Monday, May 14, 2012

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே!




துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் மழையினால் உண்டாகும். மழையே மாநிலத்தின் உயிர்நாடி பயிர்தழைக்க உயிர் தழைக்கும். அத்தகைய மழைபொழிய வானில் இருண்ட மேகம் எழுந்த உடனே உலகிற்கு உண்டாகும் நலனைக் கருதி அந்நலம் தனக்கு எய்தியது போல் மகிழ்ச்சியுடன் தோகையை விரித்துக் களிநடம் புரிகின்றது மயில். இத்தகைய சிறந்த பண்புடைய மயிலைக் கருணை நாயகராகிய கந்தப் பெருமான் தனக்கு வாகனமாகக் கொண்டுள்ளார். அதாவது தன்னலமில்லாமல் பிறருக்கு நன்மையே நினைக்கும் எவரையும் எம்பெருமான் கந்தனுக்கு மிகவும் பிடிக்கும். 

ஒருவனுக்கு எத்தனை மாட மாளிகைகள் இருப்பினும் அவன் படுக்குமிடம் ஐந்தரை அடி நீளந்தானே. ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலங்களிருப்பினும் அவன் உண்பது காற்படியரிசிதானே! எத்தனை நூல் துணி ஆலைகள் இருப்பினும் அவன் உடுப்பது நான்கு முழந்தானே! அதனால் போதும் என்ற மனமே ஒருவனுக்கு நிம்மதியை அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உணவு அருந்தாமல் வீதியில் வெயிலில் விளையாடிக் கொண்டேயிருக்குமானால் தாய் அக்குழந்தைகள் மீதுள்ள எல்லையற்ற கருணையால் வலிய வீட்டுக்குள் அழைத்துச் சென்று நீராட்டி ஆடை அணிகலன்களால் அழ்கு செய்து நல்லுணவு தந்து இன்பம் செய்வது போல், உயிர்களாகிய நாம் பாவமாகிய வெயிலில் விளையாடும் போது தாயினும் மேலான கருணையுள்ள இறைவன் நம்மை தகுந்த காலத்தில் அழைத்து பக்குவமான நிலைக்கு அழைத்துச் சென்று அருள்புரிவான். ஆனால் தாய் வலியச் சொல்லும் போது குழந்தைகள் மறுக்காமல் அதைக் கேட்டு நடப்பது போல இறைவன் சொல்படி கேட்டு நடக்கும் வகையில் மனதை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும்.

நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம்நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

பசியானது அறிவைப் போக்கும், தரும சிந்தனையைக் கெடுக்கும். பசி வந்தால் ஞானமுள்ளவனும் தைரியத்தை இழந்து விடுவான். எவன் பசியை வெல்லுவானோ நிச்சயமாக அவன் சொர்கத்தை வெல்லுவான்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

ஆயிரம் கொடுக்கச் சக்தி இருக்க நூறு கொடுப்பவனும், நூறு கொடுக்கச் சக்தியுள்ளவன் பத்துக் கொடுப்பவனும், சக்திக்குத் தக்கபடி தண்ணீரைக் கொடுப்பவனும் ஆகிய எல்லாரும் சமமான பலனை அடைகின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

வீட்டு வாசலைப் பூட்டி விட்டு உள்ளே வாருங்கள் என்றழைத்தால் யார் வரமுடியும். அதேபோல உன் இதயத்தை மும்மலமாகிய கதவினால் பூட்டி விட்டு இறைவனை அழைத்தால் எப்படி வருவான். உள்ளத்தை தூய்மையாக திறந்து வைத்தால் இறைவன் உன்னிடத்தில் பிரகாசிப்பார்.

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே. உயிர்கள் தோறும் இறைவன் இருக்கிறான். ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாயிரு. உயிர்களிடத்தில் செலுத்தும் அன்பு இறைவனைச் சேரும்.

- திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்!

No comments: