அர்ஜுனன் கேட்கிறான்!
கேசவா! நிலையான புத்தி உடையவன் எவ்வாறு பேசுவான்? எவ்வாறு இருப்பான்? எவ்வாறு நடப்பான்?
பகவான் கூறுகிறார்...
பார்த்தா! மனிதன் எப்போது தன் மனதில் எழுகின்ற ஆசைகளை அறவே நீக்கி, தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக நினைத்து மகிழ்வுடன் ஏற்றுக் கொள்பவனே நிலையான புத்தி உடையவன் எனப்படுகிறான்.
துக்கத்தில் கலங்காத மனம் உடையவன், இன்பத்தில் ஆசை இல்லாதவன், பற்று அச்சம், கோபம் இவை நீங்கப் பெற்றவனாய் இருப்பவன், மனக் கட்டுப்பாடு உடையவன் ஆகியவனே நிலையான புத்தி உடையவன் எனப்படுகிறான்.
எவன் ஒருவன் தேகம், போகம் இவற்றில் ஆசை இல்லாமல் இருக்கிறானோ, அந்த ஆசைகளை அடைய நேரிட்டாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ இல்லாமல் இருப்பானோ அவனது அறிவு உறுதி பெறுகிறது.
ஆமை தேவைப்படும் போது தன் உறுப்புகளை எல்லாப் பக்கங்களிலும் உள்ளே இழுத்துக் கொள்வது போல யோகி எப்பொழுதும் தனது புலன்களை உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்த வரும்போது அதிலிருந்து மீள்கிறனோ அவனுடைய புத்தியே நிலையானது.
புலன்களை அடக்கி வைப்பவனிடம் அவனைச் சுற்றி நடக்கும் உலக நடப்புக்கள் அவனை விட்டு விலகிச் செல்கின்றன. இருந்தாலும் அவற்றில் உள்ள சுகத்தின் மீது அவனுக்கு விருப்பம் உள்ளது. அவன் எங்கும் பரமாத்மாவைக் காண்பவனாக இருந்தால் அந்தச் சுகமும் மறைந்துவிடும்.
மனிதனின் புலன்கள் அதிக சக்தி உடையவை. ஏனெனில் ஆன்ம உலகிற்காக முயற்சி செய்யும் ஞானிகளைக் கூட அவர்கள் தங்கள் புலன்களை அடக்க முயற்சி செய்தாலும், கொந்தளிக்கும் இயல்புடைய புலன்கள் அவர்களின் மனதை வலிமையாகக் கவர்ந்து கொண்டு போகின்றன.
பலம் பொருந்திய அத்தகைய புலன்கள் அனைத்தையும் நன்றாக தன் வசப்படுத்திக் கொண்டு மன உறுதியுடையவனாய் என்னிடத்தே நிலைபெற்ற மனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் யாருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதோஒ அவனது புத்தியே நிலையானது.
No comments:
Post a Comment