்தவை மனதில் பதிந்தது அவ்வளவே. ஆனால் பருவம் எய்திய பின்னர் வினோதமாக நான் நினைத்திருந்தது ஒரு ஆண் யானை என்றும் அதன் முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தது ஒரு பெண் யானை என்பதையும் யூகிக்க முடிந்தது.

நான் விநோதமாக நினைக்கும் வண்ணம் யானையின் ஆண்குறி இன்னொரு துதிக்கைபோல இருந்தது யானையின் குற்றம் அல்ல. யானையின் வடிவமைப்பு அப்படி. அதை புரிந்து கொள்ளாதது எனது அறியாமையே தவிர யானை விநோதமான விலங்ககு அல்ல. ஆம், நம்மால் புதிதாகப் பார்க்கப்படும் எதுவும் வினோதமானவை என்ற கருத்து உருவாவது இயல்பு.

இதோ சில வினோதங்கள்!

பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.


இவையெல்லாம் நமக்கு வினோதங்கள். காரணம் இவற்றை நாம் புதிதாகப் பார்க்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம். ஆனால் அவைகளது வாழ்க்கை முறை இதுவே!

அது போலதான் இந்தியர்களின் பல்வேறு விதமான கலாச்சாரங்களும் வாழ்க்கை முறைகளும் வெள்ளையர்களால் வினோதமாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் புதிதாகப் பார்ப்பதால் நம்மை விநோதமான மனிதர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பின்னால் இந்த கலாச்சாரத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொண்ட பின்னர் அவற்றோடு வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டு பின்னால் அதனோடு கலந்தே போய்விடும் வெள்ளையர்களும் இருந்திருக்கிறார்கள். காரணம் நமது வாழ்க்கை முறையும் கலாச்சாரங்களும்அ அனுபவங்களால் செதுக்கப்பட்டவை. அவை வாழ்ந்து பார்த்தால் மட்டுமே புரியவரும். அதைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக நமது வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வினோதமான ஒன்றாகவே தெரியும். அது அவர்கள் தவறே அன்றி நமது வாழ்க்கை முறையில் தவறல்ல என்பதை நம்மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம். தென் தமிழகத்திலிருந்து வந்திருந்த நண்பனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்னை மாநகரத்தின் ராக்கெட் வீதிகளில் பிரயானித்துக் கொண்டிருந்தேன். இந்த வாழ்க்கை வேகத்திற்கு அவன் புதியவன். பிரதான சாலையை கடக்கும் போது இலையுதிர் சருகென ஒருவர் தவறான திசையில் வண்டியைச் செலுத்தி எனது வண்டியின் மீது மோதிவிட்டு மோதிய வேகத்தில் என்னையே திட்டவும் தொடங்கிவிட்டார். நான் பொறுமையாக "நான் எங்கே நிற்கிறேன், நீ எங்கே நிற்கிறாய் என்று பார்' யார் மீது தவறென்று உனக்கே புரியும், நீ எங்கிட்ட சண்டைக்கு வர்ரியா?" என்றவுடன் அவர் சுதாரித்துக் கொண்டு ஏதோ திட்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். ஆனால் என்னுடன் அமர்ந்திருந்த வெளியூர் நண்பனுக்கு இது வினோதமாக இருந்தது.

"அவன் தானே தப்பா வந்து முட்டினான். அவன சட்டையப் பிடிச்சி நாளு கேள்வி கேக்கறத விட்டுப்புட்டு இப்டி பொறுமையா அவனுக்குப் போயி பதில் சொல்லிக்ட்டு இருக்கியே" என்றான்.

"டேய் அதாண்டா சென்னை. இந்த ஊர் ஈசல் ட்ராஃபிக்ல ஒவ்வொருத்தன்கிட்டயும்
சண்டை போடனும்னா டெய்லி பத்து பேர்கிட்ட நின்னு சண்டை போட வேண்டியிருக்கும். அதிகபட்சம் ஒரு முறைப்பு, இல்ல ரொம்ப கோவம் வந்தா போகிற போக்கில் ஏதாவது கெட்ட வார்த்தையை திட்டிக்கிட்டே போயிடறது இந்த ஊரு ஸ்டைலு. நின்னு சண்டை போடறதுக்கு யாருக்கும் நேரம் கிடையாது. இடிச்சியா, பிரேக்கப் பிடிச்சியா, வண்டியத்திருப்பினியா, போய்க்கிட்டே இரு. இந்த ஊரு வாழ்க்கை அவ்ளோ தாண்டா! நீ டென்ஷன் ஆகாதே" ன்னு சொல்லி அவனது உணர்ச்சியை அடக்க வேண்டியதாகியது.

காரணம் அவன் சென்னை வாசிகளின் வாழ்க்கை முறையை முதன் முதலாக பார்க்கிறான். சில நடவடிக்கைகள் வினோதமாக தெரிகிறது. ஆனால் அதே நண்பனும் சென்னை வாசியாகிவிட்ட பின்னர் இந்த ஜன சமுத்திரத்தில் கரைந்து அதே 'ங்..தா' கெட்ட வார்த்தையைத் துப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போகும் வீரனாக மாறியிருந்தான். எந்த வாழ்க்கையுமே அதை வாழ்ந்து பார்க்கும் போது தான் அது வினோதமானதா அல்லது காரண காரியத்துடன் கூடியதா என்பதை யாரும் முடிவு செய்ய முடியும்.

புதிதாக திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு போகும் ஒரு பெண் அந்த வீட்டில் தனக்குப் பரிச்சயமில்லாத சில நடவடிக்கைகளைப் பார்க்கலாம். அவற்றை வினோதமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் நினைக்கலாம். அவ்வீட்டுச் சாப்பாடு முதல் சாமி கும்பிடுவது வரை பல விதமான பழக்கங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். பொதுவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லா வீடுகளிலுமே ஏதாவதொன்று இருக்கும். இதை முதன் முதலாகப் பார்க்கும் மருமகளுக்கு அவைகள் வினோதமாக இருக்கலாம். பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அவர்கள் வீட்டில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். என்றைக்காவது அந்தப் புதுப்பெண்ணை பார்க்கப்போனால் அவள் ஆரம்பத்தில் எதை வினோதமாகப் பார்த்தாளோ அந்த வாழ்க்கையோடே கலந்து போயிருப்பாள். 'என்னடீ?' என்று இழுத்தால் "இங்கே இப்படித்தான்..? என்பாள்.

ஆக ஒரு குடும்பமோ, சமூகமோ தன்னை சில காரண காரியங்களுடன் நடைமுறைகளைக் கொண்டு கட்டமைத்துக் கொள்கிறது. அதையே கலாச்சாரம், சம்பிரதாயம் என்றெல்லாம் நாம் அழைக்கிறோம. இதை வாழ்ந்து பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே அன்றி மேலோட்டமாக பார்த்து வனோதமான மூட நம்பிக்கை என்று முடிவு கட்டி கேலி பேசிவிடுவது நமக்குத்தான் இழப்பு. அப்படி ஒரு இழப்பை அடுத்த சந்ததிகள் அடைந்து விடக்கூடாது. அதனாலேயே வீடுகளில் பெரியோர்கள் இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்கிறார்கள்.

ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களோ இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தயுமே "வினோதம்" என்ற வார்த்தையால் அழைத்து அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கப் பார்க்கிறது.





சரி இப்போது தலைப்பிற்கு வருவோம். வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இந்த சம்பிரதாயம் ஏன் கடைபிடிக்கப் படுகிறது என்பதை கொஞ்சம் பார்ப்போம். நாம் பிறக்கும் போது முதல் நம்மை பல சம்பிரதாயங்கள் வரவேற்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரனகாரியத்துடனேயே செய்துவைக்கப்படுகின்றன.

நாம் பிறக்கும் முன்பிருந்தே நம்மைப் பல சம்பிரதாயங்கள் சூழ்ந்து கொள்கின்றன. நாம் பகுத்தறிவாளனா, இவற்றின் மீது நம்பிக்கை கொண்டவனா என்பதெல்லாம் நமக்கே தெரியாத வயதில் நம்மை சமூகத்திற்கு முறையாக வரவேற்கவும் அறிமுகம் செய்யவும் கொண்டாடப்படும் சடங்குகள் அவை. அதன் பெயர் வளைகாப்பு.

கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!





சடங்கு தொடரும்...

.

5 comments:

Madhavan Srinivasagopalan said...

நல்ல விஷயம் (வழக்கம்போல) சொல்லும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
வலை காப்பு முதல் பிரசவத்திற்கு மட்டுமே செய்வது எதற்காக ?
நன்றி.

hayyram said...

நன்றி மாதவன். இரண்டாவது பிரவசத்திற்கு முன்பும் வளைகாப்பு செய்வார்கள். ஆனால் உறவுகள் எல்லாவரையும் கூப்பிட்டு பெரிதாகச் செய்யாமல் வீட்டில் இருக்கும் மாமியார், அம்மா அல்லது நாத்தனார் யாராவது கர்பினிப்பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டதினத்தில் வளையல் அடுக்கி சாமி கும்பிடுவார்கள். அது வீட்டுக்குள்ளேயே சிம்பிளாக முடிந்து விடும். அதனால் இது வெளியே தெரிவதில்லை. மேலும் நாமே சாதாரணமாக செய்து கொள்ள வேண்டிய விஷயம் தானே...என்ற அலட்சியத்தாலும் இரண்டாவது மூன்றாவது பிரசவங்கள் போதெல்லாம் இந்த விஷயத்தில் பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. எத்தனாவது குழந்தையானாலும் அதற்கு இந்த உலகம் புது வரவு தானே! அதனால் அந்த குழந்தையையும் வரவேற்பது நன்மை பயக்கும் செயலே ஆகும். எட்டாவது குழந்தையாக வந்த கண்ணன் தானே கீதை சொன்னான்! தொடர்ந்து சடங்குகளின் அர்தங்களைப் புரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டியது நம் மக்களின் கையில் உள்ளது. அல்லது நம் பாரம்பரிய சடங்கை வெள்ளைக்காரனுக்கு காசு கொடுத்துவிட்டு செய்ய வேண்டி வரும், வேறு பெயரில்...

Madhavan Srinivasagopalan said...

ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம். நண்பரே..
தொடர்ந்து எழுதுங்கள்..
ஆனால் ஒரே சமயத்தில் அதிக பதிவுகளை இடுவது தவிர்க்கவேண்டும் என நான் விழைகிறேன்..
அப்பப்ப பதிவு போடுங்க.. (வாரத்துக்கு ஒண்ணு ரென்டு)..
அப்பத்தான் எல்லாத்தையும் படிக்க முடியும்..
ஒரே சமயத்துல ௧௦ பதிவு வந்த.. எல்லாத்தையும் படிக்க முடியுரதில்லா..
அப்புறம் மறந்து போயிடுது..

hayyram said...

நன்றி நண்பரே! அலுவலக வேலை மண்டை காய்வதால் நானே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தான் இடுகிறேன். சில நேரங்களில் நாளைக்கு என்று ஒத்தி வைத்தால் ஒருவாரம் கூட ஓடிவிடுகிறது. எனவே நேரம் இருக்கும் போதே சேர்ந்தார்போல் இரண்டு இடுக்கைகள் போடுவது தவிர்க்க முடியாமல் போகிறது. எனினும் பொறுமையாக படித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி

krishna said...

வளைகாப்பு என்பது ஏழாவது மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா?