இணைய பக்கங்களின் செய்திகளாக வெளியாகி இருக்கிறது கீழே காணப்படும் சம்பவம். கூகுளிட்ட போது பல தளங்களில் தெரிந்தது. சம்பவம் உண்மையாக இருக்கும் பட்ஷத்தில் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. வேதனைக்குரியது.
2011 Oct 5
விகேபுரம்: பாபநாசம் மலையில் தங்கியிருந்து 7 ஆண்டுகளாக தியானம் செய்த மவுன சாமியார் சாது குமார் சாமியை வனத்துறையினர் இரவு நேரத்தில் சென்று கொடூரமாக தாக்கி நிர்வாண நிலையில் அடித்து விரட்டினர். அவர் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சுயம்பு மகன் குமார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் இல்லறத்தை துறந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் மலையில் உள்ள கல்யாணி தீர்த்தம் வந்து அங்குள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தங்கினார். அதன் பிறகு காவி உடை தரித்த அவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானம் செய்தார். இதனால் அவரை அனைவரும் சாதுகுமார் என்றும், மவுன சாமியார் எனவும் அழைக்கத் தொடங்கினர். எப்போதும் குழந்தை போல காட்சியளிப்பார்.
பக்தர்கள் தரும் உணவை வாங்கி சாப்பிடுவார். ஆனால் யாரிடமும் உணவை கேட்டு வாங்க மாட்டார். எல்லாம் சைகை மூலம் உணர்த்துவார். பக்தர்கள் வராத பட்சத்தில் அவர் மலையில் உள்ள பழங்களை பறித்து பசியாறுவார். சில சமயங்களில் லேயர் டேமில் உள்ள ஹோட்டலுக்கு செல்வார். அங்கு அவருக்கு உரிமையாளர் உணவு தந்து மரியாதை செய்வார்.
கல்யாணி தீர்த்தத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மவுன சாமியாரை தெரியாமல் இருக்க முடியாது. இவரால் யாருக்கும் தொந்தரவு கிடையாது. சதா 24 மணி நேரமும் இறைவன் வழிபாட்டிலே இருந்து வந்த இவரை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை.
விசாரித்தபோது கொடூரமான தகவல் கிடைத்தன. கடந்த 1 வாரத்திற்கு முன்னர் வனத்துறையைச் சேர்ந்த சிலர் இரவில கல்யாணி தீர்த்தத்திற்கு சென்று மவுன சாமியாரை வலுக்கட்டாயமாக கீழே அழைதது வந்து, கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு பாபநாசம் சோதனைச்சாவடி பகுதியில் வைத்து சாமியாரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி ரத்தம் சொட்ட சொட்ட அவரை ரோட்டோரமாக தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. இது பற்றி கேள்விபட்ட சிலர் கலெக்டரிடம் புகார் கூறியுள்ளனர். வனத்துறையினரால் தாக்கப்பட்ட மவுன சாமியார் கதி என்ன, அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என்ன செய்வது இப்போது இது தானே இந்தியா!
No comments:
Post a Comment