Sunday, March 24, 2013

அறிபவன், அறிவு, அறியும் கருவி!



இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள், விலங்குகள், உயிருள்ள மற்ற அனைத்தும் இறைவனின் வாழும் வெளிப்பாடுகளே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல் வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப் பார்ப்பீர்கள்? நீங்களே கொலைகாரர்களாக் இல்லாவிட்டால் வெளியில் எப்படி கொலைகாரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள்உங்களுக்குத் தீமை மறைந்துவிடும்.

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சீடர்: 'சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?"

சுவாமி விவேகானந்தர் "உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் "சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா'- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது. என்று கூறுகிறார்.

அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.

மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகிவிடுகின்றன. அதனால் தான் வேதங்கள், 'அறிபவனை எதனால் அறிவது?' என்று கேட்கின்றன. 

உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. 'உணரப்படுகிறது' என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.

- சுவாமி விவேகானந்தர்