Sunday, July 1, 2012

கீதோபதேசம் - யோகம் என்பது என்ன?


அர்ஜுனன் கேட்கிறான்..

ஹே பரமாத்ம! யோகம் என்றால் எது, யோகியின் தன்மைகளைப் பற்றி எனக்குக் கூறுவாய்!!

பகவான் சொல்கிறார்..

அர்ஜுனா! செயல்களின் பயனை எதிர்பார்க்காமல், தான் செய்ய வேண்டிய கடமையை யார் செய்கிறானோ அவன் தான் சந்நியாசியும், யோகியும் ஆகின்றான். அதிக வேட்கையும் தீவிரமான செயலும் அற்றவன் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.

ஹே பாண்டவ! எதை துறவு என்று கூறுகிறார்களோ அது தான் யோகம் என்று அறிந்து கொள். எண்ணங்களைத் துறக்காத ஒருவன் யோகி ஆவதில்லை.

யோகத்தை அடையும் எண்ணம் கொண்ட ஞானிக்கு செயல் ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அதை அடைந்தபின் அதே மனிதனுக்கு செயலற்ற நிலை தான் சாதனமாகக் கூறப்படுகிறது.

எண்ணங்களைத் துறந்து விட்டு, புலன் உணர்வுப் பொருட்களோடும் , செயல்களோடும் பற்று இல்லாமல் இருப்பானானால் ஒரு மனிதன் யோக சித்தியை அடைந்தவன் ஆகிறான்.

அர்ஜுனா! ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஒருவனுக்கு நண்பனும் அவன் தான். பகைவனும் அவன் தான். வேறு ஒருவரும் இல்லை.

தன்னடக்கத்துடன் அமைதியாக இருப்பவனுடைய ஆத்மாவானது குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும், பெருமையிலும், சிறுமையிலும் சமநிலையில் இருக்கிறது.

சாஸ்திர அறிவினாலும் , அனுபவ அறிவினாலும் ஏற்பட்ட திருப்தியினால் மனம் நிறைந்தவனும், உறுதியான மனம் படைத்தவனும், தன்னுடைய புலன்களை வென்றவனும், மண் , கல், தங்கம், ஆகியவைகளைச் சமமாகக் கருதுபவனுமாகிய யோகியே யோகத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்