Friday, March 29, 2013

நவீனகால ஒட்டுப்பொறுக்கிகள்!



இது திரை விமர்சனமல்ல! என்னவோ இந்தப் படம் பார்த்த உடனேயே பல விஷயங்கள் இன்றைய காலகட்டத்திற்குத் தொடர்புள்ளவையாகவே இருந்ததால் அவற்றைப் பற்றிக் கொஞ்சம் பேசத் தோன்றியது. சுதந்திரத்திற்கு முன்பாக பாரத நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பற்றிய  ஆவனப்படமாகவே பரதேசி படத்தைப் பார்க்கத் தோன்றியது.

முன் தலை மொட்டையடிக்கப்பட்டு உச்சியில் மட்டும் முடிவைத்த மனிதர்கள். அதாவது  'அரைமண்டை'. இத்தகைய சிகையலங்காரம் கொண்டவர்கள் என்றால் வைதீக பிராமணர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு ஏறக்குறைய அனைத்து ஜாதிக்காரர்களும் இதே போன்ற சிகையலங்காரம் கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பல பழைய புகைப்படங்களில் அப்படி மனிதர்களை பார்க்க முடிந்ததை இத்திரைப்படம் உறுதி செய்கிறது

நாகரீகம் எனப்படுவது ஏறத்தாழ உலமெங்கும் ஒரே மாதிரியானதாக இருந்திருக்கும் என்பதை இதே சிகையலங்காரம் கொண்ட பழங்கால மக்களின் தோற்றங்களை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட ஆங்கிலப்படமான 'அபோக்காலிப்டோ' மூலமாகவும் உணர முடிகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் அனைவருக்கும் 'கிராப்புத் தலை'!

ஒரு காட்சியில் 'ஒட்டுப்பொறுக்கி' யாக வரும் நாயகன் வேலை தேடி வேறூர் செல்கிறார். அங்கே மேட்டுக்குடிக்காரர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து விட்டதால் பிரம்படியும் வாங்குகிறார். ''ஏண்டா, மேட்டுக்குடி சேர்ல தான் உக்காருவியோ?" எனக்கேட்டு பிரம்பால் அடிக்கிறார் கடைக்காரர். இதற்குப் பின்னால் வரும் வசனம் தான் ஹைலைட் "உனக்கு மேல் சட்டை வேற!". இங்கே தான் எனக்கு ராமசாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார் "




துணிவிலை உயர்ந்ததேன்?
புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா அதனாலதான்.


அப்போதெல்லாம் ஏதாவது வேலை செய்தால் செய்தவர்களுக்கு கூலி என்று எதுவும் கிடையாது. ஒருவேளை சோறு போட்டு ஓரிரண்டு அனாக்காசுகளை கொடுத்தனுப்பி விடுவார்கள். அதனை அப்படியே காட்டியிருக்கிறது 'ஒட்டுப் பொறுக்கி' கூலி கேட்டவுடன் 'காலம் கெட்டுக்கெடக்குது போல, கூலிகேக்குறான் கூலி, சவுண்டிப் பயலுக்கு நெனப்பப் பாரு' என்று திட்டு விழுகிறது

அப்போது தான் 'கங்கானி' வருகிறார். அதென்னங்க பேரு கங்கானி? அதாவது அந்தக்காலத்தில் அடிமைகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று பார்க்க கண்காணிப்பாளரை ஆங்கிலேயர்கள் நியமித்தார்கள். அவரைக் 'கண்காணி' வர்ராரு பாரு, கண்காணி கண்காணி'  என அழைத்துப் பின்னர் கங்கானி ஆகிப்போனார்.

இந்த 'கங்கானி' கதாபாத்திரமும் அவர் அடிமைகளை நடத்தும் முறைகளும் இந்தக் காலத்திலும் நம் மக்கள் அப்படித்தானே வாழ்கிறார்கள் என்று பொருத்திப் பார்க்க வைக்கிறது.

கங்கானி சகல அதிகாரங்களும் படைத்தவர். வேலைக்கு ஆளெடுப்பார். வெள்ளை துரைமார்களிடம் ஆதாயம் பெறுவதற்காக தன் மக்களையே நய்யப் புடைத்து வேலை வாங்குவார். கொடுமையை எதிர்த்துச் சண்டை போட்டால் வேலை போய்விடும். வெள்ளைக்கார துரைமாருங்ககிட்ட அவர் அசிங்கமாக மண்டி இட்டாலும் நம்மிடம் அதிகாரத்தைக் காட்டி அடக்கியாள்வார். அடிமைகள் அடங்கி ஒடுங்கி தங்கள் கால் வயிற்றுக் கஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி வேலை பார்த்து கங்கானிக்குப் பயந்து வெள்ளைக்கார துரைமார்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்

சரி அப்படிப்பட்ட அடிமைத்தனங்கள் இப்போது ஒழிந்து விட்டது தானே! சுதந்திரம் பெற்ற பிறகு நம் நாட்டில் அத்தகைய அடிமை வாழ்க்கை இல்லை தானே என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இன்னும் நாம் அடிமைகள் தான். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற ரீதியில் நம்மை பீடித்த அடிமை முறை இன்றளவும் தொடர்கிறது என்பதை சில ஒப்பீடுகள் மூலம் அறியலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அநேகமாக எல்லா நாடுகளுமே விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்று சுய ஆட்சி முறையை உருவாக்கியிருந்தன. ஆனால் அதனை தகர்த்து மீண்டும் அனைத்து நாடுகளையும் அடிமைகளாகவே வைத்திருக்க மேலை நாடுகள் கொண்டு வந்த நயவஞ்சக திட்டம் தான் உலகமயமாதல். நாடுகளை உலகமயமாதலில் இணைத்ததன் மூலம் இவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே மற்ற நாடுகளை அடிமைத்தளையில் சிக்க வைத்தனர் எனலாம்.

அதன் அடையாளம் தான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் - பிபிஓ மற்றும் இதர அவுட் சோர்ஸிங்க் நிறுவனங்கள் - அதிலும் நேரடியாக வெளிநாட்டவர்களால் இந்தியாவில் துவக்கி அவர்களாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாமே இன்று தேயிலை தோட்டங்களைப் போலத்தான் இருக்கின்றன.

மேனேஜர் தான் கங்கானி, விரல் தேய கணிப்பொறியில் தட்டுதட்டென்று தட்டி வேலை செய்யும் பணியாளர்களெல்லாருமே அடிமைகள்.

இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களெடுப்பதும் 'பரதேசி' யில் கங்கானி வேலைக்கு ஆள் சேர்ப்பது போலத்தான்....

'கைநிறைய சம்பளம், ஏசி ரூம்ல வேலை, மதியம் கேண்டீல சோறு, நெனச்ச நேரம் டீ காபி குடிச்சிக்க வெண்டிங் மிஷனும் குடுத்துருவோம்'

'வேலை ரொம்ப கடிசுங்களா சாமி?'

'ஒன்னுமில்லைப்பா, ஒக்காந்த எடத்திலேருந்து கம்ப்யூட்டர்ல டைப் பண்ணினா போதும்!'

'அதெல்லாம் சரி, வீட்டை விட்டு ரொம்பதூரம் போனும்னா எப்டி வர்ரதாம்?' 

"அக்காங்க், நட மாடு மூத்தரம் பேஞ்ச மாதிரி குறுக்க நெடுக்க கேள்வி கேட்டுக்கிட்டிருந்தா வேலை கெடக்காம திண்டாட வேண்டியது தான் - இத பாரு, வீட்டு வாசல்ல காரு வந்து கூட்டிட்டு போகும், திரும்பி எத்தனை ராத்திரியானாலும் வீட்டு வாசலுக்கே வந்து எறக்கி விட்ருவாங்க.'

"சாமி, இதரப் படிகள் எல்லாம் நல்லா தருவாங்களா?"

 'அதெல்லாம் நல்லா குடுப்பாங்கடா, கெடக்கிற சம்பளத்துல லோனப் போட்டு வீடு வாங்கு, கல்யாணம் பண்ணு, தெறமை இருந்தா மிஞ்சின காசு செலவு பண்ணி இன்னொன்ன சேத்துக்கோ'

'ஹி ஹி ஹி சாமி எப்டி சிரிப்பு சிரிப்பா பேசுது....'

