Saturday, July 16, 2011

நவீன சாணக்கியர்கள்!



இந்தியாவின் வளத்தையெல்லாம் கொள்ளையடித்து வெளிநாட்டில் வைத்து பாதுகாக்கச் செய்யும் அரசியல் வாதிகள் ஆளும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும்,  லக்ஷம் கோடி மதிப்பிலான சொத்தை குண்டுமணி தங்கத்தின் மீது கூட ஆசைப்படாமல் கட்டிக் காத்து வந்திருக்கும் கேரளத்து மன்னர் பரம்பரையினர் போற்றுதலுக்கு உரியவர்களே!

இந்த நேரத்தில் சாணக்கியர் பற்றிய சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. 

சந்திர குப்த மௌரியரின் அமைச்சரும் குருவுமாக சாணக்கியர் இருந்தார். ஒரு நாள் சந்திரகுப்தர் தன் நாட்டு மக்கள் வறுமையில் இருப்பதால் குளிருக்கு போர்த்திக் கொள்ள கம்பளி கூட இல்லாமல் தவிக்கிறார்கள். அதனால் மக்கள் அனைவருக்கும் புதிய கம்பளி அளிக்க உத்தரவிட்டு, அதனை நிறைவேற்றும் பொறுப்பை சாணக்கியரிடமே கொடுத்தார்.

சாணக்கியர் வீட்டிற்கு புதிய கம்பளிப் போர்வைகளை அனுப்பி வைத்தார் அரசர். புதிய கம்பளிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இந்த விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் பல புதிய கம்பளிகள் சாணக்கியர் வீட்டில் வந்திறங்கி இருக்கிறது. அவற்றைத் திருடி விற்றால் இந்த குளிர் காலத்தில் நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணி சாணக்கியர் வீட்டிற்குள் இரவு நுழைந்தனர்.

கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?'' என்றான்.

அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் மன்னர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார் சாணக்கியர்.

திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்'' என்று சத்தியம் செய்தார்கள்.

ஆக அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படாத சாணக்கியர் போன்ற சிறந்த மனிதர்களாக கேரள அரச பரம்பரையின் இன்றைய அரசரான உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மாவும் அவரது குடும்பத்தினரும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் இருப்பதாலேயே கேரளம் வளமோடு இன்னும் இருக்கிறது.  நமக்கும் மழை பெய்கிறது.

இந்த மன்னர் குடும்பத்தினரையும், கோவில் சொத்தையும் பத்மனாபரே காக்க வேண்டும்!

2 comments:

Madhusudhanan D said...

The government may take over the temple stating security for the wealth over there. After some years they may announce that all the coins are not gold.

These who support to use that wealth for public welfare have no words to speak for using the money in foreign banks for public welfare.

Anonymous said...

வரலாறில் மார்தாண்ட மகாராஜரை அரியணை ஏற்றிய பத்மநாபனை கடவுளாக வளிபட்டிருக்கிறார்