Saturday, July 2, 2011

ஆராய்ச்சி செய்யாமல் உபகாரம் பண்ண வேண்டும்!



'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம்,
நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிராமல் நம்மாலான
உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

வைத்துக் கொண்டு அனுபவிப்பதை விட,கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான்.
ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தால் கர்வம் கொண்டான். இதனால் தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.

"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


No comments: