"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."
அகண்ட தேகமும், மிகப் பெரிய உருவமும், முகத்தை மறைக்கும் மீசையும் சிவந்த கண்களும் கொண்ட எமன் நசிகேதனின் பிடிவாதமான இந்த நிலையை கண்டு திகைப்படைந்தான். நசிகேதனை அமைதியாக உற்றுப் பார்த்தான்...
அவனது பிடிவாதத்தைத் தளர்த்த கடைசி முயற்சியாக சிலவற்றைக் கூறினான். "நசிகேதா! மரணத்திற்கு அப்பால் உள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விரும்புவதற்கு பதிலாக, உலகில் அடைவதற்கரிய காரியங்கள் என்னவெல்லாம் உண்டோ எல்லாம் கேள்! சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன்.
மானிடர்களுக்கு கிடைக்காத, ஆண்களை மயக்குகின்ற தேவலோகப் பெண்கள் எல்லோரையும் தருகிறேன். அவர்கள் உனக்கு வேண்டிய அளவு பணிவிடைகள் செய்வார்கள். இப்படி அனைத்தையும் பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே!" என்றான் எமதர்மன்.
ஆனால் நசிகேதனோ "மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தில் ஆற்றலையும் வீனாக்குகிறது. வாழ்க்கையோ குறுகியது.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் இது போன்ற சிற்றின்பங்களில் மூழ்கி தன் ஆற்றல்களை இழக்ககூடாது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல், பாடல் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும். நிலையற்றதை அறியவும் அடையவும் நான் விரும்பவில்லை. என்றும் நிரந்தரமான உண்மை எதுவோ அதையே அறிய விரும்புகிறேன்" என்றான் தீர்க்கமாக.
பொதுவாக எந்த ஒரு குருவும் தம்மிடம் ஞானம் கற்க வருபவர்களுக்கு அதைப் பெறும் தகுதி இருக்கிறதா என்பதை அவர்களை வைத்தே சோதிப்பார்கள். அவ்வாறு சோதித்து குருவுக்கு, இவன் இதைக் கற்கத் தகுதிபடைத்தவன் என்ற திருப்தியடைந்தால் மட்டுமே அவனுக்கு ஞானத்தைப் போதிப்பார். அது போல எமதர்மனும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் ஆசை காட்டியும், கேட்காத பல வரங்களைக் கொடுத்தும் நசிகேதன் வாங்க மறுத்து விட்டான்.
எனவே எமதர்மனுக்கு நசிகேதன் மீது நம்பிக்கை வந்தது. இவனுக்கு மரணத்தைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் என்று தீர்மானித்தான்.
"நசிகேதா! நீ பல வழிகளில் திசை திருப்பியும் அழியும் அற்பப் போருட்கள் வேண்டாம் என்றும் நிரந்தர உண்மையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்க்கமாய் இருக்கிறாய். உனக்கு வரம் கொடுப்பேன் என்று உறுதியளித்ததாலும் உன் உள்ள உறுதியை உணர்ந்து கொண்டதால் உனக்குச் நான் எடுத்துரைக்கிறேன். கவனமாகக் கேள்" என்று எமதர்மன் மரணத்திற்கு அப்பால் நடப்பன பற்றி நசிகேதனுக்கு கூறத்துவங்குகிறான்.
எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாகச் சொல்லி விடாமல் அதற்கு மனத்தைத் தயார் படுத்த வேண்டும். அவ்வகையில் மரணத்தை எதிர் கொள்வது பற்றியும் வாழ்க்கையின் சூட்ஷமத்தைப் பிரித்தரிந்து நடந்து கொள்ளுதல் பற்றியும் முதலில் எடுத்துக் கூறுகிறான் எமதர்மன்.
"பிரித்தறிந்து வாழ்! நசிகேதா, வாழ்க்கையின் இரு வேறு சுகங்கள் இருக்கின்றன. அக வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் புற வளர்ச்சியால் பெறப்படும் மேன்மையும் வெவ்வேறு சுகங்களைக் கொடுக்கிறது. அதாவது மனத்தை அமைதிப்படுத்தி இறைவனை நாடுவதில் மனம் மேம்படுமானால் அந்த மனத்தின் மூலம் கிடைக்கும் அமைதி ஒரு சுகமாகும். உடல் சார்ந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொருள், போகம், ஆடல், பாடல், காமம் போன்றவற்றை அடைவதில் முன்னேறி புற வளர்ச்சியால் அனுபவிப்பது ஒரு சுகமாகும். இவற்றில் அக வளர்ச்சி பெறுவதே மேலானது.
மேலானது வேறு, சுகம் தருவது வேறு. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கின்றான்."
அதாவது அக வளர்ச்சியை நாடுபவன் மேலானதை ஏற்றுக் கொள்கிறான் என்றும் புற வளர்ச்சியான உடல் அனுபவிக்கும் சுகங்களை நாடுபவன் லட்சியத்திலிருந்து விலகிவிடுகிறான். அவன் ஆத்மாவை அறிவத்ல்லை.
மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான். சுகம் தரும் உலக இன்பங்களை விட்டுவிட்டு மெலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.
இப்படிச் சொன்ன எமதர்மன் நசிகேதன் எவ்வாறு பிரித்தறிந்தான் என்றும் விளக்குகிறான். "நசிகேதா! நீயோ நன்றாகச் சிந்தித்து, செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டாய். எந்தப் பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்க வில்லை. மாறாக இறைநெறியில் நாட்ட முள்ளவனாக நிரந்தரமான மேலான பாதை எதுவோ அதைப்பற்றி அறிந்து கொள்ள முடிவெடுத்தாய்" என்றான் எமதர்மன்.
மேலும் இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை. நீ பாதை மாறாமல் நிரந்தர உண்மை அறியவே விரும்பினாய் என்று நசிகேதனை உயர்வாகப் பேசினான் எமதர்மன்.
பிறகு மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான்.
(நாமும் கேட்போம்...பொருத்திருந்து)
மரணத்திற்கு அப்பால் - 7
4 comments:
தொடருங்கள், அறிவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
thanks anony.
நல்ல முயற்சி. 1-6 படிச்சு முடிச்சேன். மீதியையும் படிக்கணும்
நன்றி விருட்சம். நீங்கள் விரும்பி படிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அது எனது பாக்கியம். நன்றி மீண்டும் வருக.
அன்புடன்
ராம்
Post a Comment