Sunday, March 10, 2013

மெகாமால் கோவில்கள்!"கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்" என்று பொதுவாகச் சொல்வார்கள். "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்கிறார் பாரதியார். உலகின் எல்லா பொருட்களுமே இறையம்சம் கொண்டவை தான் என்பதாலேயே கல்லும் மண்ணும் மரமும் விலங்குகளும் பறவைகளும் கூட நமக்கு வணங்கப்படக்கூடிய விஷயங்களாக இருக்கிறது.

இப்படி எல்லாவற்றிலும் இறைத்தன்மையைக் கண்ட போதும் கோவில் என்ற பொது தளத்தை உருவாக்கி அங்கே அனைவரும் ஒன்றாகக் கூடி ஒரு இறைவன் மீது பக்தி கானங்கள் பாடி கூட்டு வழிபாடுகள் செய்து மகிழ்ந்து வந்திருக்கின்றனர் நம் மக்கள்.

பொதுவாக கோவில் அமைவதற்கு பல காரணங்கள் இருக்கும்.   புவியியல் சார்ந்த இடவமைவு. குறிப்பாக மலை ஏறுவது, மூலிகைகளுக்கு இடையே சென்று வருதால் கிடைக்கும் நன்மையைக் கருதி வனப்பகுதிக் கோவில்கள், மன அமைதி உண்டாகும் இடமாக கருதி ஊருக்குள்ளேயே கட்டி வைக்கப்படும் பெரிய காற்றோட்டமான இட அமைவைக் கொண்ட பெரிய கோவில்கள் என்று பல்வேறு விதமாக நமது கோவில்கள் இருக்கும்.

கோவில்களுக்கு மன அமைதி வேண்டியும், பிரார்தனைகள் வைப்பதற்கும் மக்கள் செல்வதுண்டு. மனிதர்களிடம் கூறி அழுதால் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்வான் அதனால் இறைவனிடம் அழுதுவிட்டு வருவோம் என்று நினைத்து கோவில்களில் கூடுவோறும் உண்டு.

அப்படி ஆறுதல் தேடி, அமைதி தேடி கோவில்களுக்கு செல்வோருக்கு அவர்கள் தேடும் ஆறுதலும் அமைதியும் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்! ஆளே இல்லாத சாதாரண கோவில்கள் என்றால் யாருக்கும் தொல்லை இருக்கப்போவதில்லை. ஆனால் கொஞ்சம் கூட்டம் வரும் கோவில்களும் புகழ் பெற்ற கோவில்களுக்கும் செல்வதென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.

சில வாரங்கள் முன்பு மாங்காடு அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். முகூர்த்த தினம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் நல்ல கூட்டம். பொது தரிசனத்தில் வரிசை நீண்டிருந்தது. வழக்கம் போல இருபது ரூபாய் , ஐம்பது ரூபாய் என்று கட்டண வரிசைகள் இருந்தது. அனைத்து வரிசையும் மெதுமெதுவாக ஒரு சேர நகர்ந்த வண்ணம் இருக்கையில் 50 ரூபாய் வரிசை கூட்டம் அதிகரித்ததால், ஏன் காசுகொடுத்து பெரிய வரிசையில் நிற்க வேண்டும் என நினைத்தவர்கள் கொஞ்ச நேரம் ஆனாலும் பரவாயில்லை என நினைத்து பொது தரிசன வரிசையை நோக்கிச் செல்லத் துவங்கினர்

இதனைப் பார்த்த டிக்கெட் வியாபாரிகள் பொது தரிசன வரிசையையும், 20 ரூபாய் வரிசையையும் அப்படியே நகர விடாமல் நிறுத்தி விட்டனர். 50 ரூபாய் வரிசை வேகமாக நகரத்துவங்கியது. இதைக் கண்ட மற்றவர்கள் உடனே அந்த வரிசைக்கு ஓடிச்சென்று 50 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி அந்த வரிசையை ரொப்பினார்கள்.  அதாவது காசு கொடுத்து டிக்கெட் வாங்காதவர்கள் சுலபத்தில் சாமியை பார்க்க முடியாது என்கிற இக்கட்டை கட்டாயமாக ஏற்படுத்தி மக்களை பொறுமையிழக்கச் செய்து இப்படி திட்டம் போட்டு டிக்கெட் விற்றதைப் பார்க்கும் போது வருத்தமாக இருந்தது

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை எடுத்துக்கொண்டால் அந்த காலத்திலிருந்தே கோவில் கடைகள் பெயர் பெற்றவை. அதுவும் தற்போது புகழ் பெற்ற சுற்றுலாத் தளமாக மாறிவிட்டதை அடுத்து புதிது புதிதாக கோவிலின் ஒவ்வோர் மூலைகளிலும் ஸ்டால்கள் முளைக்கின்றன. கோவிலைச் சுற்றிலும், கோவிலுக்கு உள்ளேயும் இருக்கும் கடைகள் அமைதி தேடி நடந்து செல்வோரை அலைக்கழித்து ஆர்ப்பரித்து மன அழுத்தத்தையே உண்டாக்கி விடுகிறது.

சுவாமிக்கு என சார்த்தப்படும் புடவைகளும் வேஷ்டிகளும் மற்ற பொருட்களும் இலவசமாகத்தான் கோவிலுக்கு வருகின்றன. அதனை அப்படியே ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால் அதனை ஏலம் விட்டு விற்பனை செய்து அதிலும் காசு பார்க்கிறது கோவில் நிர்வாகம்.


திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் வேண்டி வருவோர்க்கென பூஜைகள் நடக்கும். பூஜைகள் முடிந்து உற்சவரைச் சுற்றி வெளியே வரும் போது நீண்ட தடுப்புக்கள் அமைத்து வருபவர்களை கட்டாயமாக இன்னொரு சன்னதி வாசலை கடக்கச் செய்கிறார்கள். அங்கே 'சாமிக்கு வெளக்கேற்றுங்கள்' என்று சத்தமாகச் சொல்கிறார்கள். 'இது என்ன புதுசா இருக்கு?' என்று யாரேனும் கடந்து செல்ல முற்பட்டால் அவர்களை 'எங்கே போறீங்க, விளக்கேத்திட்டு போங்க' என்று மிரட்டும் தொனியில் அழைக்கிறார்கள். தேவையில்லை என மேலும் நகர முயல்பவர்களை 'கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கிட்டு அங்கே பூஜை பண்ணினா, இங்க வந்து விளக்கேத்தனும், அப்பதான் பலிக்கும், இல்லன்னா பிரார்தனை பலிக்காது' என்று கிட்டத்தட்ட ப்ளாக் மெயில் செய்யும் விதமாக மிரட்டியே விளக்கு வியாபாரம் செய்கிறார்கள். கோவில் நிர்வாகம் இதை கண்டு கொள்வதில்லை. கூட்டாளிகள் எப்படி கண்டிப்பார்கள்?

சுவாமிமலை முருகன் கோவிலில் உள்ளே இருக்கும் பிரசாத ஸ்டாலில் 20 ரூபாய் என போட்டிருந்த பஞ்சாமிருந்த டப்பாவை கேட்டு ரூபாயை நீட்டினால், டப்பாவுடன் ஒரு விபூதி பாக்கெட்டையும் போட்டு 30 ரூபாய் கொடு என்பார்கள். விபூதி வேண்டாம், பஞ்சாமிர்தம் மட்டும் கொடு என்றால். 'ரெண்டும் சேத்து தான் தருவேன், தனியா வாங்க முடியாது' என்று கட்டாய வியாபாரம் செய்வார்கள்.

நவக்கிரகஸ்தலங்கள் , பரிகார பூஜை ஸ்தலங்கள் என அத்தனைக் கோவில்களிலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக பெரிய கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

பணம் அதிகம் இருந்தால் அதை உபயோகித்து மற்றவர்களை விட பலனை உடனடியாகப் பெற்று விடும் கூட்டம் என்றுமே எங்குமே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை உபயோகித்து இப்படி கடவுளை வைத்து கண்காட்சி நடத்துவது சகிக்க முடியாத ஒன்று. கோவில்களில் ஆன்மீகமும் வளர்க்கப் படுவதில்லை, பக்திக்கும் இடமிருப்பதில்லை. ஆன்மீக சொற்பொழிவுகளோ பக்தி பாடல் பஜனைகளோ கேட்க முடிவதில்லை. அவசரகதியாக டிக்கெட்வாங்கி உடனடியாக சாமி பார்த்து இடத்தை காலி செய்ய வைக்கும் ஒரு கண்காட்சியாகவே நடந்து வருகிறது. பெரிய கோவில்களில் கடவுளை எக்ஸிபிஷனாகவும் கோவிலை ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவும் மாற்றி நம்மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் பறித்து விடுகிறார்கள் .

கோவிலுக்குச் சென்றால் கையில் நயாப்பைசா கூட இல்லாமல் சென்று நிம்மதியாக கடவுளை தரிசனம் செய்து திரும்ப முடிய வேண்டும். அப்போது தான் உண்மையில் அது ஆன்மீக தலம்.

கோவில்களிலிருந்து கிடைக்கும் கோடிக்கனக்கான வருவாயைக் கொண்டு அரசு விளக்கேற்றக் கூட ஆளில்லாத கோவில்களுக்கு செலவு செய்யலாம். ஆனால் அரசு முனைந்து அதனைச் செய்வதில்லை.தரங்கம் பாடியில் இடிந்த நிலையில் இருக்கும் இந்தக் கோவிலுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். சர்ச் வழியாகத்தான் செல்ல வேண்டும். அருகே இருந்த கடைக்காரர்களிடம் கேட்ட போதெல்லாம் இன்னும் மூன்று மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்போகிரார்கள். புதுப்பிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இன்னும் எதுவும் நடந்த பாடில்லை. இக்கோவிலின் அருகிலேயே இருக்கும் பழங்கால டச்சுக் கோட்டையை காப்பாற்றி வரும் அரசாங்கம் ஏன் புராதனமான இக்கோவிலைக் கைவிட்டது. ஏன் அதனை செப்பனிடும் பணியினைச் செய்யவில்லை?

ஏன் செய்ய முடியவில்லை? கடலை கொஞ்சம் உள்ளே தள்ள வேண்டும். சிங்கப்பூர் காரனிடம் சொன்னால் செய்துவிடலாம். கோவிலை பெரிதாக்கி ப்ரகாரங்கள் அமைத்து விடலாம். ஆனால் அதிக செலவு பிடிக்கும். அரசாங்கம் மட்டுமே செய்ய முடிகிற காரியமாக இருக்கக் கூடும். அப்படி இருந்தால் அரசு செய்துவிடும் என்பது கற்பனைக்கெட்டாத விஷயம். அந்தக் கோவில் பெரிதாக கட்டப்பட்டு விட்டால் சர்ச்சுக்கு இடைஞ்சல் என முட்டுக்கட்டை போடுபவர்கள் பெரிய இடங்களில் இருந்து பிரஷர் கொடுத்திருக்கலாம். இடித்தவர்கள் கட்ட விடுவார்களா என்ன?

