Thursday, April 30, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!



இறைவனுக்கு நீ கொடுக்கின்ற ஒவ்வொன்றும் பன்மடங்காக உன்னிடமே திரும்பி வரும். எனவே மோசமான, தீய எதையும் இறைவனிடம் சமர்ப்பிக்காதே.  

பகவான், பாகவதம் (தெய்வீக நூல்கள்), பக்தன் மூவரும் ஒன்றே.  

மீன் எவ்வளவோ தூரத்தில் இருக்கலாம். ஆனால் கவர்கின்ற விதத்தில் ஏதாவது உணவைப் போட்டால் எங்கிருந்தாலும் விரைந்து அங்கு வந்து சேர்ந்து விடும். அது போல் அன்பும் நம்பிக்கையும் உடைய பக்தனின் இதையத்தில் இறைவன் விரைந்து வந்து குடிகொள்கிறான்.  

உருவமின்றியும் உருவத்துடனும் கடவுள் விளங்குகிறார். இந்த இரு நிலைகளை கடந்தும் அவரே விளங்குகிறார். அவர் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஓர் எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்து வயிறார உண்டாலும் எடுத்துச் சென்றாலும் ஒரு பெரிய சர்க்கரை குன்று சிறிதும் பாதிக்கப் படுவதில்லை. முன்பிருந்த படியே அது இருக்கிறது. கடவுள் அது போலவே, பக்தர்கள் எவ்வளவு தான் பரவச நிலையில் ஆடினாலும் பாடினாலும் அவர் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார். முழுமையாக அவரை அறியவும் அவரது பெருமைகளை அனுபவிக்கவும் யாராலும் முடியாது.  

சீடன் ஒருபோதும் குருவை பழிக்கக் கூடாது. அவரது கட்டளைக்கு எவ்வித மறுப்பின்றி அவன் பணிய வேண்டும்.  

இறையருள் என்னும் காற்று இடயீடின்றி எப்போதும் வீசிக்கொண்டிருக்கிறது. சோம்பேறி படகோட்டி போன்றவர்கள் பாய்மரத்தை விரித்து அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சுறுசுறுப்பான வலிமையானவர்கள் தங்கள் மனமாகிய பாய்மரத்தை எப்போதும் விரித்து வைத்திருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை விரைவில் எளிதில் அடைகிறார்கள்.  

குரு, தரகர் போன்றவர். ஆணையும் பெண்ணையும் தரகர் இணைத்து வைப்பது போல குரு மனிதனையும் இறைவனையும் சேர்க்கிறார்.

No comments: