Tuesday, April 14, 2009

கீதோபதேசம்:


அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது!  

பகைவரை வாட்டுகின்ற பாரதா!, அர்ஜுனா! 

"விருப்பு வெறுப்புக்களால் உண்டான இருவகை இயல்புகளின் மயக்கத்தால் பிறந்ததில் இருந்தே எல்லா உயிர்களும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன."  

விளக்கம்: பிறந்ததிலிருந்தே மனிதர்கள் மயக்கத்திலேயெ ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது பகவானது கூற்று. அதாவது குழந்தையாக ஜனிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு மனிதரும் இது எனக்கு பிடித்தது, இது எனக்கு பிடிக்காதது என்று விருப்பங்களை கொண்டு விடுகிறோம்.

உதாரணமாக நாம் ஆசையாய் கொடுக்கு எல்லாப் பொருட்களையும் குழந்தைகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு எது பிடிக்குமோ அதையே ஏற்றுக்கொள்வர். அவர்களுக்கு பிடிக்காத பொருளை கொடுத்தால் வருத்தம் அடைவர். அந்த வருத்தத்திலிருந்து மீள பிடித்த பொருளை அடைய வேண்டும் என்று லட்சியமும் மேற்கொள்வர். அந்த லட்சியத்தை அடைவதிலே எல்லா சிந்தனைகளையும் செலவு செய்வர். இதுவே பிறகு வாழ்க்கை முழுவதும் பழக்கமாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் விரும்பும் ஏதாவது ஒரு பொருளை அடைய நமது சிந்தனையை செலுத்திக்கொண்டே இருக்கிறோம்.  

ஒரு சுய முயற்சி செய்து பாருங்கள். இன்றைய நாள் முழுவதும் நீங்கள் உங்களுக்கு இது வேண்டும் என்று யாரிடம் கேட்டீர்கள்? எதைக் கேட்டீர்கள்? அது கிடைக்காத போது என்ன செய்தீர்கள்? உங்களுக்கு பிடிக்காத பொருள் கொடுக்கப்பட்ட போது எப்படி வெளிப்படுத்தினீர்கள்? இவை உங்களது தினசரி பரிசோதனையில் செய்து பாருங்கள்! காலையில் எழுந்தவுடன் அம்மாவிடம் காப்பி கேட்பதில் எடுத்துக்கொள்வோம்! நீங்கள் என்ன வேண்டும் என்று கேட்பது உங்கள் விருப்பத்தின் அடையாளம்! இப்பொழுது சர்க்கரை குறைவாக இருக்கும் படி உங்களுக்கு காப்பி கொடுக்கப்படுகிறது. உங்கள் மனம் இப்பொழுது அடையும் நிலையை சிந்தியுங்கள்! இது உங்கள் வெறுப்புக்கு உரிய விஷயமாகிறது. உடனே தனது அமைதி நிலையை தானாகவே மனது குலைத்துக் கொள்கிறது. சர்க்கரை குறைவாக போட்டுக் கொடுத்த தாயை முகம் சுளித்து "என்னம்மா சர்க்கரையே போடல!" என்று கேட்கத் தோன்றுகிறது. பிறகு உங்களுக்கு விருப்பமுள்ளதை அடைய மனது முயற்சி செய்கிறது. குறைவாக இருந்த‌ சர்க்கரையை அதிகப்படுத்தி உங்கள் காலைக் காப்பியை அருந்தி இப்பொழுது திருப்தி அடைந்து கொள்கிறீர்கள். இது ஒரு சிறிய செய்கையே.

இப்படியே உங்கள் தினசரி விருப்பங்கள் என்னவாக இருந்தது. அதை அடந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி , அடையாமல் போனதால் ஏற்பட்ட வருத்தம், மேலும் அதை அடைய உங்கள் மனதில் ஏற்ப‌ட்ட வைராக்கியம், அந்த வைராக்கியத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதால் ஏற்படும் பிடிவாதம் ('ஈகொ' ). உங்களது இந்த ஈகோவால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதும், அதனால் உங்களுக்கு ஏற்படும் எதிர் விளைவுகளும் அதை நீங்கள் சமாளிக்க போராடுவதும், போன்றவற்றை ஆழ்ந்து கவனித்தீர்களானால் வாழ்க்கை ஒரு சங்கிலித்தொடர் போல போராட்டங்களாலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதை உணர்வீர்கள். இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு விருப்பமுள்ளதை அடைவதிலும், விரும்பாததை அடையாமல் தவிர்ப்பதிலுமே உங்கள் கவனம் வாழ்நாள் முழுவதும் இருப்பதே காரணம்.  

இது விருப்பு , இது வெறுப்பு என்ற பாகுபாட்டு உணர்விலிருந்து வெளிப்பட்டு வருபவர்களே உன்மையான நிரந்தர அமைதியை அடைவார்கள். இது வே ஞானமாகக் கருதப்படுகிறது. இந்த ஞானத்தை அடைபவர்களே இறைவனை உணரத்துவங்குவார்கள். இந்த விருப்பு, வெறுப்பு என்ற உணர்வு மனிதர்களின் இயல்பு தான் என்பதையும் பகவான் உரைக்கிறார். இது மனிதர்களிடம் இல்லாமல் இருக்காது. ஆனால் இதை விட்டு மனிதன் வெளியே வர கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பகவானது உபதேசம்! உலகின் முதல் தத்துவ ஞானி பகவான் கண்ணனே!  

பகவான் மேலும் சொன்னது!  

பார்த்தா!  

"நல்வினை உடைய புண்ணிய கருமங்களைச் செய்கிற எந்த மக்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ, விருப்பு, வெறுப்பு என்ற இருமை இயல்புகளின் மயக்கத்திலிருந்து விடுதலை பெற்ற‌வருமாக ஆகிறார்களோ, அவர்கள் தங்கள் விரதங்களில் உறுதியோடு இருந்து என்னை வழிபடுகிறார்கள்".


வெறும் கூட்டம் கூடி சத்தம் போட்டு பிரார்த்தைனைகள் செய்வதை மட்டுமே வலியுறுத்தாமல் , இப்படி மனோவியல் ரீதியாகவே ஒவ்வொரு மனிதனும் அந்தராத்மா மேம்பட வாழவேண்டும் என்பதே இந்து தர்மத்தின் சாராம்சம். ஆகையால் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

5 comments:

sathesh said...

ஒரு சந்தேகம், காப்பிக்கு சக்கரை கூடுதலாக வேண்டும் என்பதும், குறைவாக சற்று கசப்பாக காபி வேண்டும் என்பதும் தேவை என்றே தோன்றுகிறது. இதில் எப்படி விருப்பு வெறுப்பு வரும்? அப்படி பார்த்தால் எல்லாத் தேவைகளும் துறந்தால் மட்டுமே விருப்பு வெறுப்பற்ற நிலை வரும் ( உணவையும் சேர்த்து ), அது யோகிகளுக்கு மட்டுமே முடிந்த காரியம் ஆகிவிடாதா?
தேவைகளை முற்றிலும் துறப்பதை வலியுறுத்தப் படுகிறதா? அது இயலாது, குறைந்த பச்சமாக உணவாவது தேவை. கிடைத்ததை மட்டும் ஏற்றுக்கொள்வதை தேவையை குறைத்தோ,கூட்டியோ கொள்வதை துறப்பதை வலியுறுத்தப் படுகிறதா?.
விருப்பு வெறுப்பு இல்லாமல் உயிர்களின் இயக்கமே இல்லையே.உணவு வேண்டும் என்ற தேவை அல்லது விருப்பு இருந்தால் தானே அதை தேடும் இயக்கம் நிகழும். விருப்பு என்ற ஒன்று வந்து விட்டால் நிச்சயம் அதன் எதிரான வெறுப்பும் வந்து தானே தீர வேண்டும். சராசரி உயிர்கள் எப்படி விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட முடியும்? ஓரளவாவது இவை அவசியமானதாக தோன்றுகிறதே.
நான் புரிந்து கொண்டது தவறா? குழப்பமாக உள்ளது தயவு செய்து விளக்கவும்

hayyram said...

வருகைக்கு நன்றி சதீஷ். //காப்பிக்கு சக்கரை கூடுதலாக வேண்டும் என்பதும், குறைவாக சற்று கசப்பாக காபி வேண்டும் என்பதும் தேவை என்றே தோன்றுகிறது. இதில் எப்படி விருப்பு வெறுப்பு வரும்?// வரும். விருப்பும் வெறுப்பும் பொருளால் வருவதல்ல. அந்த பொருளின் மீது அல்லது அந்தப் பொருளை அடையும் சூழல் மீது நாம் கொள்ளும் உரிமை மற்றும் ஆதிக்க உணர்வால் உண்டாவது. உதாரணமாக இப்படி பார்க்கலாம். சர்க்கரை போட்டு காப்பி குடிப்பது உங்கள் விருப்பம். உங்களுக்கு காப்பி பரிமாரப்படுகிறது. அதில் சர்க்கரையே இல்லை. சுவையான காப்பி குடிக்க காத்திருந்த உங்கள் மனம் ஏமாற்றமடைகிறது. இந்நிலையில் நீங்கள் கோபப்படுகிறீர்கள்! உங்களுக்கு அதை வழங்கிய உறவுகளையோ அல்லது பணியாளரையோ கடிந்து கொள்கிறீர்கள்."சர்க்கரை போட்டு கொண்டுவ்ரத் தெரியாதா? அப்படியே கொண்டு வந்து கொடுத்து விடுவதா?" என்று கோபப்படுகிறீர்கள்! சர்க்கரை போடாத காப்பியின் மீது உங்கள் வெறுப்பு உண்டாகவில்லை. அதை எதிர்பார்த்திருந்ததாலும் அதனால் ஏமாற்றம் அடைந்ததாலும் அந்த சூழல் மீது கோபம் வருகிறது. அந்த ஏமாற்றத்தைக் கொடுத்தவர் மீதும் கோபம் வருகிறது. இது தான் விருப்பு மற்றும் வெறுப்பிற்கான உணர்வே தவிற நீங்கள் காப்பியை துறக்கவேண்டும் என்பதல்ல. இதே சூழலை இப்படி பாருங்கள். சுவையான காப்பிக்காக காத்திருக்கிறீர்கள். சர்க்கரை இல்லாத காப்பி வழங்கப்படுகிறது. குடித்துவிட்டு அதே அமைதியான மனதுடன் இதில் "சர்க்கரை இல்லை, கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொடுங்களேன்" என்று உணர்ச்சிகள் மாறாமல் கேட்டு வாங்கிக் கொண்டால் அந்த சூழல் வெறுப்பற்றதாக அமைகிறது. சர்க்கரை கிடைக்கவே கிடைக்காது என்றால் கூட "ஓஹோ, ஆனால் நான் கசப்பான காப்பி குடிப்பதில்லையே! அதனால் இதை வைத்து விடுகிறேன்." என்று சற்றும் ஏமாற்றமே இல்லாமல் ஆசையின் உந்துதல் அற்ற மனநிலையில் காப்பியை நிராகரித்து வேறு வேலையில் தொடர்கிறீர்கள் என்றால் அது விருப்பு வெறுப்பற்ற தன்மை. ஒரு பொருளின் பொருட்டு அதன்மீதான உங்கள் ஆசையும் அது நிறைவேறுவது அல்லது நிராசை ஆவதுமான சூழலை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்ற உணர்வே விருப்பு வெறுப்பை உணர்த்துகிறதே தவிற , இதன்மையக்கருத்து பொருள் குறித்தன அல்ல.

sathesh said...

thanks a lot mr.ramji,now i try to understand. i need to go through again and again till clear.

Karthi said...

ஆசை(desire) & குறிக்கோள்/இலட்சியம்(Goal/ambition/aspire) என்னவித்தியாசம்?

Without Goal , life is meaning less..
but no ஆசை.. not able to distinguish...

hayyram said...

welcome karthi.