ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!
துறவியின் காவியுடை இயல்பாகவே மனத்தில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது. உடைக்கென்று தனி மதிப்பு எதுவும் இல்லையென்றாலும் சில குறிப்பிட்ட உடைகள் நம் மனத்தில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மைதான்.
பிறரை விட அதிகமாக மதிப்பும் மரியாதையும் பணிவும் எங்குக் காண்பிக்கப்படுகிறதோ அங்குத் தெய்வீக ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்று பொருள்.
இறைவனிடம் பக்தியின்றி செய்யப்படும் செயல்கள் நிலைக்காது. அது மணலில் கட்டப்பட்ட அஸ்திவரம் போன்றது. முதலில் பக்தியை வளர்த்துக் கொள். பின்னர், நீ விரும்பினால், பள்ளிகள் , மருத்துவமனைகள் கட்டித் தொண்டுகள் புரிவதில் ஈடுபடு.
இறைவனை மனம் , வாக்கு, உடல் இவற்றால் வழிபடுவதே பக்தி, அவரையும் அவரது பெருமைகளையும் சிந்திப்பது மனத்தால் செய்யும் பக்தி, அவரது திருப்புகழை வாயாரப் பாடுவது வாக்கினால் செய்யும் பக்தி, திருக்கோவிலை வலம் வருவதும் தொண்டுகள் செய்வதும் உடலால் செய்யும் பக்தி.
கடவுள் விரும்பினால் யானையையே ஊசியின் காது வழியாகச் செலுத்த முடியும். நினைத்ததைச் செய்ய வல்லவர் கடவுள்.
கடவுளின் மனிதத் தூதனே அவதாரம். அரசனுக்குத் தளபதி போல கடவுளுக்கு அவதாரம். நாட்டில் குழப்பம் நிலவும் பகுதியில் அரசன் தளபதியை அனுப்பி அதை அடக்குகிறான். அது போல் உலகில் அறம் சீர்குலையும் போது இறைவனும் தமது அவதார பிறப்பை அனுப்பி அறத்தைக்காக்கவும் வளர்க்கவும் செய்கிறார்.
No comments:
Post a Comment