Saturday, May 19, 2012

கடவுளிடம் உண்மையாக இருங்கள்!





ஷீர்டி சாய்பாபா தகியா என்னுமிடத்தில் வசிக்கும் போது சுற்றி உள்ள கோவில்களிலும் மசூதிகளிலும் விளக்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். பிறர் வேண்டாமென்று
வீசி எறியும் அழுக்கு கந்தல் துணிகளை ஆற்றில் கசக்கி துவைத்து சிறு சிறு துண்டுகளாக்கி அந்த விளக்கிற்கு தேவைப்படும் திரியை செய்து விளக்கேற்றுவாராம்.

யாராவது பாபாவிடம் "இது என்ன வீணாய்ப்போன அழுக்குத் துணியையெல்லாம் துவைத்து விளக்கிற்கு போடுகிறீர்களே" என்று கேட்டால் "நம்மிடம் கூட பொறாமை, கோபம், வெறுப்பு களவு போன்ற கெட்ட அழுக்குகள் சேர்ந்திருக்கின்றன. அவைகளை ஞானம் என்ற மண்ணில் புரட்டி பக்தி என்ற வெள்ளாவி வைத்து வெளுத்தால் மனம் பளிச் சென்று சுத்தமாகி விடாதாநம் குழந்தைகளிடம் தீய குணங்கள் படிந்திருந்தால் தூர எறிந்து விடுகிறோமா? இந்தத் திரி நம் அழுக்குகளைத் துவைத்து மனத்திலிருக்கும் நச்சை பக்தி என்கிற நெருப்பால் எரித்து மனத்தைப் ப்ரகாசிக்கச் செய்வதாகக் கொள்ளுங்கள்' என்பாராம். "கடவுளிடம் உண்மையாக இருங்கள், ஆன்மா சுடர் விட்டெரியும்" என்பாராம்.

விளக்கேற்றுவதற்கு எண்ணெய் வேண்டுமே! பாபாவிடம் ஏது பணம்? பாபா என்ன செய்வார் தெரியுமா? ஒரு தகரக் குவளையோடு போய் எண்ணெய் கடைகளில் நிற்பாராம். அவர்கள் ஊற்றும் எண்ணெயால் மசூதியிலும் கோவில்களிலும் விளக்கேற்றுவார்.

ஒரு முறை எண்ணெய் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பாபாவுக்கு இனாமாக எண்ணெய் தருவதில்லை என்று முடிவு செய்தனர். அவர்கள் பாபாவை பார்த்து ஏளனமாக "பாபா, ஓசியிலேயே புண்ணியம் தேடுகிறாயா? நஹி நஹி" என்று கையை ஆட்டி கடையை விட்டுப் போகச் சொல்லி விரட்டினர்.

பாபா மௌனமாக மசூதிக்குத் திரும்பினார்.

எண்ணெய்க் கடைக்காரர்களெல்லாம் ஒரு ஆளை சத்தமில்லாமல் அனுப்பி 'பாபா என்ன செய்கிறார் என்று பார்த்துவா' என்றார்கள். வந்த சிறிது நேரத்தில் ஓட்டமாகத் திரும்பி ப் போய்க் கடைக்காரர்களிடம் மூச்சு முட்ட இப்படிச் சொன்னான் -

"ஐயா, நான் பார்த்தேன், பாபா யாரிடமும் பேசவில்லை. காய்ந்த திரிகளை விளக்குகளில் போட்டார். அவரது டப்பாவில் ஒருதுளி எண்ணெய் கூட கிடையாது போல. அவர் டப்பாவை கவிழ்த்தார். ஒரு துளி எண்ணெய் வழிந்து விழவே நீண்ட நேரம் ஆனது. அந்த எண்ணெய்க் குவளையில் தண்ணீர் பிடித்து வந்தார். அதிலிரிந்து கொஞ்சத்தைக் குடித்தார். பிறகு மிச்சத் தண்ணீரையெல்லாம் எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. சரி, தண்ணீரில் எவ்வளவு நேரம் எரியப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் விளக்கு அனையவே இல்லை. இப்போது வரை!" என்றான்

எண்ணெய் கடைக்காரர்கள் தாங்கள் பாபாவை அலட்சியப்படுத்தி தவறு செய்துவிட்டோம் என எண்ணினார்கள். ஒன்றாகப் புறப்பட்டுப் போய் பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

அப்போதும் பாபா சொன்னது ஒன்று தான் "எப்போதும் கடவுளிடம் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள். நன்மை பெறுவீர்கள்"

இந்தக்காலத்திலும் சிலர் துறவிகள் என்ற அடையாளங்களோடு வலம் வருபவர்களைப் பார்க்கிறோம். எண்ணெய் நிறுவனத்தையே நடத்தும் அளவு கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். யாரேனும் அவர்களை பற்றி விமர்சனம் செய்து விட்டாலே நான் வழக்குதொடுப்பேன், உன்னை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்று கர்ஜிக்கிறார்கள்! இவர்கள் கடவுளுக்கும் உண்மையாக இல்லை, தான் கொண்ட சமூகத்திற்கும் உண்மையாக இல்லை!

ஷீர்டி பாபா வணங்கப்பட வேண்டிய துறவி!


No comments: