Sunday, August 8, 2010

கீதோபதேசம் - நீ அழியாத பரம்பொருள்!அர்ஜுனன் கேட்கிறான்..

பரமேஸ்வரா! புருஷோத்தமனே! நீ உன்னைப் பற்றி விளக்கிக் கூறிய உன் தெய்வீக வடிவத்தைக் காண விரும்புகிறேன்.

இறைவா, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று நீ நினைத்தால், யோகேஸ்வரா உன்னுடைய என்றும் அழிவற்ற உருவத்தை எனக்குக் காட்ட வேண்டும்.

பகவான் கூறுகிறார்...

"பார்த்தா! பலவகைப்பட்ட பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய் இனி பார்!"

ஆதித்யர்களையும், வசுக்களையும், ருத்ரர்களையும், அசுவினி தேவதைகளையும் மருத்துகளையும் அர்சுனா! இதுவரை காணாத அதிசயங்கள் பலவற்றைப் பார்.

அர்ஜுனா! எனது இவ்வுடலில், ப்ரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் ஒருங்கிணைந்திருப்பதைப் பார். இதைத்தவிர மேலும் பார்க்க விரும்பும் வேரு பலவற்றையும் இப்போது பார்.

ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நினையைப் பார்."

ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.

அப்போது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவாதி தேவனின் அந்த உடலில் ஒன்றுகூடி இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.

பிறகு அர்ஜுனன் பெருவியப்புடன் ரோமம் சிலிர்க்க குனிந்த தலையுடனும் கூப்பிய கரங்களுடனும் இறைவனை வணங்கிக் கூறலானான்.

"இறைவா! உன் உடலில் தேவர்கள் அனைவரையும் பல்வேறு உயிர்களின் கூட்டத்தையும், தாமரை மலரின் மேல் அமர்ந்துள்ள இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் அனைவரையும் தேவலோகத்துச் சர்ப்பங்களையும் காண்கிறேன்.

உலக வடிவுடைய உலகநாயகா! எண்ணில் அடங்கா கைகள் வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையற்ற பரந்த உருவத்தை எங்கும் காண்கிறேன். மேலும் உமது தொடக்கத்தையோ நடுப்பகுதியையோ, முடிவையோ என்னால் காண முடியவில்லை.

சிவனின் அடியையும் முடியையும் காணமுடியாமல் விஷ்னும் ப்ரம்மாவும் தோற்ற கதையை இதோடு ஒப்பிடலாம். ப்ரபஞ்சம் என்பது அளப்பரிய அளவு பெரியது என்பதை ஒரு உருவகத்தோடு நம் மனதில் பதிய வைக்க இவ்வாறு கதைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதையே இங்கே அர்ஜுனன் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. மிகப்பெரிய சக்தியான இந்த ப்ரபஞ்சத்திற்கும் ஒரு மூலசக்தி அல்லது ஆதார சக்தி ஒன்று இருக்கிறது. அறிவியல் தான் எல்லாம் என்று கூறும் அறிவியளாலர்களின் கணிப்பிற்கும் அடங்காத அந்த சக்திமூலத்தை தான் இறைவன் என்று அழைக்கிறோம். அந்த சக்திமூலத்தை காணும் பாக்கியத்தையே அர்ஜுனன் அடைந்திருக்கிறான் என்பதை கீதை உணர்த்துகிறது.


"க்ரீடம் அணிந்து, கதையையும், சக்கரத்தையும் ஏந்தி எங்கும் பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாய் காண்பதர்கு அரியவராய் சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உன்னைக் காண்கிறேன்.

ஆரம்பம், நடு முடிவு இல்லாதவரும் முடிவில்லாத சக்தியை உடையவரும், எண்ணற்ற கைகளை உடையவரும், சூரிய, சந்திரர்களே கண்களாய் கொழுந்து விட்டெரியும் நெருப்பே வாயாகக் கொண்டவரும், தன்னுடைய சுடரொளியால் ப்ரபஞ்சத்தையே எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன்.

நீ அழியாத பரம்பொருள், அறியத்தக்கவனும் நீயே. இந்த உலகத்திற்கு ஒப்பற்ற உறைவிடமும் நீயே. நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவனும் நீயே! என்றென்றும் உள்ள பரமாத்மா நீயே!"

என்று கூறி ஸ்ரீ க்ருஷ்ணரை நான் என்ற நினைவையே துறந்து திறந்த ஆன்மாவாக சரணடைகிறான் அர்ஜுனன்.No comments: