Showing posts with label சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். Show all posts
Showing posts with label சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். Show all posts

Sunday, March 23, 2014

ஜ்யோதிஷம் வேதபுருஷனின் கண்!!



கண் இல்லாதவன் குருடன், கண் எதற்காக இருக்கிறது? பக்கத்திலுள்ள பொருட்களைக் கையினால் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தூரத்திலுள்ளதன் ரூபம் தெரிய வேண்டுமானால், அப்பொழுது கண்ணினால் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இடத்திலே தூரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நம்முடைய கண் எப்படி உபயோகப்படுகிறதோ, அப்படிக் காலத்திலே தூரத்தில் (அதாவது பல வருஷங்களுக்கு முன்னால் அல்லது பல வருஷங்களுக்கு அப்புறம் ) உள்ள க்ரஹ நிலைகளைத் தெரிந்து கொள்ள ஜ்யோதிஷ சாஸ்திரம்தான் உதவி புரிகிறது. இன்றைக்கு சூரியனும் சந்திரனும் 

மற்ற கிரஹங்களும் எங்கே இருக்கின்றன என்பதைப் பிரத்யக்ஷத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கண்ணில்லாவிட்டாலும் கையால் தடவியே கிட்டத்தில் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வதுபோல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப்படாமல் நம் கண்ணாலேயே பார்த்து, காலத்தில் கிட்டே, அதாவது நிகழ்காலத்தில் உள்ள கிரஹ நிலைமைகளை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் 50 வருஷத்துக்கு முன்னால் அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும்!

கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோதுகூட அது பச்சையா, சிவப்பா, வேறு என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை அறியக் கண் வேண்டியிருக்கிறது. இதே போல, பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷந்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆகவேதான், ஜ்யோதிஷத்தை வேத புருஷனுக்குக் கண் என்றார்கள். வைதிகக் காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன க்ரஹம் இன்னின்ன க்ரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. 'நாள் பார்ப்பது', 'முஹ§ர்த்தம் வைப்பது'என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது?இதனால் ஜ்யோதிஷம் நேத்ர ஸ்தானத்தைப் பெறுகிறது.

ஜ்யோதிஷத்துக்கு 'நயனம்' என்று ஒரு பெயர் உண்டு. 'நய'என்றால் அழைத்துக் கொண்டு போவது (to lead) . கண்ணில்லாதவனை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது?அதனால் கண்தான் அழைத்துப் போகிற லீடராக இருக்கிறது என்பது தெரிகிறது!வேத கர்மாக்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்தக் காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷமே.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Saturday, October 12, 2013

நவராத்திரி காலத்தின் சிறப்பம்சம்!!




ஒரு குறிப்பிட்ட பக்‌ஷம் முழுவதுமே மனோலயத்துக்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது சரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம் தான்.

இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஓரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கேயோ நம் ஊரைவிடப்பத்து, பன்னிரண்டு டிகிரிக்கு மேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. 

நம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்யப்பிரதேசத்திலும் மான்ஸூன் மழை கொட்டுகிறது. 

இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுசாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய் குளிரில் நடுங்கவைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் காஷ்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமரி என்று எல்லா ஊர் Weather report- ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிக்கள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்ததுபோல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில்இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், எல்லாரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம்.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Tuesday, July 23, 2013

உலகமெல்லாம் வேதமதம்!



மிகமிகப் பழங்கால புதைபொருள் ஆராய்ச்சிகளை பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக கிறிஸ்துப்பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்து இரண்டு அரசர்கள் செய்துகொண்ட உடன்படிக்கை சாசனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் 'மித்ராவருண' சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாக சொல்லி இருக்கிறது. மித்ரா வருணர்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் 75% சமஸ்கிரத மூலத்திலிருந்து வந்ததாக தெரிகிறது. அந்நாட்டின் 'ராமேஸஸ்' என்ற ராஜ பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

பூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஒர் உற்சவம் நடக்கிறது. அதற்கு 'ராமஸீதா' என்று பெயர். அங்கே பூமியை வெட்டும் இடங்களிலெல்லாம்பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது. ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்தும் முன் அங்கு ஆஸ்டெக்ஸ் (Aztecs) பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். ‘(Aztecs)’ இது 'ஆஸ்திக' என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். 'இனன்' என்பது சூரியமனுடைய பெயர். 'இனகுல திலகன்' என்று ராமனைச் சொல்கிறோமே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்த்து. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொருவர் நெற்றியிலும் மூன்றாவ்து கண் வரைந்திருக்கிறது.

போர்னியோ தீவைல் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று ஒரு பெரிய காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியது போல் ஒரு சாஸனம் அகப்பட்டது. அதில் இன்ன மகா ராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa Inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஷ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிலிருக்கிறார்கள்.

இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். 'ஸகரர்கள்யாகக் குதிரையைத் தேடிப் பாதாளத்துக்கு வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது  உண்டான கடலே ஸகரர் பெயரில் 'ஸாகர' மாயிற்று. கடைசியில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட்டார்'. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம் -- (மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக -- கலிபோர்னியாவாக -- இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse Island), சாம்பல் தீவு (Ash Island) இவை உள்ளன.

ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது, ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம் தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Sunday, October 23, 2011

எண்ணங்களையும் அளவுடன் எண்ணுக!


'திலுமே கணக்காக இருக்கவேண்டும்' என்று பலரும் கூறுவார்கள். பண விஷயத்தில் பெரும்பாலும் கணக்காகத்தான் இருக்கிறோம். ஆனால் கணக்காயிருக்க வேண்டியது பண விஷயத்தில் மட்டும் தானா?.

பணம் மட்டுமில்லை. வார்த்தைகலை உபயோகிக்கும் போது ஒரு சொல் கூட அதிகமாகக் பேசிவிடக்கூடாது. அலவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.

வளவளவென்று பேசாமல் சுருக்கமாச் சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டால் புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீண் ஆகாமல் இருக்கும். எத்தனையோ சண்டை சாடிகளும் மிச்சமாகும்.

'வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியுமா? என்று பாமர ஜனங்கள் கூடக் கேட்கிறார்கள். திருவல்ளுவரும் எதைக் காக்கா விட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

ஆனால் இப்போது உலகம் முழுக்க ஒரே பேச்சு யுகமாகத்தான் ஆகியிருக்கிறது. நியூஸ் பேப்பார்கள் எல்லாம், 'அவர் பிரசங்கம்,' 'இவர் பிரசங்கம்' என்று தான் போட்டு நிரப்புகின்றன. காரியத்தில் ஏதாவது நடக்கிறதா என்றால் இல்லை. காரியமாக எதுவும் நடக்காமல் இருக்கிறது என்பதை மறைக்கவே நிறையப் பேசுகிறார்கள்.

பணம் பேச்சு, அப்புறம் நாம் செய்கிற காரியம் எதிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான கரியங்களைச் செய்யவே கூடாது. ஆத்ம சிரேயஸுக்கோ யோக க்ஷேமத்துக்கோ பிரயோஜனம் இல்லாத காரியங்களில் ஈடுபடவே கூடாது.

எல்லாவற்றையும் விட முக்கியம் எண்ணத்தில் மனஸை ஓடவிட்டுக் கொண்டே இருக்காமல் இது இதைத்தான் நினைப்பது என்றும் கணக்காக இருக்கவேண்டும். கணக்கில்லாத மன அமைதிக்கு அதுவே நல்லது.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்



Thursday, August 5, 2010

என்னை மட்டுமே நினைத்திரு!


'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்து விடக்கூடாது. வியாபர வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகீக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை. பணத்திற்காக பறக்காத போது பகவத் சிந்தனைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்கியமும் தன்னாலேயே உண்டாகும்.

ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.

தர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றைப் தீர்கமாகப் பின்பற்றி அதன் வழி நடப்பதே மிகப்பெரிய நற்காரியமாகும்.

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குக் குறுக்கு வழி இல்லையா? ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. "என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்து விடுகிறான்" என்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைத்திருக்கிறார். "நாஸ்தி அத்ர ஸம்சய:" - இதில் சந்தேகமே இல்லை என்று காரண்டியும் கொடுக்கிறார்.

"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


Saturday, December 19, 2009

மனத்தினால் நன்மையையே நினைப்போம்!


நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் செய்யும் கெட்ட காரியம், வாயால் புரளிப் பேசுகிறோம், மனத்தினால் கெட்ட நினைவுகள்
கொள்கிறோம், பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்
பழகிக்கொள்ள வேண்டும்.

சம்பாதிப்பதற்கே பொழுதெல்லாம் போய் விடுகிறது, இதற்கெல்லாம் நேரம் ஏது
என்பீர்கள். சம்பாதிப்பது குடும்பஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால்
யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லையே!

வீண் பேச்சு, பிறரைக் கேலி செய்தல், வேடிக்கை பார்த்தல், நியூஸ் பேப்பர்
விமர்சனம் இவற்றில் எவ்வளவு நேரம் வீணாகிறது.

அந்த நேரத்தையெல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையில் செலவழிக்கலாமே! தனியாக நேரம் ஒதுக்காவிட்டாலும் பஸ்ஸிலோ ரயிலிலோ பாதுகாப்பான முறையில் அமர்ந்து பிரயாணிக்கும் போது இறைவனைப் இறைவனை தியானித்துச் செல்லலாமே!

ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராது.
மறு உலகத்திற்கான செலாவனி இறைவனின் நாமமும் இறைசிந்தனை மட்டும் தான்.

மனசு பகவானின் இடம். அதை குப்பைத் தொட்டியாக்கி வைத்திருக்கிறோம்.
அதை சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அதில் அமரவைத்து நாமும் அமைதியாக
அமைந்து விட வேண்டும்.

உலகமே மூழ்கிப்போனாலும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் நிஜமாகவே உலகம் மூழ்கும் போதும் நமக்குக் கைகொடுப்பது இதுவே ஆகும்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆனால் நம்மைப் போன்ற குடும்பஸ்தர்களுக்கு மனதை கட்டுப்படுத்த எந்த
அளவுக்கு முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஜென் கதை
தான் ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்.

நான் இப்போதைக்கு இந்த அளவிற்குத் தான். நீங்கள் எப்படி?