Sunday, July 24, 2011

இதயத்தில் ஒளிர்கிறார் இறைவன்!



இறைவன் எல்லாம் அறிந்தவர், அனைத்து அறிவு வடிவானவர், ஆனந்த வடிவினர், அழிவற்றவர். அந்த இறைவன் ஒளிமயமான இதயத்தில் உள்வெளியில் ஆன்மாவாக ஒளிர்கிறார். மனமாக அமைந்து பிராணனையும் உடம்பையும் வழிநடத்துகிறார். இதயத்தில் நிலைபெற்றவராக உடம்பு
முழுவதும் வியாபித்திருக்கிறார். விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்கள் புத்தியால் அவரை அறிகிறார்கள்.

உயர்ந்தது, தாழ்ந்தது என்று அனைத்துமாக விளங்குகின்ற ஆன்மாவைத் தரிசித்தால் மனக்குழப்பங்கள் அகல்கின்றன. எல்லா சந்தேகங்களும் விலகுகின்றன. வினைப்பயன்களும் அழிகின்றன.

பொன்னிறமாக ஒளிர்கின்ற மேலான உறையில் இறைவனுள்ளார். அவர் குறைகளற்றவர், பகுதிகள் அற்றவர், தூயவர், ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். ஆன்மாவை அறிந்தவர்கள் அவரை அறிகிறார்கள்.

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.

முன்னால், பின்னால், வலது, இடது, மேலே, கீழே என்று பிரபஞ்சம் முழுவதும் மேலான, அழிவற்ற இறைவனே நிறைந்துள்ளார்.

- முண்டக உபநிஷத்து

'பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி, மற்ற அனைத்தையும் நாம் அறிந்து கொள்வது ஆன்ம ஒளியால்தான். அதன் காரணமாகவே அது ஒளி என்று கூறப்பட்டுள்ளது.

- ஸ்ரீ ரமண மகரிஷி.


இறைவன் என்பவன் ஒரு மகா சக்தி. அது பிரபஞ்சத்தின் ஆதாரசக்தி. இதை பாம்மாட்டிச் சித்தர் அருமையான பாடலால் இவ்வாறு கூறுகிறார்


"உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடு பாம்பே"

"அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினைந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர்




.

No comments: