Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Sunday, May 6, 2012

சடங்குகள் தேவையா?



நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியன வெல்லாம் வெறும் சடங்குதானே என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமோ என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக் கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமாக ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டுமாதான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் வெறும் சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே. 

எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஒர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (DISCIPLINE) உட்படுகிறான். இதை சாப்பிடக்கூடாது. இதை போக்கிய வஸ்துக்களைப் அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (WILL - POWER) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.

ஆக, வெறும் சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (MORALITY) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!



Wednesday, March 3, 2010

துறவற‌ம் என்பது என்ன?



ஆயிரக்கனக்கான மனிதர்களில் யாரோ ஒருவன் தான் மனநிறைவின் பொருட்டு முயற்சி செய்கிறான். அவ்வாறு முயற்சி செய்பவர்களுள் ஒருவன் மட்டும் என்னை உள்ளபடி அறிகிறான். - ஸ்ரீ க்ருஷ்னர்.

பகவத் கீதையின் ஞான விஞ்ஞான யோகத்தில் ஸ்ரீ க்ருஷ்ண‌ர் இவ்வாறு தெரிவிக்கிறார். பல ஆயிரக்கணக்கானவர்களில் எண்ணை அறிபவன் ஒருவனே என்று ஞானியைப் பற்றி விளக்குகிறார்.

அதாவது ஸ்ரீக்ருஷ்ணரின் கூற்றுப்படி இறைவனை அறிந்தவனே ஞானி. இங்கே அவர் ஞானியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறாரே ஒழிய ஞானிகள் எல்லோரும் குடும்பமற்ற துறவிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை.

பொதுவாக இந்து மதமே லௌகீக மதம் தான். ஒருவன் இறைவனை அடைய, ஞானத்தைப் பெற துறவியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கட்டாயம் இல்லை. குடும்பஸ்தனாக இருப்பவனும் குடும்பம் இல்லாதவனும் என்று யார் வேண்டுமானாலும் ஞானம் பெறலாம்.

ஆனால் துறவி மட்டுமே ஞானி என்ற ஒரு மாயையான நிலையை இன்றைய இந்து தர்மவான்கள் உண்டாக்கிவிட்டார்கள். முக்கியமாக காவி கட்டியவன் எல்லாம் ஞானிகள் என்ற தோற்றத்தையும் உண்டாக்கி விட்டனர். ஆனால் உண்மையில் ஞானி என்பவன் யார்? துறவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல சித்தர்களும் ரிஷிகளும் நம் பாரத தேசத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

திருவெண்காடர். ஒரு சிறந்த உதாரணம். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்ற வாசகம் திருவெண்காடரின் அந்தராத்மாவைக் குடைந்தது. நூல் கோர்க்கக் கூட பயனற்ற ஊசிகூட நீ இறந்த பின்னால் உன்னுடன் வராது என்ற வாசகம் அவரை ஆட்டுவித்தது. அவரது மனதிலிருந்த மாயை விலகியது. ஞானத்தின் தெளிவு பிறந்தது.

ஆசை ஆசையாய் தான் அனிந்திருந்த விலை உயர்ந்த நகைகளையும் ஆடைகளையும் களைந்து விட்டைத் துறந்து வீதிக்கு வந்தார். உறவும் உறவின் மீதான உணர்வும் அற்றவராய் வாழ்க்கையே இனி வானம் பார்த்து தான் என்று மரத்தடியைத் தேடிப்போனார். அந்த திருவெண்காடர் தான் பட்டினத்தார் என்ற உயர் துறவி.


இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி துறவு பூண்ட பட்டினத்தாரிடம் மனைவி, தாயார் உற்றார் உறவினர் என மொத்த உறவும் முட்டி மோதி கேட்டுப்பார்த்தும், கெஞ்சியும் கொஞ்சியும் சொல்லிப்பார்த்தும் அவரது மனம் லௌகீக வாழ்வில் லயிக்க வில்லை. இதன் பெயர் தான் துறவு.

அத்தகைய துறவிக்கே ஒரு நாள் இடுப்பில் நீர்குடம் சுமந்து சென்ற இளம்பெண்கள் துறவுக்குப் பாடம் நடத்தியது இன்னும் வினோதம். ஒரு நாள் பட்டினத்தார் வயல் வரப்பில் தலை வைத்து வானம் பார்த்து படுத்திருந்தார். அவ்வழியே போன இருபெண்களில் ஒருபெண் இயம்பினாள் இங்கே கிடந்திருப்பவர் தான் இல்லம் துறந்த துறவி என்றாள். இரண்டாமவள் இயம்பினாள், சுற்றம் துறந்தவர் சுகம் துறக்க மறுப்பதேன், தரையில் படுக்கும் துறவிக்குத் தலையனைச் சுகம் தேவையோ!" என்றாள்.

இதைக் கேட்ட பட்டினத்தாரோ வெட்கிப்போனார். சுகத்தைத் துறக்காத நான் எல்லாம் துறந்தேன் என்று எண்ணிக்கொண்டேனே என்று. அங்கிருந்து நகர்ந்தவர் அருகிலிருந்த தரைக்குச் சென்று தலையனை இன்றிக் கிடக்கலானார். இளக்காரமாய்ப் பேசிச் சென்ற இளம்பெண்கள் இடுப்பில் குடத்தோடு திரும்பி வந்தனர். இருவரில் ஒருவள் இயம்பினாள், "பார்த்தாயா பட்டினத்தாரை, நீ சொன்னதைக் கேட்டதால் தலைச் சுகத்தையும் துறந்து தரையில் கிடப்பதை. இவரைப் போய் ஏளனம் செய்தாயே"! என்றாள். இதைக் கேட்ட இரண்டாவளோ "கடந்து போகும் பெண்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக்கேட்டு, இன்னும் பூலோக வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருக்கிறார். இவரெல்லாம் என்ன துறவி?" என்று போட்டாளே இன்னொரு போடு.

பட்டினத்தாருக்கு உண்மையான துறவு பற்றி மீண்டும் பாடம் கிட்டியது அப்போது தான். ஆக துறவு என்று வந்து விட்டால் அகம், புறம், இகம், சுகம், என்று உலக நடப்புகளில் நாட்டமின்றி இறை சிந்தனையும் அவனை அடைவதுமே லட்சியமென்றும் மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்திருப்பதே என்பதைப் பட்டினத்தாரின் வாழ்க்கை உணர்த்துகிறது.

துறவு என்பது சுகங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் பற்றறிருப்பது. சல்லிக் காசு கூட் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் சாதாக்குடிலில் இருப்பது.

ஆனால் இன்றைய துறவிகளாக தன்னைக் காட்டிக்கொள்பவர்கள் காவியைக் கட்டிக் கொண்டு மக்களிடம் இறை போதனைகள் செய்பவர்கள் எத்தகையவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் துறவு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாது இருக்கிறது.

துறவி போன்ற வெளித்தோற்றம் கொண்டவர்களின் இன்றைய வாழ்க்கை முறை என்ன. சொகுசு படுக்கை. படுத்தால் ஆளே உள்ளே போய்விடும் அளவிற்கு பொசு பொசு பஞ்சு மெத்தை. குளு குளு ஏசி அறை. கலைஞரை எதிர்பார்க்காத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள். உல்லாசமாய் இருக்க பெண்கள். உயர் பணக்காரர்கள் அனுபவிக்கும் சொகுசு கார்கள். கோடிக்கணக்கில் பணமும், மதிப்பிலடங்கா நிலங்களும்.

இவற்றையெல்லாம் இவர்கள் பெருவது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான். அதாவது இறைவன் பற்றிய ஆன்மீகத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஃபுரொபஸர் வேலை தான். இந்த வேலையை எப்படிச் செய்கிறார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை. ஆன்மீகம் பற்றிய அத்தனை புத்தகங்களையும் சிறுவயதிலிருந்து படித்து விட்டு அதை அப்படியே மக்களுக்கு சுவை பட எடுத்துச் சொல்ல வேண்டும். கல்லூரி ஆசிரியர் கூட தனக்கு எந்த துறையில் நல்ல தேர்ச்சி இருக்கிறதோ அதேத்துறையை நன்கு படித்து அந்த பாடத்தைப் பற்றி அடுத்து வரும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தானே. இப்படி வெறுமனே எடுத்துச் சொல்பவர்களுக்கு ஏன் இத்தனை பரிவாரங்களும், பணமும் ஆர்பாட்டங்களும் என்பது விளங்கவில்லை.

மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே எடுத்துச் சொல்பவன் துறவி அல்ல. வாழ்ந்து காட்டுபவன் தான் துறவி. நிஜத் துறவிகள் குமுதத்திலும், ஆனந்த விகடனிலும் வாராவாரம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏன், இக வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளில் பங்கேற்பது தன் துறவுக்கே பங்கம் ஏற்படுத்தும் என்று இருக்கும் இடமே தெரியாமல் மறைந்திருப்பார்கள்.

ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஊடகங்களும் தங்கள் சுய வியாபாரத்திற்காக ஆன்மீகத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. பக்தி மலர், ஆன்மீக மலர், என்றெல்லாம் மாறி மாறி போட்டி மலர்களை வெளியிட்டு, இந்த தோஷத்திற்கு இந்த சாமியைக் கும்பிடுங்கள். கல்யாணம் ஆக இந்த சாமி, வியாபாரம் நடக்க இந்த சாமி என்றெல்லாம் ஏற்கனவே குழம்பியிருக்கும் மக்களை மேலும் குழப்பி காசு பார்க்கின்றனர். தத்துவார்த்தமான இந்து மதத்தை வியாபாரப் பொருளாக விற்றுக் காசு பார்க்கிறார்கள். இந்த வியாபாரப் போட்டியில் ஒன்றுமில்லா காவிகளையும் போலிகளையும் மக்களிடம் பெரியமனிதர்களாக அடையாளம் காட்டி மக்களை ஏமாறத்தூண்டுகின்றனர்
என்றால் மிகையாகாது.

ஆன்மீகத்தில் எந்த விதத்திலும் சுய ஆராய்ச்சியில் ஈடுபடாமலும், இறைவனோடு ஒன்றிப் போகும் தவமோ, குறைந்த பட்சம் தியானமோ கூட செய்து பார்க்காதவர்கள், ஏட்டுப் புத்தகத்தில் கற்றதை ரோட்டுக்கு வந்து வாந்தி எடுக்கும் வேலையை மட்டும் செய்பவர்களை துறவிகள் என்று மக்கள் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு முக்கியம் கொடுத்து பெரியவர்களாக்குவது பரிதாபத்திற்கு உரியது.

மக்கள் யோசிக்க வேண்டும். இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவன் ஒரு துறவியா? என்று சாதாரணமாகக் கேள்வி கேட்டு அதற்கு விடை தெரிந்துகொள்ள முயன்றாலே போதும். போலிகளை மக்கள் அடையாளம் காண்பார்கள்.

அர்ஜுனனே கீதையில் கண்ணனிடம் "கண்ணா, என்னைக் குழப்பாதே! நான் கேட்பதற்கு குழப்பம் ஏற்படாதவகையில் தெளிவாக பதில் சொல்!" என்று தனக்கு திருப்தி அளிக்கும் வரை கேள்வி கேட்டுத்தான் தெளிந்தான். கண்ணன் தான் இறைவனாயிற்றே அவன் சொல்வதை அப்படியே கேட்டு விடுவோம் என்று இருக்கவில்லை. ஆனால் ஏன் மக்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதில்லை என்பதே வேதனை!

நண்பர்களே! இந்து தர்மம் சாமியார்களின் கையில் கிடையாது. இந்து தர்மத்திற்கு யாரும் தலைவர்கள் கிடையாது. இன்று முதல் இவர் உங்களுக்கு போதிக்கும் துறவி என்று யாரும் ஒருவரை பணிக்கு அமர்த்துவதும் கிடையாது. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பகவத் கீதை, உபநிஷத்துக்கள், ஸ்ரீமத் பாகவதம், வேதங்கள் என்று பல விஷயங்கள் மனிதனின் வாழ்வியல் தர்மங்களையும், ஆத்மா பரமாத்மா என்ற ஆழ்ந்த ஆன்மீக விஷயங்களையும் எடுத்துச் சொல்லும் தலை சிறந்த ஆசிரியர்களாக இருக்கின்றன.

இறைவனை நீங்களே தேடுங்கள். தனியாக அமர்ந்து தியானியுங்கள். மிகப் ப்ரம்மாண்டமான எல்லையற்ற இந்தப் ப்ரபஞ்சத்தின் சக்தியை பற்றி சிந்தியுங்கள். நாம் யார்? நமக்குள்ளே உணர்ச்சிகள் எப்படி வேலை செய்கின்றன? ஆத்மா என்பது உடலில் எங்கே இருக்க முடியும்? நான் என்று உணர்கிறேனே எனது உண்மையான தோற்றம் என்ன? என்று ரமண மகரிஷி போல ஆத்மாவின் தேடுதலில் இறங்குங்கள். ஆண்மீகத்தின் உண்மை நிலையையும் இறைவனின் உண்மை உணர்வையும் பெறுவீர்கள். இறைவனைக் காணும் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். மனிதர்களே! சிந்தியுங்கள்.

__________________________________________________________________

கொசுறு: சாமியாரின் கா.( )..லைப் பிடித்துவிடும் நடிகையை தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று சாமியார் கா..( )..ப் பிடித்து விடுகிறார். எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. தனக்கு கணவனாக அமைந்தவனின் கால்களை இவள் அன்போடு தொட்டாவது பார்த்திருப்பாளா என்று! இப்படி தன் கணவனுக்குச் செய்திருந்தால் அவன் மகாராணியாக இவளை வைத்திருப்பானே! கட்டின புருஷனிடம் நான் என்ற அகம்பாவத்திலும் பெண்ணியம் பெண்ணுரிமை என்று ஈகோச் சண்டை போட்டு விட்டு கண்டவனின் கா..( )...லைப் பிடுத்து விடுகிறார்கள். இது தானா நாகரீகப் பெண்களின் அடையாளம் !?

இன்றைக்கும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் நீதிமன்ற வாசலில் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனைச் சாமியார்களின் கால்கள் இவர்கள் கரங்களுக்காக காத்திருக்கின்றனவோ!

Wednesday, February 17, 2010

சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்!


மேற்கண்ட தலைப்பு பற்றிய எமது கட்டுரை தமிழ் ஹிந்து. காமில் வெளியானது.


அதன் சாரம் இதோ!

பல நேரங்களில் உண்டாகும் அனுபவம் இது; இந்து மதத்திற்கெதிரான சதிகளைச் செய்யும் பிற மதத்தினர் பற்றியும் அரசாங்க நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களின் மோசடிகள் பற்றியும் நம்மவர்களிடம் விவாதிக்க நேர்ந்தால் அங்கே முதலில் அடிக்கப்படுவது சமத்துவ ஜல்லி. வெளிப்படையாக பிற மதத்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பேசுவதையே மதவாதமாகப் பார்க்கும் போக்கு நம் மக்களிடம் இன்னும் தொடர்கிறது. வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். சத்தமாகப் பேசப் பயப்படுகிறார்கள்.......


.....ஆனால் இந்துக்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பை சிதைக்கத்தான் இப்போது பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அப்படி நடந்தால் ஆன்மிக நாட்டத்தை விட சமூகப் போராட்டத்திலேயே மக்கள் கவனம் சிதறும். அப்போது மனிதர்களிடம் அன்பு குறைந்து வன்முறைகளும் போராட்டங்களுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒரு சூழலை சமூகத்தில் உருவாக்கத்தான் இந்துக் கலாசாரத்தைச் சிதைக்க விரும்புபவர்கள் முயற்சிக்கிறார்கள்.....

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கிப் படிக்கலாம்.

http://www.tamilhindu.com/2010/02/hypocritic-secularists-and-the-dangers

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Saturday, December 19, 2009

மனத்தினால் நன்மையையே நினைப்போம்!


நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் செய்யும் கெட்ட காரியம், வாயால் புரளிப் பேசுகிறோம், மனத்தினால் கெட்ட நினைவுகள்
கொள்கிறோம், பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்
பழகிக்கொள்ள வேண்டும்.

சம்பாதிப்பதற்கே பொழுதெல்லாம் போய் விடுகிறது, இதற்கெல்லாம் நேரம் ஏது
என்பீர்கள். சம்பாதிப்பது குடும்பஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால்
யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லையே!

வீண் பேச்சு, பிறரைக் கேலி செய்தல், வேடிக்கை பார்த்தல், நியூஸ் பேப்பர்
விமர்சனம் இவற்றில் எவ்வளவு நேரம் வீணாகிறது.

அந்த நேரத்தையெல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையில் செலவழிக்கலாமே! தனியாக நேரம் ஒதுக்காவிட்டாலும் பஸ்ஸிலோ ரயிலிலோ பாதுகாப்பான முறையில் அமர்ந்து பிரயாணிக்கும் போது இறைவனைப் இறைவனை தியானித்துச் செல்லலாமே!

ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராது.
மறு உலகத்திற்கான செலாவனி இறைவனின் நாமமும் இறைசிந்தனை மட்டும் தான்.

மனசு பகவானின் இடம். அதை குப்பைத் தொட்டியாக்கி வைத்திருக்கிறோம்.
அதை சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அதில் அமரவைத்து நாமும் அமைதியாக
அமைந்து விட வேண்டும்.

உலகமே மூழ்கிப்போனாலும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் நிஜமாகவே உலகம் மூழ்கும் போதும் நமக்குக் கைகொடுப்பது இதுவே ஆகும்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆனால் நம்மைப் போன்ற குடும்பஸ்தர்களுக்கு மனதை கட்டுப்படுத்த எந்த
அளவுக்கு முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஜென் கதை
தான் ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்.

நான் இப்போதைக்கு இந்த அளவிற்குத் தான். நீங்கள் எப்படி?

Friday, December 18, 2009

எண்ணங்களும் வாழ்வும்!


எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும்
நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.

எண்ணத்தின் வேகமும், இயல்பும், அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.

எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.

ஒரு முறை ஒரு தீய எண்ணத்தை மனதில் எண்ணி விட்டால் போதும் மறுமடியும் அத்தகைய எண்ணம் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. எனவே எண்ணங்களை நல்லவைகளாகவே எண்ணப்பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்.

- சுவாமி வேதாந்திரி மகரிஷி

Tuesday, December 1, 2009

தரிசியுங்கள் முருதீஸ்வரரை!


















ஸ்ரீ முருதீஸ்வரர் ஆலயம் - கர்நாடகாவாம்!

நான் போனதில்லை.

யாரேனும் இந்த அழகிய கோவிலுக்குச் சென்றிருந்தால் உங்கள் அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஓம் நமச்சிவாய!