Showing posts with label விவேகானந்தர். Show all posts
Showing posts with label விவேகானந்தர். Show all posts

Tuesday, January 12, 2010

விவேகானந்தரின் லட்சியம்! - துக்கங்களைக் கண்டு அழாதே!


இன்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 148 ஆவது பிறந்தநாள்!


சுவாமி விவேகானந்தர் தனது வாழ்வின் லட்சியமாக இவ்வாறு சொல்கிறார்

"மக்களுக்கு அவர்களுடைய தெய்விகத் தன்மையை எடுத்துப் போதிப்பதும் வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும் தான் என்னுடைய லட்சியம்."

இளைஞர்களை வழிநடத்தும் ஓர் பிரகாசமான வழிகாட்டியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர்.

"ஓ வீரனே, துணிவு கொள். 'நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்' என்று கர்வத்துடன் சொல். அதை உரத்த குரலில் பெருமையாகக் கூறு. 'இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை...இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்'.

நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

அறியாமை மிக்க, உயிரற்ற புல்பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது.

தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதைவிடப் போர்களத்தில் மாய்வதே மேல். சகோதரா, துக்கங்களைக் கண்டு அழுவது கூடாது. மரணமோ, நோயோ உனக்கில்லை. துன்பமோ துரதிஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப் படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.

இவனை 'நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், 'முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை'. அது தான் வழி. உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை - எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.

'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப்
பொருட்படுத்தாது இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

இரவும் பகலும் திரும்ப திரும்ப பிரார்தனை செய் 'ஓ உலக நாயகியே! என் பலவீனத்தைப் போக்கு, என் கோழைத்தனத்தைப் போக்கு! என்னை மனிதனாக்கு!

- சுவாமி விவேகானந்தர்.

Friday, January 1, 2010

பயமே ஜெயம்!


சென்ற பதிவில் விவேகானந்தர் எதிலெல்லாம் பயங்கள் இருக்கிறது என்றும் துறவில் தான் பயமே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பதைப் பார்த்திருந்தோம்.

ஆனால் எல்லோரும் ஓர் இரவில் துறவியாகி பயத்தை வென்று நிர்பயத்துவம் எய்தி சிரிக்க முடியாதே! சம்சார வாழ்க்கை நமக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணித்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் பயத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

நம்மைப் போன்றவர்கள் பயத்தை ஒரு உந்து சக்தியாகவே பார்க்க வேண்டும். எதிலெல்லாம் நாம் பயப்படுகிறோமோ அதிலிருந்து தான் விடுதலை அடைகிறோம். சாமானிய மனிதன் முதலில் உணர்வு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும். விடுதலை அடைந்தவனே ஆனந்தத்தை அனுபவிப்பான்.

பயமே இல்லை என்று நடிப்பவனைவிட பயத்தால் உந்தப்பட்டு வீரிட்டு எழுந்து விடுதலை அடைந்தவனே உலகை வெல்வான். ஆனந்தத்தை அனுபவிப்பான். ஆகவே பயத்தை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். பயத்தை படிக்கட்டாக பயன்படுத்துங்கள். பயந்து தெளியுங்கள். பயமே ஜெயம் என்பீர்கள்!

இறப்பின் மீது பயம் கொள்வீர்
ஞானத்திற்கு அதுவே உந்து சக்தி!

வறுமையின் மீது பயம் கொள்வீர்
உழைப்பிற்கு அதுவே உந்து சக்தி!

வயோதிகம் மீது பயம் கொள்வீர்
வாலிபத்திற்கு அதுவே உந்து சக்தி!

தோல்வியின் மீது பயம் கொள்வீர்
வெற்றிக்கு அதுவே உந்து சக்தி!

நோயின் மீது பயம் கொள்வீர்
உடற்பயிற்சிக்கு அதுவே உந்து சக்தி!

வன்முறை மீது பயம் கொள்வீர்
அன்பிற்கு அதுவே உந்து சக்தி!

இயற்கையின் மீது பயம் கொள்வீர்
இறைதேடலுக்கு அதுவே உந்து சக்தி!

காலத்தின் மீது பயம் கொள்வீர்
வேகத்திற்கு அதுவே உந்து சக்தி!

மறுமையின் மீது பயம் கொள்வீர்
புண்ணியம் தேட அதுவே உந்து சக்தி!

துயரங்கள் மீது பயம் கொள்வீர்
விடுதலைக்கு அதுவே உந்து சக்தி!

பயத்தாலே புண்ணியவான் ஆனான் ரத்னாகரன். கொலை, கொள்ளையில் ஈடுபட்டேனும் பொருள் ஈட்டி பெற்றோரையும் குடும்பத்தையும் காத்துவந்தான். பாவங்கள் பல செய்து வந்தான்.

ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், "நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?" என்றார். என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.

"சரி, நீ செய்து கொண்டிருக்கும் பாவங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? மரணத்திற்கு பின்னால் மறுமையின் வாழ்வில் நீ அதனால் என்னென்ன துன்பங்கள் அனுபவிப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

ரத்னாகரனுக்கு மறுமையைப் பற்றி ஒரு பயம் உண்டானது. நாரதர் தொடர்ந்தார் "உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?" என்றார். இதற்கு ரத்னாகரன் 'ஆம்' என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன்," என்றார்.

ரத்னாகரன் பெற்றோரை பார்க்கச் சென்றான். வீட்டிற்கு சென்றதும், "என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?" என குடும்பத்தாரிடம் கேட்டான்.

அவனது பெற்றோர், "பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்" என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர்.

ரத்னாகரன் கலக்கமுற்றான். அத்தனை பாவங்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பாவேனா என்று பயந்தான். அதனால் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணி நடுங்கத் துவங்கினான். பாவங்களின் அழுத்தம் அவனை வாட்டியது.

மீண்டும் நாரதரை சந்திக்க வந்தான். 'இந்த பாவங்களிலிருந்து விடுபட எனக்கு உபாயம் சொல்லுங்கள்' என்றான்.

நாரதர் ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். பாவங்களின் மீது பயம் கொண்டவன் ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்தான்.

அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி "வால் மீகம்" வளர ஆரம்பித்தது. வால்மீகம்' என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார்.

அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் "வால்மீகி" என அழைக்கப்பட்டான்.

இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

மறுமையின் மீதிருந்த பயமே ரத்னாகரனின் உந்து சக்தியானது. அவன் வால்மீகியாக மாற அதுவே தூண்டுகோலானது.

ஆக நம்மைப் போன்று துறவுக்கு போக முடியாத சாமானியர்களுக்கு வாழ்க்கையின் பயணத்தைக் கடக்க அந்தராத்மாவின் உந்து சக்தியே அதிகம் தேவை. எனவே பயப்படுங்கள். அதே வேகத்துடன் பயத்தை வெல்லுங்கள்.

பயத்தை வெல்வோம், விவேகானந்தர் ஆவோம்.


கொசுறு: புதுப்பேட்டை என்ற படத்தில் தனுஷ் முதன் முதலாக குற்றம் செய்யப்போவார். கூட வந்தவன் கேட்பான்

"என்ன பயமா இருக்கா?"

"ம்ம்ம்"

"பரவாயில்லை, பயம் தான் நம்மள காப்பாத்தும்"

Tuesday, November 24, 2009

குதிரையாகிய புலன்களை கட்டுப்படுத்துங்கள்!

வாழும் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். ஆனால் நீங்கள் சர்ச்சுகளையும் கோவில்களையும் கட்டிக் கொண்டு பல கற்பனைப் பிதற்றல்களை நம்பிக்கொண்டு திரிகிறீர்கள்.

மனித உடம்பில் உள்ள ஆன்மா ஒன்றே வழிபடத்தக்க கடவுள்.

எல்லா விலங்குகளும் கூடக் கோயில்களே. ஆனால் மனிதனே இவற்றுள் மிகச் சிறந்தவன்.

ஒவ்வொருவரும் உடல் எண்ணும் கோவிலினுள் உள்ள ஆன்மா என்ற கடவுளை உணர்கின்ற தருனமே நம்மை கட்டியுள்ள பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. மனித மனம் சுதந்திரம் அடைகிறது.

மகான்களின் சக்தியெல்லாம் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்து நீங்கள் அறிய வில்லையா? எங்கே? புத்தியிலா? அவர்களுள் யாராவது தத்துவ நூலோ, மிக நுணுக்கமான தர்க்க நூலோ எழுதியிருக்கிறார்களா. இல்லவே இல்லை. அவர்கள் சிறிதே பேசினார்கள். புத்தனைப் போல் உணர்ச்சி கொண்டால் புத்தனாகவே ஆவாய். உணர்ச்சி தான் வாழ்க்கை, உயிர், வலிமை எல்லாம். உணர்வுப்பூர்வமான தேடல் அன்றி தீவிரமான அறிவு முயற்சியால் கடவுளை அடைய முடியாது.

இறைவன் உள்ளத்தால் தான் காணப்படுகிறார். அறிவால் அல்ல.

இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், அடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

- சுவாமி விவேகானந்தர்.

Wednesday, September 2, 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


தியான நிலையே மிக உயர்ந்த நிலை என்று யோகிகள் கூறுகிறார்கள். மனம் புறப் பொருட்களை ஆராயும் போது அந்தப் பொருட்களுடன் தன்னை

ஒன்றுபடுத்திக் கொள்கிறது. அந்தப் பொருட்களின் மயமாக ஆகிவிடுகிறது. அதாவது நீ எதை அதிகம் சிந்திக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கூற்றுப்படி மனம் செயல்படவே செய்யும்.

பண்டைய இந்தியத் தத்துவ ஞானி ஒருவர் இதற்கு ஓர் உவமை கூறியுள்ளார்: மனிதனின் ஆன்மா ஒரு பளிங்கு போல் உள்ளது. பளிங்கு தன் அருகில் உள்ள எந்த நிறத்தையும் ஏற்றுக் கொள்கிறது அது போலவே, ஆன்மா எதனுடன் சேர்ந்தாலும் அதன் தன்மையை அடைகிறது. நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி, நாம் யார் என்பதை மறந்து விட்டோம். புற அழகில் மயங்கி அகத்தைப் பற்றி நினைக்கத் தவறுகிறோம்.

அழியக்கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன.
நமது கவலை, சஞ்சலம், தொந்தரவு, தவறு, பலவீனம், தீமை எல்லாம் நாம் உடம்பே என்று கருதும் ஒரு பெரும் தவறிலிருந்தே உண்டாகின்றன.

ஆக தியானம் இந்த மனம் வேறு உடல் வேறு என்ற நிலையை உணர்த்தும் அற்புத மூலமாக இருக்கிறது. உங்களுக்கு தியானத்தில் மூலத்தைச் சொல்லித்தருகிறேன். நல்லவைகளை நினைத்து தியானித்தால் நன்மையே உண்டாகும்.

இதோ தியானிக்க சூத்திரம்..

"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவரான அந்தப் பரம் பொருளின் மகிமையைத் தியானிக்கிறேன். அவர் என் உள்ளத்தை ஒளிரச் செய்வாராக!"

மேலே நீங்கள் படித்தது காயத்ரீ மந்திரத்தின் திரண்ட பொருளாகும்.

"ஓம் பூர்புவஸ்வ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி! தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

இதனைப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை தியானம் செய். உனக்குக் கிடைக்கும் அனுபவக் காட்சிகளை உன் குருவைத் தவிர யாரிடமும் சொல்லாதே.

இயன்றவரை குறைவாகப் பேசு.

நல்லவற்றின் மீது உன் நினைவுகளை வைத்திரு. நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

புனிதமானவற்றை நீ தியானிப்பது எல்லா மன அழுக்குகளையும் எரித்துவிட உதவும்.

- சுவாமி விவேகானந்தர்.