தினமும் தூங்கப் போகும் முன் இன்று மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். பரோபகாரம் செய்யாமலே ஏழுநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே. அன்றைக்கு நாம் செத்துப் போனதற்குச் சமம் என்று வருத்தப்பட வேண்டும். நாமே செத்த மாதிரி என்றால் இது தான் பெரிய தீட்டு.
நாம் எத்தனை சிறியவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக் கூடிய சிறிய தொண்டு இல்லாமல் இல்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, சேர்ந்தோ ஏதாவது பொது நலத் தொண்டு செதே ஆக வேண்டும். உலகம் சுழல அதுவே வழி.
தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.
வியாஸர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் சாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு
வேண்டினார்கள். "பதினெட்டு புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்"
என்றார்.
"ஸ்லோகார்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடிஷு
பரோபகார: புண்யாய பாபாய ப்ரபீடிதம்:
அதாவது, "புண்யம் சம்பாதிக்க வேண்டும் எனில் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு" என்கிறார் வியாஸர். இருக்கும் அத்தனை கோடி மத ஸாஸ்திர புத்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் அனைத்தும் போதிப்பது அதுவே.
சந்திரனின் கிரணங்கள் உலகத்திற்கெல்லாம் நன்மை தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து அதனால் செய்யவில்லை. தன் இயல்பாகவே அது உலகநன்மை உண்டாகுமாறு நடந்து கொள்கிறது. அது போல சக ஜனங்கள் தங்களுடைய 'நேச்சர்' படி, இயல்பாக இருப்பதே நடப்பதே பரோபகாரமாகத்தான் இருக்கும்.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
No comments:
Post a Comment