தமிழகத்திலிருந்து தள்ளி கொஞ்சம் ஆந்திரக் கதை. காலகஸ்தி கோவிலுக்குச் சென்றால் இரவு தங்கி வரவேண்டும் என ஐதீகம் என்பார்கள். ஒரு முறை நண்பருடன் சென்ற போது அரையெடுத்துத் தங்கியிருந்தோம். வெளியே பெரிய சப்தம். பக்கத்து அரைக்காரர் லாட்ஜ் உரிமையாளருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான்,. கோவிலுக்கு முதல் முதலாக பரிகார பூஜை பொருட்டு வந்திருந்த அவர் கோவில் பற்றி ஒரு விபரத்திற்காக லாட்ஜ்காரரிடம் விசாரிக்கப் போய், அந்த நபரிடம் லாட்ஜ் காரர் , பரிகார பூஜையில் உட்கார வேண்டுமென்றால், புது வேஷ்ட்டி அங்கவஸ்திரம் வாங்க வேண்டும், தேங்காய் பழம் விளக்குகள் எல்லாம் வாங்க வேண்டும், அர்ச்சனை தட்டுக்கள் தனியாக வாங்க வேண்டும், சுவாமிக்கு பெரிய மாலை வாங்க வேண்டுமென்றெல்லாம் கூறி கோவில் வாசலில் இருந்த அதற்கான கடைகளுக்கெல்லாம் அவரை அழைத்துப் போய் வாங்கச் செய்து ஏமாற்றி இருக்கிறார். ஆனால் நிஜம் என்னவென்றால் கோவிலுக்குள்ளேயே 250 ரூபாய் (இப்போதும் அது தான் என நினைக்கிறேன்) கொடுத்தால் அவர்களே பூஜைக்கான பொருட்களை வழங்கி விடுவார்கள். வெளியே வாங்க வேண்டியதே இல்லை. தன்னை இப்படி லாட்ஜ் காரர் ஏமாற்றி விட்டாரே என கடுப்பில் அந்த நபர் பலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்

நானும் நண்பரும் வெளியே வந்து சிறிது நேரம் தெருவை நோட்டமிட்டோம். நிறைய பேர் புது வேட்டி அங்கவஸ்திரத்துடன் இருந்தார்கள். அடடா எத்தனை பேர் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்று நினைத்தோம். லாட்ஜை உடனே காலி செய்து விட்டு தங்கும் ஐதீகமெல்லாம் தேவையில்லை, வந்ததுக்கு சாமி கும்பிட்டு இடத்தை காலி செய்வோம் என உடனே தரிசனம் முடித்துக் கிளம்பினோம்.

சரி தமிழகத்திற்குள் வருவோம், கோவில்களைச் சுற்றி குறைந்த பட்சம் இத்தனை மீட்டருக்கு கடைகளே இருக்கக் கூடாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும். அல்லது குறைந்த பட்சம் கோவில்களுக்குள்ளேயாவது வியாபாரக் கடைகள் இருக்கக் கூடாது என்கிற சட்டம் கொண்டு வரவேண்டும். கோவிலுக்குள் போனால் திரும்பி வரும் வரை பணத்தின் தேவையே இருக்கக் கூடாது. ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. எல்லா கோவில்களிலும் அதன் தெருக்கள் துவங்கியதிலிருந்து கோவிலின் உட்பிரகாரம் வரை ஒரே கடைகள். கையைபிடித்து இழுக்காத குறையாக தேங்காய் வாங்கு, பழம் வாங்கு, பூ வாங்கு என்று பிய்த்துத் தின்கிறார்கள். ஒரு விலைக்கு இரண்டு விலை விற்று ஏமாற்றுகிறார்கள். கோவிலுக்குச் சென்றால் ஏமாற்றப் படுவோம் என்ற பயம் வருகிறது. கோவிலுக்குள் சென்று வெளியே வரும் வரை கண்களை இறுக்க முடிக்கொண்டு சட்டைப் பாக்கெட்டை இறுகப் பற்றிக் கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது.

எவ்வளவு கூட்டம் வந்தாலும் இன்றும் கேரளத்தில் கட்டண தரிசனம் கிடையாது. சாமியை பார்க்க டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. தமிழகத்தில் கோவில்களை கையில் வைத்திருக்கும் அரசாங்கம் கேரளத்தை இந்த நல்ல விஷயத்திற்கு பின்பற்ற வேண்டும். செய்வார்களா?

1 comment:

Suresh said...

Indru Tharangabadi kovil pOla niraya kovilgalin nilaimi irukkiradhu. Pagalkollaiyargalai nambi kaththiruppadharku padhil, naam eadhanum siya mudiyuma?