Showing posts with label ஸ்ரீ க்ருஷ்ணர். Show all posts
Showing posts with label ஸ்ரீ க்ருஷ்ணர். Show all posts

Thursday, October 18, 2012

பிறவிக் கடலை கடக்க உடலே ஓடம்!



உத்தவர் கேட்கிறார்.."பரந்தாமா! முக்தியை விரும்புகிறவன் உம்மை எப்படி எந்த ரூபத்தில் தியானிக்க வேண்டும்?

அந்தத் தியான முறையை எனக்கு உபதேசித்தருள வேண்டும்" என்றார்.

பகவான் கூறலானார்.. ப்ரிய உத்தவ! சமமான் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கைகளள மடி மீது வைத்து புருவ மத்தியில் பார்வையை நிலை நஅட்டி, ப்ராணாயாமம் ச்எய்து ப்இரணவ சக்தியைப் புருவ மத்தியில் நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பிரனவ ஜபத்துடன் இராணாயாமத்தைப் பத்து முறை செய்து வந்தால் ஒரு மாத காலத்தில் மனம் அடங்கி சுவாசத்தை வெற்றி கொள்ளலாம். அப்பொழுது எட்டு இதழ்களும், கர்ணிகையும் கொண்ட இதயத் தாமரையை மேல் நோக்கி மலர்ந்திருப்பதாக பாவித்து அங்கே சூரியன் சந்திரன், அக்னி இவைகளை முறையாகத் தியானித்து, அக்னியின் நடுவே தியானத்திற்கு உகந்ததான எனது திவ்ய மங்கள வடிவத்தை நிணைக்க வேண்டும்.

சியாமள நிற மேனியில் பீதாம்பரம் தரித்து , சதுர்புஜங்களில் சங்கு , சக்ர , கதா பத்மங்களுடன் விளங்குகின்றதும், மகர குண்டலங்களுடன் மங்களமான சாந்தமான பரிசுத்தமான புன்னகை தவழுகின்ற ஸர்வாங்க சுந்தரமான மனதிற்கினியதாக விளங்குகின்ற எனது திவ்ய ரூபத்தை, எனது எல்லா அவயங்களிலும் தனித்தனியே முறையாக மனத்தை நிலை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முக மண்டலத்தைத் தியானிக்க வேண்டும். சித்தத்தை வேறு எதிலும் செலுத்தக் கூடாது"

"உத்தவ! மேலும் கேள்!  என்னையே இடைவிடாமல் பக்தியுடன் தியானிப்பவன் எனது பாவனையைப் பெறுவதால், அவனுடைய கட்டளைகள் வீணாகப் போவதில்லை. தோல்வியும் அடைய மாட்டான். அந்தப் புருஷனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது.

இப்பிறவிக் கடலைக் கடப்பதற்குச் சிறந்த ஓடமாக இருப்பது மனித சரீரமே ஆகும். அதைச் செலுத்தும் படகோட்டியாக சிறந்த குருவும், எனது அருள் என்கிற காற்றும் இருக்கும் போதே எவன் என்னைத் தியானித்துப் பிறவிக் கடலைக் கடக்க முயற்சிக்கவில்லையோ அவன் தனது ஆத்மாவையே கொன்றவனாகிறான்" என்றார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

- ஸ்ரீமத் பாகவதம்

Monday, June 4, 2012

குணங்களுக்கும் மேலே என்னைப் பார்!




 ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு குணங்களின் தன்மை பற்றி இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

குந்தியின் மகனே! உலகில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் இயற்கைதான் பிறப்பிடம். நான் தான் விதை கொடுக்கும் தந்தை!


பெருந்தோளாய்! இயற்கையிலிருந்து தோன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் 
குணங்கள் உடலில் வாசம் செய்யும் உயிரை உடலோடு பிணைக்கின்றன.

பாபமற்றவனே! இவற்றுள் களங்கம் இல்லாத சத்வம் எனப்படுவது ஒளி பொருந்தியது.
துன்பம் கொடுக்காதது. இன்பத்தையும், ஞானத்தையும் உண்டாக்கும் பற்றை அது வளர்க்கிறது.

குந்தியின் மகனே! ரஜஸ் என்ற ரஜோ குணம் ஆசை வடிவுடையும்து, அது காம வேட்கையையும்பற்றுதலையும் உண்டுபண்ணும் என்பதை அறிந்து கொள். அது செயலின் மேல் பற்றுதலை ஏற்படுத்தி, உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! தமோ குணமோ, அறியாமையில் பிறந்தது. அது உயிர்களை எல்லாம் 
மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. அசட்டை, சோம்பல், தூக்கம் ஆகிய இயல்புகளால் உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! சத்வம் சுகத்திலும், ரஜஸ் கர்மத்திலும், தமஸ் அரிவை மறைத்து கவனமில்லாத தன்மையிலும் சேர்த்து விடுகிறது.

அர்ஜுனா! சத்வம், ரஜசையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்வத்தையும், தமஸையும் அடக்கி ஆள்கிறது. அவ்வாறே தமஸ், சத்வத்தையும், ரஜஸையும் அடக்குகிறது. இந்த உடலின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

சத்துவ குணம் கொண்டவர்கள் மேன்மை பெறுகிறார்கள். ரஜோ குணம் படைத்தவர்கள்
இடையில் இருக்கிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள், இழிவான குணம் உள்ள காரணத்தால் தாழ்வடைகிறார்கள். 

அர்ஜுனா! ஒருவன் எப்பொழுது குணங்களைத் தவிர செயல்படுவோன் எவரையும் காணாமல்குணங்களுக்கு மேலான பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


Sunday, May 20, 2012

எந்த தேவதையைத் தொழுதாலும் என்னையே வழிபடுகிறாய்!




ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன் வடிவத்தின் தன்மையை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

அர்ஜுனா! மகாத்மாக்கள் என்னுடைய தெய்வீகத் தன்மை பெற்று, உயிர்களுக்கு என்றும் அழியாத பிறப்பிடம் நான் என்பதை அறிந்து, என்னைத் தவிர வேறு எங்கும் மனதைச் செலுத்தாது என்னை வழிபடுகின்றனர்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் என்னை வணங்குபவராயும், நித்திய யோகிகள் என்னை வழிபடுகிறார்கள்.

ஞான வேள்வியால் வழிபடும் மற்றவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களிலும் வணங்குகிறார்கள்.

தனஞ்ஜெய! நானே கிரது என்ற வைதீக கர்மம். நானே வேள்வி. மருந்துப் பூண்டுகளும், எல்லா வகையான தாவரங்களும் நான்; மந்திரமாவது நான். வேள்வியில் அளிக்கப்படும் நெய்யும் நானே! தீயும் நா; வேள்வி வேட்டலும் நானே!

நானே இந்த உலகத்தின் தாய், தந்தை , பாட்டன். கர்ம பலனைக் கொடுப்பவன் மற்றும் அறிய வேண்டிய பொருள், தூய்மையாக்குவோன், ஓங்காரம், ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்கள் ஆகியவைகளும் நானே.

அடைக்கலம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம் நண்பன், தோற்றம், அழிவு, ஆதாரம், களஞ்சியம், அழியாவித்து ஆகிய அனைத்தும் நானே!

வேறு எதைப்பற்றிய எண்ணமும் இல்லாதவர்களாய், மனதை ஒரு முகப்படுத்தி என்னையே வழிபடுகிறவர்கள் வேண்டியதைப் பெறுதலையும், பெற்றதைக் காப்பாற்றுதலையும் நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

குந்தியின் மைந்தா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வழிபடும்போது, அவர்களும் அறியாமையோடு என்னையே வணங்குகிறார்கள்!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



Saturday, February 11, 2012

நம்மோடு பேசும் மழை!



அது ஒரு அனுபவம்!

ஆம் சுவையான அனுபவம்! அனுபவங்கள் தான் நம்மைச் செதுக்கும் சிற்பி! அனுபவங்கள் உளியைப் போன்றது. உளி தரமாக இருந்தால் செதுக்கப்படும் சிற்பம் சிலையாகும். உளி ஒழுங்கற்றிருந்தால் கல் தூளாகுமே ஒழிய சிற்பமாகாது. நல்லனுபவங்கள் நம்மை சிற்பமாக செதுக்குகின்றன.

கேரளாவில் பாலக்காடு அருகே நெல்லியம்பதி என்று ஓரிடம் இருக்கிறது. மலைகளினூடே செல்லும் சாலைகள். சாலையைக் குறுக்கே கடந்து செல்லும் அழகான சிறிய நீர்வீழ்ச்சிகள். நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் உயர்ந்த மரங்கள். பச்சைப் பசேலெனத் தேயிலைத் தோட்டங்கள் என்று அற்புதமான மலையுச்சி அது.


அந்தப்பகுதி மக்களின் அழகான ஊட்டி. அன்றொரு ஓணம் பண்டிகையின் போது அந்த இடம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. வளைந்து வளைந்து செல்லும் அருமையான
மலைப்பாதையில் மேலே செல்லச்செல்ல அற்புதமான அனுபவம். ஆம், மலை உச்சியின் மேலேயே சேட்டிலைட்டுக்குப் போட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டம் சேட்டிலைட்டுகள் பார்த்து பொறாமைப்படும் படியாக மலைச்சாலைகளில் இறங்கி  நடமாடத்துவங்கியது.


எதிரே குறிப்பிட்ட தூரத்திற்கு என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்ற எனது தலையில் தண்ணீர்படலம்! நான் மேகங்களை அனைத்துக் கொண்டு உறவாடினேன். மெல்லிய காற்று சில்லென்று என்னை குளுமைப்படுத்தியது. மேகங்களோடு சேர்ந்து காற்றும் என்னை வரவேற்று, ஒன்றாய்க் கூடித் தழுவிக் கொண்டதாகவே மகிழ்ந்தேன். 

ஆம், நாம் நேசித்தால் அவைகள் நம்மோடு உறவாடும். இயற்கைக்கும் உணச்சிகள் உண்டு. அவைகள் நம்முடன் பேசும். கட்டிக்கொள்ளும். தழுவும். தாலாட்டுப் பாடி உறங்கச்செய்யும். சப்தம் போட்டு எழுப்பும்! அடித்துத் துறத்தும். எல்லாவற்றிர்கும் காரணங்கள் உண்டு. அதனை உணர்ந்து கொள்ளும் பக்குவத்திலிருந்து நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். இயற்க்கையுடனான உணர்ச்சி ததும்பும் உறவாடலை நாம் மறந்து விட்டோம். அவற்றை அக்ரினையாகப் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம்.

ஆனால் இயற்கை என்பது, தாய், தந்தை, சகோதரன், நண்பன், தெய்வம், குறிப்பிட்டுச் சொன்னால் இவை எல்லாமும் நானே என்று கூறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

உச்சிமலை சென்று செங்குத்துப் பாறையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போதும் அந்த மேகங்கள் என்னை விடவில்லை. முகத்தோடு ஒட்டி உரசி விளையாடிச் சென்றது. காற்றில் அவற்றை உறிஞ்சிக் குடித்தேன். கைகளால் தொட்டு மகிழ்ந்தேன். ஒரு அடி எடுத்து வைத்தால் அதள பாதாளம். ஆனால் பயம் வரவில்லை. அவற்றை நேசித்தேன்.

பண்டிகை நாளென்பதால் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ராஜாக்களாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் என் நண்பர்கள்! சின்னதும் பெரிதுமாக பல வகையில் குரங்குகள்.

சிறுவயதில் 'கபீஷ்' என்ற பெயரில் சித்திரக்கதையில் படித்துப் பாசத்தின்பாற்பட்ட குரங்குகள் என்றைக்கும் என் குழந்தைப் பருவ நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

உச்சிப்பாறையின் உச்சியில் இவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்றெண்ணி அவர்கள் அருகே வந்தனர். என் பைகளின் என்ன வென்று நோட்டம் போட்டனர். முன்னே வந்து என் முகத்தைப் எட்டிப் பார்த்துவிட்டு சுற்றி சுற்றி வட்டமிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றுவிட்டனர்.

அந்தக் 'கபீஷ்' கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஆர்வம், எத்தனை உற்சாகம், பூமிப்பந்தின் மொத்த ராஜ்ஜியமும் தமக்கே என்கிற ஆனந்தம். அவைகளை அன்புடன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.


பல மணி நேரம் அந்த மலை உச்சியின் அமைதியை ரசித்து விட்டு கிளம்பலானேன். மிக அருகே இருந்தமேகம் இன்னும் குளிர்ந்து மழையாகப் பெய்தது. நனைந்தேன். அந்த ஈரத்தை ரசித்தேன். புறப்படும் நேரத்தில் இன்னும் நெருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டதாக மகிழ்ந்தேன். 

வானத்தைப் பார்த்து நாக்கை நீட்டி மழை நீரை வாஞ்சையுடன் குடித்தேன். என்னைத் தழுவிக்கொண்ட உன்னோடு நான்  என்றும் ஜீவித்திருப்பேன் என்று மனதாரக் கூறிவிட்டு புறப்பட்டேன். மழையோடு காற்றும் கைகோர்த்துக் கொள்ள குளிரில் பற்கள் டைப்படித்தன. வீடு போகும் வரை என்னை மறக்காதே என்று காற்று என்னைக் குளிர்வித்தனுப்பியதாக பூரித்தேன். வீடு சென்றேன். வீடு செல்லும் வரை என்மீது விழுந்த மழையின் துளிகளைத் துடைக்கவில்லை.



அன்று ஒரு வரண்ட நாள். வெறித்த வெள்ளை வானம் சூடாக சுட்டெரித்த தினம்.

இரவு கண்ணயர்ந்த நேரம். வாசலில் அழைப்புமணி சத்தம். வெளி வேலையாகச் சென்ற என் சகோதரர் இரவு தாமதமாக வீடு வந்தார். கதவைத் திறந்து விட்டு உள்ளே சென்று மீண்டும் படுத்துக் கொண்டேன்.

அயர்ந்த உறக்கத்தில் அப்படி ஒரு சப்தம். பலமான காற்று! ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன. ஜன்னலுக்கு வெளியே இருந்த தகடுகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்களில் தண்ணீர் தடதடவென விழும் சப்தம். ஆம், திடீரென வெளியே மழை!

விழிப்பு வந்த நிலையில் கூடத்திற்குவந்தேன். அதிர்ச்சி காத்திருந்தது. வாசற்கதவு பெரிதாகத் திறந்திருந்தது. கூடத்திற்கு வெளியே சென்று பார்த்தால் வாசலில் இரும்புக்கதவு முழுதுமாகத் திறந்திருந்தது. மணியைப்பார்த்தேன். சரியாக ஒன்று! நள்ளிரவில் கதவு திறந்து கிடக்க ஒரு வித பதற்றத்துடன் வீடு முழுவதும் அவசர அவசரமாக சுற்றிப் பார்த்தேன். மழை நீர் விழும் சப்தம் வெளியே இன்னும் கேட்கிறது.

வீட்டுக்குள் யாரும் இல்லை. அரையில் சகோதரர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் பொறி தட்டியது. அவர் வரும்போது கதைவைத் திறந்துவிட்ட நான் பூட்டாமல் உள்ளே சென்று விட்டேன். நான் பூட்டுவேன் என்றெண்ணி சகோதரரும் போய் தூங்கிவிட்டார். ஆனால் கதவு திறந்தபடியே இருந்திருக்கிறது. முன்னிரவு தாண்டி நள்ளிரவும்!

அவசரமாக ஓடிச்சென்று வாசற்கதவைப் பூட்டி, கூடத்தின் கதவையும் நன்றாகப் பூட்டிவிட்டு உள்ளே சென்றேன். அப்படா என மனது சமாதானம் அடைந்தது.

பூட்டிய வீட்டிலேயே ஆட்டயைப் போடுபவர்கள் ரோட்டுமேலிருக்கும் ஒரு வீடு, வாசல் திறந்து வா வா எனக் கூப்பிட்டால்...!

நல்ல வேளை அப்படி ஏதும் நடப்பதற்குள் மழை வந்து எழுப்பியது என்றெண்ணினேன்.

ஆமாம், மழை எங்கே?

வெளியே இப்போது தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

காற்றில்லை! முழுவதும் அமைதியான சூழல்! ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்!

அதே வரண்ட வானம்!

யார் என்னை எல்லாவற்றிலும் காண்கிறானோ, என்னிடம் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவன் என் பார்வையிலிருந்து மறைவதில்லை. நானும் அவனது பார்வையிலிருந்து மறைவதில்லை! 

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்!

Friday, April 15, 2011

கீதோபதேசம் - பிரபஞ்சத்தின் பிரயாணம்!






அர்ஜுனா! எனது இவ்வுடலில், ப்ரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் ஒருங்கிணைந்திருப்பதைப் பார். இதைத்தவிர மேலும் பார்க்க விரும்பும் வேரு பலவற்றையும் இப்போது பார்.


ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."


ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.


திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.


அப்போது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவாதி தேவனின் அந்த உடலில் ஒன்றுகூடி இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.


பிறகு அர்ஜுனன் பெருவியப்புடன் ரோமம் சிலிர்க்க குனிந்த தலையுடனும் கூப்பிய கரங்களுடனும் இறைவனை வணங்கிக் கூறலானான்.


"மகாத்மாவே! விண்ணுலகுக்கும், மண்ணுலகுக்கும் இடையே உள்ள வெளியும், மற்ற திசைகள் யாவும் உன்னாலேயே நிரப்பப்ட்டுள்ளன. உன்னுடைய அற்புதமான இந்த உக்கிர வடிவத்தினைக் கண்டு மூன்று உலகங்களும் அச்சத்தினால் நடுங்குகின்றன.


இந்த வானவர்கள் எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர். சிலர் அச்சத்தினால் உன்னைக் கைகூப்பி வனங்கி புகழ்கின்றனர். மகரிஷிகள், சித்தர்கள் கூட்டத்தினர் வாழ்க என்று சொல்லிக் கொண்டு உன் புகழைப் போற்றிப் பாடுகின்றனர்.


உருத்திரர்கள், ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினி தேவர்கள், மருத்துக்கள், பித்ரு தேவர்கள், கந்தர்வகள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் ஆகியோர் கூடி உன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், அநேக கைகள், துடைகள், பாதங்கள், பலவயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உன்னுடைய பெரிய உருவத்தைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.


பயங்கரமான கோரப்பற்களுடைய உமது வாய்க்குள் பரபரப்புடன் வேகமாக நுழைகிறார்கள். சிலர் பொடிப்பட்ட தலைகளோடு உனது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். 


வெள்ளப் பெருக்கோடு கடலை நோக்கி விரைந்து பாய்ந்தோடும் ஆறுகளைப் போல் இப்போர் வீரர்கள் தீப்பிழம்புகளை வெளியிட்டுக் கொண்டுள்ள உமது வாய்களுக்குள் புகுகின்றனர்.


அழிவதற்காக விளக்கை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சிகளைப் போல், இந்த மக்கள் உன்னுடைய வாய்களுக்குள் நாசத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கிறார்கள்.



வெம்மையான கதிர்களைக் கொண்ட வாய்களால் உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்! 


விஷ்ணுவே! உன்னிடமிருந்து வெளிவரும் வெம்மையான கதிர்கள் உலகம் முழுதும் நிறைந்து சுடுகின்றன.


பயங்கர தோற்றத்தை உடைய மூர்த்தியாக நீ யார் என்று எனக்குக் கூறு. உன்னை வனங்குகிறேன்!. 


தேவர் தலைவா! அருள் புரிவாயாக! முதல்வனாகிய உன்னை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உன் செயல் எனக்கு விளங்கவில்லை." என்கிறான் அர்ஜுனன்.


அர்ஜுனனின் மேற்கண்ட இந்த வர்ணனைகள் யாவும் பரமாத்மா என்றழைக்கப்படும் அந்த மகா சக்தியை கண்ணாடி போல காட்டுவதாக இருக்கிறது.
.
"உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்! " என்கிற இந்த வரிகள் பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணிலடங்கா சூரியன்களும் நட்சத்திரங்களும், பூமிகளும் எங்கோ இருக்கும் ஒரு மையப்பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக அறிவியலாளர்களின் கூற்றை அப்படியே மெய்ப்பிப்பதாக இருக்கிறது. 


வின்வெளி பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கேலக்ஸி என்றழைக்கப்படும் நட்சத்திர கூட்டம் பற்றியும் அவைகள் வின்வெளியில் ஏதோ ஒரு இலக்கை நோக்கி மிகப்பெரிய ஈர்ப்பு ஒன்றின் காரணமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் தெரிவிக்கிறார்கள். 


பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ஒருவகை ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குழுக்களைப் போன்று வட்டமிட்டு வருகின்றன. இப்படி குழு குழுவாக பலகோடிக்கணக்காண குழுக்கள் விண்வெளியில் கொத்துக்கொத்தாக இருக்கின்றன. இவ்வாறான குழுக்களை அண்டம் (கேலக்ஸி-Galaxy) என்று குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஆயிரம் கோடி அண்டங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.


நமது சூரியக்குடும்பம் இருப்பது பால்வழி அண்டத்தில் (மில்கி வே கேலக்ஸீ). இந்த அண்டத்தில் கோடிக்கணக்காண நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் இதில் ஒரு நட்சத்திரம் போன்றதே! 


வானத்தை நாம் நிமிர்ந்து பார்க்கும் போது நமக்கு தெரிவது ஒரு சிறு பகுதி தான். அப்படியெனில் இந்த அண்டம் எவ்வளவு பெரியது, அதேபோல கோடிக்கணக்காண அண்டங்கள் பிரபஞ்சத்தில் இருந்தால் இந்த பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை கற்பனை கூட செய்ய முடியாது.


ஆனால் கற்பனைக்கெட்டாத இத்தனை அண்டங்களையும் ஒரு மையப்பகுதி மகாஈர்ப்பின் மூலமாக உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஈர்ப்பு விசைக்கு ஈடுகொடுத்து அத்தனை மகா அண்டங்களும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


உதாரணமாக நமது மில்கிவே கேலக்ஸி வினாடிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு திசை நோக்கி நகர்வதாக கூறுகிறார்கள். அதாவது இந்த கேலக்ஸியில் அடங்கிய பூமியில் இருக்கும் நாம் வினாடிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் எங்கோ ஓரிடத்திற்கு இந்த வினாடி சென்று கொண்டே இருக்கிறோம். அதை நாம் உணர்வதில்லை. அவ்வளவுதான். 


இப்படி பிரபஞ்சத்தின் ஈர்ப்பு இந்த அண்டங்களையெல்லாம் அப்படியே விழுங்கிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் தனது மகா பெரிய உருவமாகிய விஸ்வரூப தரிசனத்தின் மூலம் கண்ணாடி போல காட்டுகிறார். 


"உலகு அனைத்தையும் விழுங்கி நாவால் நக்கி ருசி பார்க்கின்றீர்!" என்று அர்ஜுனன் அரண்டு போய் வியந்து கூறுவதும் இந்த பிரபஞ்சத்தில் மகா அண்டங்கள் ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துதான். 


இப்படிப்பட்ட மகா பிரபஞ்சத்தையும் அதன் நகர்ந்து போவதையும் நம் சாதாரணக்கண்களால் பார்க்க முடியுமா? அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் "இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன்" என்று கூறி அவனது ஞானக்கண்ணால் காணச் செய்கிறார். உலகத்தின் எந்த விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடித்திராத அப்படி ஒரு 'லென்ஸை' ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கொடுத்து பார்க்கச் செய்தது எத்தனை பெரிய பேறு!


ஆக இந்த பிரபஞ்சத்தின் ஆதார சக்தியான மகாசக்தியே இறைவன் என்பதையும் பிரபஞ்சத்தின் சக்தியோடு ஒன்றிப்போதலே பரமாத்மாவோடு கலத்தல் என்பதையும் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணர். அந்த மகா சக்தியை தியானிப்போமாக!


.

Tuesday, February 15, 2011

கீதோபதேசம் - சம்பவாமி யுகே யுகே!





அர்ஜுனன் சொன்னது:  

பகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.  

ஸ்ரீ கிருஷ்னர் உபதேசம்:  

அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.  

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.  

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.  

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.  

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.  

காமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.  

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



.

Tuesday, November 23, 2010

கீதோபதேசம் - உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!


அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.

அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.

அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.





.

Monday, September 6, 2010

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 2





சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:|

"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"

தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்||

"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களுமே அவர்களது வகையை
நிர்ணயிக்கிறது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?

பொதுவாக மனிதர்கள் எதையுமே தனதாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவன். மனிதன் மட்டுமல்ல
ஏறக்குறைய அனைத்து விலங்குகளுமே தனது குட்டி, தனது இருப்பிடம், தனது வாழ்வெல்லை
என தனக்கு என்று எதையும் பகுத்து வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவை. இதனால்
பொதுவுடைமையாக எந்த ஒரு கருத்தையும் நீண்ட நாளைக்கு வைத்துக் கொள்ள முடியாது.

எல்லோருக்கும் பொது என்ற கம்யூனிஸமும் உடைந்து தூளாகிப்போவதும் மனிதர்களின்
இந்தப்போக்கினால் தான் என்பது உடைந்து போன கம்யூனிச நாடுகளே சாட்சி!

உதாரணமாக அரசு ஆட்சி என்பது அதிகாரக்கையிருப்பிற்கும், சுக போகத்தை அனுபவிப்பதற்கும்
அல்ல. சுயநலமில்லாத சேவையாக மக்களுக்கான தொண்டாகவே ஆட்சியை நடத்த வேண்டும்.
ஆனால் இந்த பரந்த பொதுவுடைமை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி அமைப்பு
அதை அனுபவித்தவர்களால் தமதாக்கப்பட்டு அதிகாரமும் அரசின் கஜானாவும் ஆள்பவனுக்குச்
சொந்தம் என்று மாறிவிடுகிறது. ஆள்பவன் தன்னை ஆண்டவன் என்றே அழைத்துக் கொள்ளத்
துவங்குகிறான். அவனது சந்ததிகளுக்கும் அத்தகைய சுகபோகங்களை கொடுக்கவும் அவர்கள் அதை விட்டுவிடக்கூடாது எனவும்
விரும்புகிறான். இவ்வாறு மனிதர்கள் எதையும் தமதாக்கிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக
இருப்பதால் பொதுவான எதையும் தனதாக்கிக் கொண்டு காலப்போக்கில் அதையே தனது
அடையாளமாகக் கொண்டு விடுகிறான். அடுத்த சந்ததியினருக்கும் அதையே உரிமையாக்குகிறான்.

கீதையில் பிறப்பு எதுவாகிலும் ஒருவணது குணத்தையும் செயல்களையும் கொண்டே மனிதர்கள்
இன்ன வகையினர் என பிரிக்கப்படுகிறான். ஆனால் நாளடைவில் ஒருவன் தான் எந்த
பிரிவைச் சேர்ந்தவன் என்பதே தனது அடையாளமாகக் கொள்கிறான் என வைத்துக்கொள்வோம்,
அவனுக்கு குழு மனப்பான்மை உருவாகிறது. ஒரே வகையினர் ஒரு குழுவாக புழங்கத் துவங்குகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வர்ணத்தவர்களும் குழுவினர்கள் ஆயினர். பின்னர் குழுவினர்களுக்குள்
பிரிவுகள் அவர்களுக்குள் உட்பிரிவுகள் என்று உருவாகிறது. அவைகளே இன்றைக்கு
ஜாதிகள் என அடையாளம் காணப்படுகின்றது. குணங்களாக வகைப்படுத்தப்பட்டவை
காலப்போக்கில் ஜாதிகள் என்ற பெயருடன் குழுக்களானது பிரபஞ்ச இயக்கவிய லின் ஒரு
பன்பேயன்றி அது தனிப்பட்ட கடவுளால் அல்லது மதத்தினரால் பிரிக்கப்படுவதில்லை. அவைகள்
தானே உருவாகின்றனவே அன்றி உருவாக்கப்படுபவை அல்ல.

உதாரணமாக நிறமற்ற கடல் நீர் பரவி ஓடி பல இடங்களில் சேரும் போது அவை நிறைந்திருக்கும் மண்ணுக்கேற்ற
நிறத்தை பெறுகிறது. நீல நிறமாக, செந்நிறமாக, பச்சை நிறமாக கடல் தோற்றமளிக்கும். தாம் கொண்ட மண்ணின் நிறத்தை தாங்கி
நிற்கும் நீரை நீல ஜாதி நீர், சிவப்பு ஜாதி, நீர், பச்சை ஜாதி நீர் என்று அழைத்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் மனிதர்கள் வகைகளாகி வகைகள் குழுக்களாகி, குழுக்கள் ஜாதிகளாகி இருக்கின்றன.
எப்படி பரந்து விரியும் கடல் நீர் வெவ்வேறு நிறத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாதோ அதேபோலவே
மனிதர்களுக்குள் குழு உருவாவதையும் தவிர்க்க முடியாது. அவைகள் ஜாதிகளாவதும் காலத்தால் நிகழ்வதே
அன்றி தனி மனிதர்களாலோ அல்லது குழுக்களாலோ அல்ல! சரி அவை நிகழ்வதெப்படி?




உதாரணமாக குணத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை நல்லவன் , கெட்டவன் என்று பிரித்துக்
கூறுகிறோம். இவையெல்லாம் நல்ல குணங்கள்,
இவையெல்லாம் கெட்ட குணங்கள் என்று பிரித்து
நல்ல குணம் கொண்டவர்களை நல்லவர்கள் என்றும் கெட்ட குணம் கொண்டவர்களை
கெட்டவர்கள் என்றும் கூறுவதில்லையா! அப்படி ஒரு வகைப்படுத்தல் தான் வர்ணங்கள்.
பின்னாளில் குணங்களின் அடிப்படையில் நல்லவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
அதையே தங்கள் குழு அடையாளமாகக் கொள்கிறார்கள். தங்களை
நல்லவன் ஜாதி என்றும் கெட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை கெட்டவன் ஜாதி
என்றும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிறந்தவர்கள் அந்த ஜாதிக்காரர்கள்
என்றும்
அழைத்து அதையே வழக்கமாக்கிக் கொண்டால் அது ஜாதியாகி விடுகிறது. பிறகு
அதற்குள்ளேயே பிரிவுகளும் வந்து ஏற்றத்தாழ்வுகளும் வந்துவிடுகிறது.

நல்லவன் ஜாதிக்காரன் அதே ஜாதியில் திருமணம் செய்வார்கள். கெட்டவன் ஜாதிக்காரனும் அவ்வாறே!
உதாரனமாக டாக்டர் கம்யூனிட்டி, வக்கீல் கம்யூனிட்டி, சார்டர்ட் அக்கவுன்டன்ட் கம்யூனிட்டி, தொழிலாளர் கம்யூனிட்டி
என்று குழுக்கள் உருவாகிறது. டாக்டர் குழுவைச் சேர்ந்தவர்கள் டாக்டரையே மனமுடிக்க விரும்புவார்கள், வக்கீல் வக்கீலையும்
சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் அதே குழுவிலும் தேடுவார்களே அதுபோல.

இவைகளில் ஏற்றத்தாவு எப்படி உண்டாகிறது. வக்கீல் குழுவிற்கும், போலீஸ் குழுவிற்கும் ஏன் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வு இருந்ததில்லையே? காலப்போக்கில் குழுக்களுக்கிடையே
உண்டாகும் முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகின்றனவே அன்றி இவற்றிர்கு தனிப்பட்டவர்கள் பொறுப்பாக முடியாது.
முரன்பட்ட எந்தக் குழுவிற்கும் ஏதாவது அடிப்படை ஞாயம் இருக்கலாம். ஆனால் அவைகள் உருவாவதும் களையப்படுவதும்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்படித்தான் மக்களிடம் ஜாதிகள் உருவாகின. நல்லவன் ஜாதியில் பிறந்தவன் கெட்ட குணங்களோடும், கெட்டவன் ஜாதியில் பிறந்தவன்
நல்ல குணங்களோடும் இருக்க முடியும்! ஏனெனில் குணங்களின் வகைப் பெயர் தங்கி விட்டதே தவிற குணத்தால்
மனிதன் வகைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே அடிப்படையில் ஜாதிகள் கிடையாது. பின்னால் குழுமயமாக்கப்பட்டது.

ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் வேதத்தில் ஜாதி சொல்லியிருக்கிறது என்று இந்து தர்மத்தையே பழிக்கிறார்கள். ஞான
சூனியத்தின் அடையாளம்.

சரி, இவை எல்லாவற்றிர்கும் மேலாக ஜாதிகளை உண்டாக்கியதே பிராமணன் தான்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சட்டத்தை வகுத்தவனும் பிராமணனே என்றும்
எந்த ஆதாரமும் இல்லாமல் வாழும் மக்களுக்கிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து
வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அதை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் குறைந்த பட்சம்
இந்து தர்மத்தை விளங்கிக்கொள்ளும் புத்தகங்களைக் கூட புரட்டிப் பார்க்காமல்
அவற்றை அப்படியே நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டங்களும் இருக்கின்றன.

தர்மத்தின் படி பார்த்தாலுமே ப்ராமணனுக்கு அரசாளும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
அரசை ஆள்பவனே சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொண்டவனாகிறான். அதிகாரம்
கையில் இல்லாத ஒருவன் சட்டத்தை இயற்றுவது சாத்தியமில்லாத போது பிராமணன்
ஏற்றத்தாழ்வுக்கான சட்டத்தை எப்படி இயற்றி இருக்க முடியும்?

ஒரே குற்றத்தைப் புரிந்த நால்வரில் ப்ராமணனே கடும் தண்டனையைப் பெற்றான் என்ற
இதிகாச நிகழ்வைப் பார்ப்போம்!

மகாபாரதத்தில் அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பாண்டவர்களை திருதிராஷ்டிரன்
வேண்டா வெறுப்பாக நாட்டிற்குள் மீண்டும் அழைத்து வருகிறான். நாட்டின் இளவரசர்
பட்டத்தை துரியோதனனுக்குக் கொடுப்பதா இல்லை யுதிஷ்டிரனுக்குக் கொடுப்பதா?
யாருக்குக் கொடுத்தாலும் எனக்குத் தானே தலைவலி என்று தலையில் கைவைத்து கருணாநிதி
போல அமர்ந்திருக்கிறான்.



அந்த நேரம் அரசவையில் ஒரு வழக்கு வருகிறது.

ஒரு பிராமனன், ஒரு சத்ரியன், ஒரு வைசியன், ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து
ஒருவனை கொன்று விடுகிறார்கள். மன்னர் இவ்வழக்கை விசார்க்கிறார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை
தனது மகன் துரியோதனன் கூறுவான் என்று கூறிவிடுகிறார். காரணம் துரியோதனன் சிறந்த
நீதிமான் எனவே அவனுக்கு இளவரசர் பட்டத்தை வழங்கலாம் என்று திட்டமிட்டார்.
துரியோதனன் எழுந்து "ஒருவனைக் கருணை இல்லாமல் கொலை செய்த இவர்கள்
நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்றான்.

ஆனால் குலகுருவாக இருந்த கிருபாச்சாரியார், யிதிஷ்டிரனுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது
அவசியம் என எடுத்துக்கூற திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க
அழைக்கிறார்.

யுதிஷ்டிரன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? சூத்திரனுக்கு நான்கு வருடம் கடுங்காவல்
தண்டனையும், வைசியனுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனையும், சத்ரியனுக்கு பதினாறு
வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறான். அதேநேரம் பிராமனருக்கு மரண தண்டனை
விதிக்கிறான். காரணம் சூத்திரன் ஞாய தர்மங்களை அறியமாட்டான், அதனால்
அவனுக்கு குறைந்த தண்டனையும், வைசியன் கொஞ்சம் விஷயஞானம் உள்ளவன் அதனால்
அவனுக்கு 8 வருடமும், நாட்டை காக்க வேண்டிய பொறுப்புள்ள க்ஷத்ரியன் அதற்கு எதிர்மாறாக
நடந்து கொண்டதால் அவன் செய்த தவறுக்கு இரு மடங்கு தண்டனையும்,
பிராமனன் ஞாய , தர்மம் தெரிந்தும், பாவ, புண்ணியங்கள் குறித்து உணர்ந்திருந்தும் குற்றம் புரிந்ததால்
அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்" என்றான்.


'யுதிஷ்டிரனின் தீர்ப்பு தர்மத்தின் வழியினதே' என்றுகுல குரு கிருபாச்சாரியார்
ஆமோதிக்கிறார். சிறந்த நீதிமானாக அவையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுதிஷ்டிரனே
அந்நாட்டின் இளவரசராக அறிவிக்கப்படுகிறான்.

இங்கே நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட தீர்ப்பு கூட ஜாதியின்
அடிப்படையில் இல்லை. ஒருவனது வாழும் வகைக்கு எவ்வளவு விரோதமாக இருந்திருக்கிறான்
என்பதை மனதில் வைத்தே அவனுக்கு தண்டனையின் அளவு நிர்ணயிக்கப் படுகிறது. பிராமணன் என்பதால் பச்சாதாபம் காட்டப்படவில்லை. ப்ராமணன் என்பதால் தேவையற்ற மரியாதை கொடுக்கப்படவில்லை.
ஒரு வேளை பிராமணன் தண்டனைச் சட்டத்தை நிர்ணயித்திருந்தால் ஞாய, தர்ம, பாவ, புண்ணியங்கள்
அனைத்தும் அறிந்தவன் நான் என்பதால் நான் செய்வது எதுவும் குற்றமாகாது என்று
சட்டம் இயற்றி இருக்கலாமே! ஆனால் கடுமையான தண்டனையை அவன் பெறுகிறான்.
க்ஷத்ரியனால் விதிக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டு தண்டனையும் ஏற்கிறான்.

எனவே ஜாதீய ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வாழும் வகைக்கான சட்டங்களையும்
இயற்றியவன் ப்ராமணன் இல்லை என்பது இதிகாச ஆதாரங்களில் இருந்தே புலனாகிறது.

எனவே சமூகத்தின் ஜாதிகள் என்ற குழு மனப்பான்மை வாழும் மக்களுக்குள் காலப்போக்கில்
தானாகவே உருவானதாகவே இருக்குமேயன்றி தனி ஒரு மனிதர்களால் ஒரே கடவுளால் உருவாக்கப்படவில்லை
என்பதே நிதர்சனம்!

உலக நாடுகள் முழுவதிலும் ஒரே மதம் ஒரே கடவுள் என்றிருக்கும் மதத்தினருக்குள்ளும்
ஜாதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதே இதற்கு கண்கூடான சாட்சி!

ஆக இந்து தர்மத்தில் ஜாதிகள் போதிக்கப்படுவதில்லை, இந்துக்கடவுளரும் ஜாதிகளை உருவாக்கவில்லை என்பதே "நிஜம்"!

உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் இவற்றைத் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்வார்கள்
என்பதே "நிஜம்"!

நீங்கள் உண்மையான பகுத்தறிவு கொண்டவரா? அப்படியெனில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .....

"இந்து தர்மம் என்பது மனோவியலும், அறிவியலும், பகுத்தறிவும் ஆகும்"