Wednesday, September 2, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 1


"நல்லது செய்தால் நல்லது நடக்கும்" என்று சென்ற பதிவில் பார்த்தோம். நல்லதே செய்யுங்கள், அவை அலையாகப் பரவி உங்களையே வந்து சேரும் என்பதை வலியுறுத்தும் ஒற்றை வாசகம் அது. அதே நேரத்தில் தீயது செய்யாதீர்கள் என்பதற்கும் நமது கலாச்சாரத்தில் சொல்லப்படும் ஒற்றை வரி தான் "தன்வினை தன்னைச் சுடும்".

ஆம் நாம் செய்யும் நன்மையும் தீமையும் நேரடியாக இல்லாவிட்டாலும் யார் மூலமாகவோ கூட நமக்கே திரும்பி வந்து சேரும் என்பதை நமது தர்மம் மிகவும் வலியுறுத்துகிறது. உணர்வுகள் அலைவடிவாக ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவும் கண்ணுக்குத் தெரியாத அந்த இயக்கத்தை இதைவிட யாரும் எளிமையாகச் சொல்லி விட முடியாது.

பட்டினத்தார் வசனத்திலும் முக்கியத்துவம் பெரும் வசனம் "தன் வினை தன்னைச் சுடும்".

எந்த தத்துவமும் நிஜ வாழ்க்கையில் கண்முன்னே நிரூபனம் ஆகும் போது தான் அந்தத் தத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டாகிறது. அப்படி நிஜ வாழ்க்கையில் இந்தத் தத்துவம் நிரூபனம் ஆனதை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

ஒருவரது வினை அவரைச் சுட்டது. அவரது பெயர் " மைக்கேல் ஓ டையர்". ஆம், 1919 ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாபின் கவர்னராக பணியாற்றி வந்தவர் மைக்கேல் ஓ டையர்.

வழக்கமாக இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை விட அதிகமாகவே வெறுப்பையும் அடக்குமுறை மனோபாவத்தையும் கொண்டிருந்தான் இந்த மைக்கேல் ஓ டையர். ஜெனெரல் ஓ டையர் என்ற கொலைகாரனுக்கு அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஊக்கம் அளித்தும் அவன் செய்தது சரிதான் என்றும் அவனுக்கு வக்காலத்து வாங்கியதும் தான் இவன் செய்த வினை. அவனது வினை அவனைச் சுட்டது.

அன்று 1919 ஏப்ரல் 13, ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் அப்பாவி பொதுமக்கள் கையில் ஆயுதங்கள் இல்லாதவர்களாய் நாம் அமர்ந்திருக்கும் இந்த பூமி நமக்கே சொந்தம் என்பதை வெள்ளையர்களிடம் உறுதியாகச் சொல்ல கூடியிருந்த இடம்.

இறுதியான கூட்டமாக அவர்களுக்கு அது மாறப்போவதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சட்ட விரோதமாக கூட்டத்தைக் கூட்டி அரசுக்கெதிரான புரட்சி நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுடனும் கூடியிருப்பவர்கள் மனிதர்கள் அல்ல ஆட்டு மந்தைகள் என்ற மமதையுடனும் உள்ளே வந்தான் ஜெனரல் டையர்.

பீரங்கி நுழைய முடியாத குறுகிய பாதையாதலால் துப்பாக்கியும் தோட்டாக்களையும் தொங்கவிட்டபடி 90 பேர் உள்ளே நுழைந்தார்கள். மிருக வெறியுடன் கூட்டத்தைப் பார்த்த டையர் மான் கூட்டமென அமர்ந்திருந்த அமைதியான மக்களைத் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தெடுக்கச் சொன்னன்.

துப்பாக்கி வாயிலிருந்து துப்பப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களைத் தப்பவிடாமல் தாக்கிக் கொன்றது. ஆயிரக்கணக்கானோர் அங்கேயே மடிந்தனர். குண்டுகளுக்கு பயந்தோடிய பலர் பாழும் கினற்றில் பாய்ந்து குதித்தனர். சிலர் மடிந்தார்கள், சிலர் பிழைத்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை ரத்தச் சகதியில் புரட்டி எடுத்தவன், இனியும் கூட்டம் கூடுவது பற்றி யோசித்தீர்களானால் எஞ்சியவர்களும் மடிவீர்கள் என்று மிரட்டி சென்றான்.


பிறகு நடந்தது என்ன? பஞ்சாப் மாகானத்தின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டையர், "ஜெனெரல் ரெஜினால்ட் டையர் செய்தது சரியே!" என்று அவனுக்கு ஆதரவு அளித்தான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மைக்கேல் டையரை கண்டித்தது. தவறாக படைகளை வழிநடத்தி பெருமளவு கொலை நிகழக்காரணாக இருந்தாய் என்று கூறி அவனை கவர்னர் பதவியில் இருந்து நீக்கி இந்தியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த அவனுக்கு தண்டனை?

நாடு திரும்பிய மைக்கேல் ஓ டையருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவன் மகிழ்ச்சியாக இருந்தான். சொந்த நாட்டில் மதிப்பும் மரியாதையும் கொண்டு சுதந்திரமாக நடமாடினான். தனது ஆசா பாசங்களுடன் அற்புதமாக வாழ்ந்து வந்தான். பெரிய மனிதர்களுடன் கூடிக் குலாவுவதும், மேடையில் கெளரவமாக நின்று பேசுவதும் என்று காலங்கள் சென்றன.

அன்றும் அப்படித்தான் 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர்.

பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான்.

தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே உயர்ந்தெழுந்தது 40 வயது மதிக்கத்தக்க இளைஞனின் உருவம். தனது கைத்துப்பாக்கியை நீட்டி ஜனரல் டையரை நோக்கி சுட்டது அந்த உருவம்.

தோட்டாவால் பாதகம் செய்தவன் தோட்டாவாலேயே மடிந்தான். ஆம் டையர் கிழிந்தது.

கிழித்தவன் பெயர் "உதம் சிங்". தெய்வம் நின்று கொல்லும்.



தெய்வத்தை பற்றி நாளை...

தன்வினை தன்னைச் சுடும்-2

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


தியான நிலையே மிக உயர்ந்த நிலை என்று யோகிகள் கூறுகிறார்கள். மனம் புறப் பொருட்களை ஆராயும் போது அந்தப் பொருட்களுடன் தன்னை

ஒன்றுபடுத்திக் கொள்கிறது. அந்தப் பொருட்களின் மயமாக ஆகிவிடுகிறது. அதாவது நீ எதை அதிகம் சிந்திக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கூற்றுப்படி மனம் செயல்படவே செய்யும்.

பண்டைய இந்தியத் தத்துவ ஞானி ஒருவர் இதற்கு ஓர் உவமை கூறியுள்ளார்: மனிதனின் ஆன்மா ஒரு பளிங்கு போல் உள்ளது. பளிங்கு தன் அருகில் உள்ள எந்த நிறத்தையும் ஏற்றுக் கொள்கிறது அது போலவே, ஆன்மா எதனுடன் சேர்ந்தாலும் அதன் தன்மையை அடைகிறது. நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி, நாம் யார் என்பதை மறந்து விட்டோம். புற அழகில் மயங்கி அகத்தைப் பற்றி நினைக்கத் தவறுகிறோம்.

அழியக்கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன.
நமது கவலை, சஞ்சலம், தொந்தரவு, தவறு, பலவீனம், தீமை எல்லாம் நாம் உடம்பே என்று கருதும் ஒரு பெரும் தவறிலிருந்தே உண்டாகின்றன.

ஆக தியானம் இந்த மனம் வேறு உடல் வேறு என்ற நிலையை உணர்த்தும் அற்புத மூலமாக இருக்கிறது. உங்களுக்கு தியானத்தில் மூலத்தைச் சொல்லித்தருகிறேன். நல்லவைகளை நினைத்து தியானித்தால் நன்மையே உண்டாகும்.

இதோ தியானிக்க சூத்திரம்..

"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவரான அந்தப் பரம் பொருளின் மகிமையைத் தியானிக்கிறேன். அவர் என் உள்ளத்தை ஒளிரச் செய்வாராக!"

மேலே நீங்கள் படித்தது காயத்ரீ மந்திரத்தின் திரண்ட பொருளாகும்.

"ஓம் பூர்புவஸ்வ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி! தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

இதனைப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை தியானம் செய். உனக்குக் கிடைக்கும் அனுபவக் காட்சிகளை உன் குருவைத் தவிர யாரிடமும் சொல்லாதே.

இயன்றவரை குறைவாகப் பேசு.

நல்லவற்றின் மீது உன் நினைவுகளை வைத்திரு. நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

புனிதமானவற்றை நீ தியானிப்பது எல்லா மன அழுக்குகளையும் எரித்துவிட உதவும்.

- சுவாமி விவேகானந்தர்.