'அது மட்டுமில்லடா, அது போக அடிக்கடி கம்பெனி பார்ட்டிங்கல்லாம் இருக்கும், தொரமாருங்களோட சேந்து குடிக்கற கௌரதி  எல்லாம் கெடைக்கும்ல

'துணிஞ்சவனத் தான்டா அதிஷ்டம் தேடிவரும், சடசடன்னு அப்பாய்ன்மெண்ட் லெட்டர்ல கையெழுத்தைப் போட்டு வேலைல சேரு

இப்படியெல்லாம் ஆசைகாட்டித்தான் வேலைக்கு சேர்ப்பார்கள். சேர்ந்த பின்னர் தான் தாங்களும் தேயிலைத் தோட்டத்து அடிமைகள் என்பதை தெரிந்து கொள்வார்கள்.

இங்கே மேனேஜர் தான் கங்கானி, கம்பியூட்டரில் வேலை செய்பவர்கள் தான் தேயிலை தோட்டத்து அடிமைகள். 'எலையப் பறிக்கனும், அவ்ளோதான் வேலை' என்று சொல்லிவிட்டு ' ஒரு நாளைக்கு 30 கூடை பறிக்கனும்' என்று டார்கெட் சொல்வதைப் போல, கம்பியூட்டர்ல டைப் பன்றது தான் வேலை என்று சொல்லிவிட்டு, "ஒரு நாளைக்கு இவ்வளவு வேலைகள் முடிக்கனும், ஒரு மாசத்துல இத்தனை ப்ராஜெக்ட் ரெடி பண்ணனும்" என்று விழி பிதுங்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பார்கள்.

இயலாதவர்கள் ப்ராஜெக் மேனேஜர் அல்லது டீம் லீடர் என்கிற கங்கானியால் கடுமையாக வசைபாடப் படுவார்கள். பெர்பாமன்ஸ் சரியில்லை என்று தொடர்ந்து மிரட்டப்படுவார்கள். காலை மாலை இரவு என ஷிஃப்டுகள் பல வாங்கி வேலை செய்ய வைப்பார்கள். சனி ஞாயிறு என்று வித்தியாசம் இல்லாமல் உழைக்கச் செய்வார்கள். சொந்தபந்தம் குடும்பம் வீடு எல்லாம் அந்நியமாகிவிடும்.

தொடர்ந்து அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ ஆஸ்திரிலேலியாவிலோ உட்கார்ந்து கொண்டு நம் கம்பெனிக் கங்கானிகளிடம் வெள்ளையர்கள் அதிகாரம் செய்ய அதே கோபத்தை கங்கானி சொந்த நாட்டு அடிமைகளிடம் கொட்டித் தீர்ப்பார்

இவ்ளோ லேட் பண்ணினீங்கன்னா 'ஜான் இக்பால் எமண்டீஸ்' க்கு யார்யா பதில் சொல்றது? என்னை எப்டி கத்துறான் தெரியுமா? என்ன பன்னுவீங்களோ தெரியாது, இன்னிக்கு முடிச்சாகனும், ஒருத்தரும் வீட்டுக்கு போகக்கூடாது" என்று கங்கானி கத்துவார்.

அதிக காசுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கிட்டேனே சாமி என நொந்து கொள்ளும் அளவுக்கு சக்கையாகப் பிழிந்து விடுவார்கள்

'சார்,வீட்ல விஷேஷம் ரெண்டு நாள் லீவு வேணும், ஊருக்கு போகனும்' லீவெல்லாம் கேக்காத, ஆளே இல்லை, எவ்ளோ வேலை, யார் முடிப்பா, போய் நைட் ஷிஃப்ட் கண்டினியூ பண்ணு' என்று அதட்டுவார்கள். லீவு கிடைக்காது.

அடிமைகளுக்கு விஷேஷமாவது பண்டிகையாவது. தீபாவளி பொங்கல் என்றாலும் அலுவலகம் வரச்சொல்லுவார்கள்.

