Sunday, May 6, 2012

சடங்குகள் தேவையா?



நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியன வெல்லாம் வெறும் சடங்குதானே என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமோ என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக் கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமாக ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டுமாதான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் வெறும் சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே. 

எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஒர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (DISCIPLINE) உட்படுகிறான். இதை சாப்பிடக்கூடாது. இதை போக்கிய வஸ்துக்களைப் அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (WILL - POWER) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.

ஆக, வெறும் சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (MORALITY) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!



No comments: