பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பரம்பொருளான தன் நிலையை அர்ஜுனனுக்கு
விளக்குகிறார்.
பகவான் சொல்கிறார்..
பார்த்தா! யார் எப்போதும் என்னிடம் பக்தியுடன் மனத்தை
வேறு எதிலும் செலுத்தாமல் இடைவிடாது என்னையே நினைக்கிறானோ, அந்த யோகி எளிதில் என்னை அடைவதில் வெற்றி பெறுகிறான்.
என்னை அடைந்த இந்த பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் மறுபடியும்
நிலையில்லாததும், துன்பம் நிறைந்ததுமான மறுபிறப்பை
அடைவதில்லை. அவர்கள் மிக உயர்ந்த பக்குவ நிலையை அடைந்து
விடுகிறார்கள்.
அர்ஜுனா! பிரம்மலோகம் வரையில் உள்ள உலகங்களுக்கெல்லாம் சென்றால் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பி வரவேண்டும்.
ஆனால் குந்தியின் புதல்வனே, என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.
ஆயிரம் யுகங்கள் சேர்ந்ததே பிரம்மாவின் ஒரு பகல்பொழுது
என்பதையும், ஆயிரம் யுகங்கள் சேர்ந்ததே பிரம்மாவின்
ஓர் இரவு என்பதையும் அறிபவர்கள் இரவு, பகல் தத்துவத்தை அறிந்தவர் ஆகின்றனர்.
பகல் வரும்போது கண்களுக்குத் தோன்றாத நிலையில் இருந்த
தோற்றங்கள் யாவும் தோன்றும் நிலையை அடைகின்றன. இரவு வரும்போது அவைகள் தோன்றாத நிலை
உடையவைகளாக மாறிவிடுகின்றன.
பாரதா! இந்த ஜீவராசிகளின் கூட்டம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன.
அவைகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இரவு வரும்போது அவைகள் மறைந்து விடுகின்றன. பகல் வரும்போது மீண்டும்
பிறக்கின்றன.
ஆனால் இந்த தோன்றா நிலைக்கும் மேலே எப்பொழுதும் அழிவற்ற
நிலையான தோன்றாநிலை ஒன்று இருக்கிறது. உயிர்கள் அனைத்தும் அழியும் போது அது அழிகிறதில்லை.
அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத இந்தப் பரம்பொருளை அடைவதே
எல்லாவற்றிற்கும் மேலான லட்சியம் ஆகும். அதை அடைந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை. அது தான் என்னுடைய மிக உன்னதமான இருப்பிடம்
ஆகும்.
அர்ஜுனா! எவனிடத்தில் எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் எங்கும் நிறைந்து
விளங்குகிறதோ, அவனிடத்தில் ஆழ்ந்த பக்தியைச் செலுத்துவதால் அந்தப் பரம புருஷனை அடையலாம்.
- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.
No comments:
Post a Comment