Monday, August 24, 2009

விக்ரமாதித்தன் கதைகள் - 3


சென்ற வார தொடர்ச்சி

முனிவன் குறிப்பிட்ட தினமும் வந்தது. விக்கிரமாதித்தனும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்கு முனிவன் குறிப்பிட்ட இடத்தைத் தேடி தன்னந்தனியாகச் சென்றான்.

முனிவனும் விக்கிரமாதிதனை வரவேற்று உபசரித்து உட்காரவைத்தான். விக்கிரமாதித்தன் அந்த இடத்தை அமைதியாகச் சுற்றிப்பார்த்தான்.

மிகவும் பாழடைந்த ஒரு கோவில், அருகில் மிகவும் நிசப்தமாக ஒரு பெரிய மண்டபம். வினோதமான சப்தங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. கோவிலின் உள்ளே ஒரே ஒரு அம்மனின் திரு உருவம் பிரதீஷ்டை செய்யப்பட்டிருந்தது. மண்டை ஓடுகள் மாலையாக, சிவந்த நாக்கும் பெரிய கண்களும் காலடியில் ஒருவனை மிதித்துக்கொண்டிருக்கும் கோலத்துடன் அந்த சிலை பார்க்கவே திகிலைக் கூட்டியது.

விக்கிரமாதித்தன் சற்றும் பயப்படாமல் அமைதியாக முனிவனிடம் கேட்டான்.

"மா முனிவரே, எனக்கு என்ன கட்டளை இடப்போகிறீட்கள், சொல்லுங்கள், செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.

வஞ்சக முனிவனும் இது தான் சமயம் என்று விக்கிரமாதித்தனை பலிகொடுக்கும் சூழ்ச்சியைத் துவங்கலானான்.

"வீரனே, நீ எனக்கு ஒரு மகத்தான உதவி ஒன்றைச் செய்ய வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே இரண்டு யோஜனை தூரத்தில் (ஒரு யோஜனை என்பது எட்டு மைல்களாகும்) ஒரு மயானம் இருக்கிறது. அங்கே ஒரு முருங்கை மரத்தில் யாருக்கும் அடங்காத ஒரு வேதாளம்
பல வருடங்களாகத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எத்தனை மந்திர சக்திக்கும் அடங்காத அந்த வேதாளத்தை உன்னுடைய புஜ பலத்தாலும், பராக்கிரமத்தாலும் அதைக் கட்டி இழுத்து என் முன் கொண்டு வர வேண்டும். அப்படி நீ கொண்டு வந்து விட்டால் எனது பூஜையை இடையூறு இல்லாமல் தொடர பேருதவியாய்
இருக்கும். செய்வாயா?" என்றான் முனிவன்.

உதவி செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தமையால் விக்கிரமாதித்தன் பதிலேதும் பேசாமல் முனிவனின் பூஜைக்கு உதவ வேதாளத்தை எப்படியாவது கொண்டு வருவதற்கு
பிரயத்தனப்பட்டு புறப்பட்டான்.

அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. பயங்கரமான மைஇருள் எங்கும் சூழ்ந்து கொண்டிருந்தது. மரக்கிளைகளும் வேர்களும் மேலும் கீழுகாக தொங்கிக்கொண்டிருந்தன. நரிகளும் ஆந்தைகளும் ஆங்காங்கே ஊளையிட்டுக்கொண்டிருந்தன.

நடக்கும் திசைகளிலெல்லாம் பாம்புகள் காலைச் சுற்றிக்கொண்டன. அவைகளை எல்லாம் கலங்காமல் விலக்கி விட்டு எதற்கும் அஞ்சாமல் விக்கிரமாதித்தன் தொடர்ந்து முனிவன் காட்டிய பாதையில் நடக்கலானான். வெகுதூரம் கடந்து வந்த பிறகு ஓரிடத்தில் குகை ஒன்று தெரியலானது. மங்கிய வெளிச்சம் அதன் வாயிலில் தென்பட்டது.

விக்கிரமாதித்தன் அந்த குகையை நெருங்கலானான். குகையின் அருகே செல்லச் செல்ல பலத்த சூரைக்காற்று வீசத்துவங்கியது. அடி மேல் அடியெடுத்து வைக்க விடாமல் ஆளைத்தள்ளிச் சென்றது காற்று.

காற்றுடன் மழையும் பிடித்துக் கொண்டது. ஆந்தைகள் பலமாகக் கத்தின. மரங்கள் வேறோடு சாயத்துவங்கின. எதிரில் இருப்பது என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட்டது. எல்லாவற்றையும் சமாளித்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து விக்கிரமாதித்தன் குகையின் வாயிலை அடைந்தான்.

குகைக்குள் தெரிந்த மங்கிய வெளிச்சத்தை பயன்படுத்தி குகையின் வாயிலுக்குள் முதல் அடியை எடுத்து வைத்தான். அந்த நிமிடம் காற்றும் மழையும் நின்று போனது. காட்டு விலங்குகளின் சப்தங்ளும் ஆந்தை வெளவால் என பறவைகளின் சப்தங்ளும் அற்றுப் போனது. மொத்தப் பகுதியும் நிசப்தமாக மாறியது.

மையிருட்டும் சட்டென்று மாறிய சூழ்நிலைகளையும் கவனித்துக் கொண்டே விக்கிரமாதித்தன் குகைக்குள் தைரியமாக நுழையலானான். குகை முழுவதும் சிலந்திகளின் வலைகளால் பின்னப்பட்டிருந்தன. கூரிய வாளை வெளியே எடுத்து அத்தனை வலைகளையும் வெட்டிப்
பிய்த்துக்கொண்டு உள்ளே சென்றான்.

முனிவன் சொன்னதைப் போலவே ஒரு முருங்கை மரமும் தென்பட்டது. அதன் அருகே மெதுவே சென்ற விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

காத்திருங்கள்...

2 comments:

தேவன் said...

///அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. பயங்கரமான மைஇருள் எங்கும் சூழ்ந்து கொண்டிருந்தது. மரக்கிளைகளும் வேர்களும் மேலும் கீழுகாக தொங்கிக்கொண்டிருந்தன. நரிகளும் ஆந்தைகளும் ஆங்காங்கே ஊளையிட்டுக்கொண்டிருந்தன.///

அம்மே எனக்கு பயமா இருக்கு. யாரவது துணைக்கு வாங்களேன்.

hayyram said...

//அம்மே எனக்கு பயமா இருக்கு. யாரவது துணைக்கு வாங்களேன்.//

ஹா ஹா நானே வர்ரேன்..பயப்படாதீங்க

அன்புடன்
ராம்