மீறி விடுப்பெடுத்தால் அவ்ளோதான், அடுத்தடுத்த நாட்களுக்கு கடுமையான சொற்கள் வந்து விழும், குற்றங்கள் நிறைய கண்டுபிடிப்பார்கள்.

'நீ பாட்டுக்கும் சொன்னத கேக்காம லீவு போட்டுட்ட, உனக்கு லாஸ் ஆஃப் பே தான். உன் லீவு அப்ரூவ் பண்ணமாட்டேன்.' என்பார் கங்கானி.

இப்படி ஓரிரண்டுநாள் வீட்டு விசேஷங்களை பண்டிகைகளைக் கூட கொண்டாட முடியாத அடிமை வாழ்க்கை தொடர்கதையாகிவிடும்.

வேண்டாமடா இந்தப் பிழைப்பு என்று வேலையை விட்டு நீங்கிக் கொள்கிறேன் என்று கடிதம் கொடுத்தால் சொல்லுவான் 'தம்பி, மூணு மாசம் நோட்டீஸ் பீரியட்' அது வரைக்கும் வேலை செய்யனும், இல்லன்னா மூணு மாச சம்பளத்தை கம்பெனிக்கு கட்டிட்டு போ' என்பான். பணம் கட்ட முடியாதவன் உடனடியா வேறு வேலைக்கும் சேர முடியாமல் அங்கேயும் இருக்க முடியாமல் கொத்தடிமையாக சிக்கிக் கொண்டதை உணர்ந்து கொள்ளும் போது அவனது எதிர்காலமே இருண்டது போல ஆகிவிடும்

இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலரது நிலைமையும் அவர்கள் சக்கையாகப் பிழியப்படுவதையும் கேட்கும் பொழுது எனக்கு ஒட்டுப்பொறுக்கியின் கடைசி ஓலம் தான் நினைவுக்கு வரும்.

'நாதியத்த ஜென்மம் நாயம்மாமாமாறே'

பாரத நாட்டினர் இன்னமும் வெள்ளையர்களுக்கு கொத்தடிமைகளாகத்தான் இருக்கிறோம். இடமும் வேஷமும் தான் மாறியிருக்கிறது. சுதந்திரம் வாங்கிய பிறகும் உலகமயமாதல் என்கிற நயவஞ்சக திட்டத்தின் மூலமாக நாம் தொடர் அடிமைகளாக்கப்பட்டிருக்கிறோம். பரதேசி படத்து அடிமைகளுக்கும் தற்போதைய வெள்ளைக் கழுத்துப்பட்டை அடிமைகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். துரைமார்களோ, கங்கானிகளோ கைநீட்டி அடிக்க முடியாது என்பது மட்டும் தான். மற்ற எல்லா சித்திரவதைகளும் அப்படியே தான் உள்ளன.

இவர்கள் நவீன கால ஒட்டுப் பொறுக்கிகள்.


1 comment:

Arun Ambie said...

என் நண்பன் வேலை செய்யும் MNC கம்பெனியில் வெள்ளைக்கார துரைமார்களுக்கு ஒரு தனிப்பட்ட கழிப்பறையும் இந்திய அடிமைகளுக்கு ஒரு தனியான கழிப்பறையும் இருக்கிறதாம். அடிமை ஒருவன் அவரசம் தாளாமல் துரைமார் கக்கூசுக்குள் போய்விட்டானாம். துரைமார்கள் அதைப் பார்த்துவிட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்து அதன்பின்னரே உபயோகித்தார்களாம்.

நண்பனது இம்மீடியட் கங்காணி முதல் தலைமைக் கங்காணி வரை அனைத்து அடிமைகளையும் அழைத்து துரைமார் கக்கூசுக்குள் போவது தவறு என்றும் எந்த அவசரம் என்றாலும் கவனமாகத் தமக்கான கக்கூசுக்கே போக வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு உள்ளே போன அடிமையை இனி வாழ்வில் இயற்கை உபாதையே வரவேண்டாம் சாமி என்று கதறும் அளவுக்கு ஏசினார்களாம்.

இந்திய மக்களால் இந்திய மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொற்றவனே அடிமை எனில் குடிகள் கூனிக்குறுகாதிருக்க முடியுமா?