உணர்வுகளுக்கு ஆட்படாமல் கர்மங்களை எப்படிச் செய்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் சந்தேகத்திற்கு கண்ணன் இவ்வாறு பதில் கூறுகிறார்.
அர்ஜுனா! நீ யோகத்தில் நிலைபெற்று, பற்று இல்லாது, வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதி காரியம் செய். அத்தகைய சமத்துவ புத்தியே யோகம் எனப்படுகிறது.
சமநிலையான புத்தியை விட காரியங்கள் மீதுள்ள பற்றுதல் மிகவும் தாழ்ந்தது. சம நிலையான புத்தியில் மனதைச் செலுத்திடு, பயன் விரும்பி காரியம் செய்பவர்கள் கீழோர் ஆவர்.
சம நிலையான புத்தி உடையவன் நல்வினை, தீவினை ஆகிய இரண்டிலும் கட்டுப்பட மாட்டான். எனவே அத்தகைய உயர்ந்த ஞானத்தில் நீ கலந்து விடு. கர்மாவைச் செய்தலில் வல்லமை பொருந்தி இருத்தலே யோகம் எனப்படும்.
அர்ஜுனா! சம நிலையான புத்தியுடன் கூடிய விவேகிகள் கர்மங்களைச் செய்து வந்தாலும் அதன் பலனைத் துறந்து பிறவித் துயர் நீங்கி ஆனந்த நிலையை அடைகின்றனர்.
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
பொருத்தமாக ஒரு ஜென் கதை!
ஒரு கிராமத்தில் ஜென் துறவி வசித்துவந்தார். அந்தக் கிராமத்தில் மிகவும் அழகான ஒரு பெண் இருந்தாள். திருமணம் ஆகாத அவள் ஒருநாள் கர்ப்பம் தரித்தாள். பெற்றோரும் உற்றோரும் அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்று அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்திக் கேட்டனர். கிராமத்தில் யார் வம்புக்கும் போகாது பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் கழித்து வரும் ஜென் துறவி ஒருவரைக் கை காண்பித்தாள் அந்தப் பெண்.
மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த ஜென் துறவியிடம் சென்று உன்னால் தான் இவள் கர்பம் ஆகிவிட்டாள் என்றார்கள். அவர் சிரித்துக் கொண்டே "அப்படியா?'' என்று கேட்டார். "என்ன திமிர் பாருங்கள் இவனுக்கு?'' என்று கோபம் கொண்டு குழந்தை பிறந்ததும் அந்தத் துறவியின் கைகளில் ஒப்படைத்து "இந்தக் குழந்தைக்கு நீ தான் தகப்பன். இதனை வளர்ப்பது உன் பொறுப்பு'' என்று குழந்தையை அவரிடம் கொடுத்தனர். "அப்படியா?" என்று வாங்கிக்கொண்டார்.
அந்தக் குழந்தையைத் தன் குடிசையில் அன்புடன் வளர்க்கலானர் துறவி.
சில நாட்களுக்குப் பிறகு, குற்ற உணர்வு தாளாத அந்தப் பெண் அழுது கொண்டே, அந்தத் துறவி அப்பாவி என்றும் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் தான் அக்குழந்தைக்குத் தகப்பன் என்றும் அந்தப் பையனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான் ஊருக்குள் பொய் சொன்னதாகவும் தெரிவித்தாள்.
ஊரே மீண்டும் திரண்டு போய் அத்துறவியின் குடிசை முன்பு நின்றது. எல்லோரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். ஐயா வயதின் வேகத்தில் இந்தப் பெண் தவறிழைத்து விட்டாள். உண்மையில் குழந்தயின் தகப்பன் இந்த இளைஞன் தான் என்று கூறி அவனை கைகாட்டினார்கள் கிராமத்தினர்.
"அப்படியா?' என்றார் துறவி.
தத்துவம்:- புத்தியில் சமநிலை
No comments:
Post a Comment