Friday, October 2, 2009

மஹாபாரதத்தில் ஒரு நாள்!

மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். "இதி ஹாஸம்" என்றால் "இது நடந்தது" என்று பொருள். நமது பண்டைய வரலாறு. இது நடக்கவே இல்லை வெறும் கற்பனை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்பனைக் கதையா? தனிமனிதனால் எழுதப்பட்ட புனைவா அல்லது நடந்த உண்மையா? எதுவாயினும் கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றவை என்பதே இதன் பெருமை.

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதுதான். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.

மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.

தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.

ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.

துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.

ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.

மகரிஷியே "ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்" என்றார்.

அதற்கு ரிஷியோ "இந்தப் பிரச்சனையின் அர்த்தம் அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்" என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

பர்த மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், "நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன்.

ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன் அல்ல.

ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு.

1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை". இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். "ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்" என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, "இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.

இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், "மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே..." என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

"ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!" என்றார். "கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல.

அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும் தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது. அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது" என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் " தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே!

இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும்.

அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை" என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன்.

ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன் ஆவான்.

அதற்குப் பின் பலகாலம் பாரதத்தில் மக்களில் தகுதிவாய்ந்தவரே அரனாக ஆனார்கள். பின்னர் பல தலைமுறைக்குப்பிறகு வந்த சாந்தனு என்ற அரசனுக்குப் பிறகு மீண்டும் வாரிசுக்கு உரிமை என்ற நிலை உண்டானது. சாந்தனுவின் மகன் தான் கங்கை மைந்தன் பீஷ்மர். தனி மனிதர்கள் பூமியை சொந்தம் கொண்டாடத் துவங்கினார்கள்.

ஆம், குருக்ஷேத்ரம் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது தான்.

பரதனின் அந்த ஒரு நாள் அறிவிப்பு நமது நாட்டில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக இன்னும் உலகுக்கெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறது.

அன்றைய அரசன் வாரிசு அரசாங்கத்தை மாற்றி மக்களாட்சியை நிறுவினான். இன்றைய அரசர்களாக விளங்கும் அரசியல் வாதிகள் மக்களாட்சியை மாற்றி வாரிசு அரசாங்கத்தை விதைக்கிறார்கள்.

குருக்ஷேத்ரம் காத்திருக்கிறது.



இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.


5 comments:

Anonymous said...

If anybody has mahabharatham and ramayanam in tamil, please send them to me drops2sea@gmail.com

Hearty thanks in advance...

- Loga

Anonymous said...

பிறப்பின் அடிப்படையில் பதவி இருக்க கூடாதுன்னு சொன்ன தர்மம் ஏன் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்த ஜாதி ,தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு இருக்கு

என்னவளை தேடி said...

thiru .ram,
ungalaudaiya hindu sambanthamana anaiththu thagavalkalulum arumai neengal hindu samuthayathai pattri ezhuthi athai pirarukku teriya seyvatharkku en manamarntha nanrigal.

hayyram said...

நன்றி "என்னவளை தேடி ".

S. Arul Selva Perarasan said...

அற்புதமான பதிவு! பரதனின் பெயர் தாங்கி நிற்கும் பாரதம் பெருமையடைய வேண்டும்.

இது போன்ற இன்னும் பல அற்புதமான புராணக்கதைகளை இதே போல எளிமையாக அறிய விரும்புகிறேன். எனக்காக அல்ல. உங்கள் வலைப்பூவிற்கு வருகை தரும் அனைவருக்காக.

குருக்ஷேத்ரம் காத்திருக்கிறது என்று முடித்திருக்கிறீர்கள். எனக்கு நான் எழுதிய பதிவு ஒன்றில் (நான் ஏகலைவன்)இப்படி காத்திருக்கிறேன் என்று முடித்தது அதிசய ஒற்றுமையாகப் படுகிறது.