Wednesday, April 1, 2009

சிறுகதை

அப்பொழுது தான் குளித்து விட்டு அறைக்குள் வந்தான் குலசேகர பாண்டியன். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன் அழகை பார்த்து ரசிக்கத் தொடங்கினான். இறுமாப்புடன் தலையைச் சிலுப்பிக் கொண்டான். கோதிவிட்டான். எட்டு வயதிலேயே என்ன மிடுக்கு, என்ன தோரனை!. பிரகாசமான கண்கள், வீரம் சொரியும் பேச்சு தொனி.  


எட்டாத கண்ணாடியிலும் தன் உருவத்தை எட்டி எட்டி பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டான். அருகே இருந்த கிரீடத்தை ஆசையுடன் பார்த்தான். சூட்டி விட ஆள் தேடினான். சுற்றி சுற்றி பார்த்தான்! பலமாக குரல் கொடுத்தான்..யாரங்கே? அமைதி??!!!..யாரங்கே? நிசப்தம்!!...யாரடா அங்கே?...யாரும் வரவில்லை.., சரியென்று தானே கிரீடத்தை எடுத்து தன் தலையில் பொருத்திக் கொண்டான்.  


காலையில் அணியவேண்டிய உடைகளை எடுத்துக் கொடுக்க ஆளில்லை. மீண்டும் முன்பை விட பலமாக குரல் கொடுத்தான். யாரங்கே? அமைதி??!!!..யாரங்கே? நிசப்தம்!!...யாரடா அங்கே?...யாரும் வரவில்லை..., தானே தனது உடைகளை எடுத்து அணிந்து கொண்டான்.  


தனது வாள் இருக்கும் இடத்துக்கு சென்றான். அதன் உரையை இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டான். வாளை அதனுள் போட்டு கலகலவெனச் சிரித்தான்.! பின்னர் செருகிய வாளை வெளியே எடுத்து மிகவும் உரத்த குரலில் அழைத்தான்! யாரங்கே..???!!!, அவன் கத்தி முடிப்பதற்க்குள் திடீரென அவன் பின்னால் ஒரு கை வந்து படேரென தலையில் ஒரு அடி வைத்தது. அக்க்ம்ம்மா!!! என திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் குலசேகர பாண்டியன். பின்னால் அவன் அம்மா நின்று கொண்டிருந்தாள்.  


"ஏன்டா..படிகறத விட்டுப்புட்டு படம் பாக்காதன்னா கேக்குறியா?' புலிகேசி படம் பாத்துட்டு வந்து நேத்திலேருந்து கத்திக்கிட்டே இருக்கியே!..' பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆச்சு அறிவில்ல?!" என்று கத்தியபடி அவன் தலையில் இருந்த அட்டை கிரீடத்தை எடுத்து கைகளால் முறுக்கி தரையில் போட்டாள். "அம்மா வேண்டாம்மா , அதை ஒடைக்காதம்மா..நான் பள்ளிகூடத்துக்கு கிளம்பிட்டேம்மா..." என்றபடி புத்தகப்பையை தூக்க ஓடினான். "ஒழுங்காப் படிக்கிற வழியப்பாரு" என்று அவன் அட்டைக்கத்தியைப் பிடுங்கி இரண்டாக உடைத்தாள். "இரும்மா, அத ஒடைக்காதம்மா...நான் தான் போறேன்ல,,'என் கத்தி போச்சு போம்மா" என்று கூறிக்கொண்டே ஒரு கையில் உடைந்த அட்டைக்கத்தியையும் இன்னொரு கையில் புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டு ஓட்டை விழுந்த‌ டவுசர் தெரிய பள்ளி நோக்கி நடந்தான் வருங்கால மன்னன்.

No comments: