Thursday, August 5, 2010

என்னை மட்டுமே நினைத்திரு!


'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்து விடக்கூடாது. வியாபர வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகீக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை. பணத்திற்காக பறக்காத போது பகவத் சிந்தனைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்கியமும் தன்னாலேயே உண்டாகும்.

ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.

தர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றைப் தீர்கமாகப் பின்பற்றி அதன் வழி நடப்பதே மிகப்பெரிய நற்காரியமாகும்.

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குக் குறுக்கு வழி இல்லையா? ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. "என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்து விடுகிறான்" என்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைத்திருக்கிறார். "நாஸ்தி அத்ர ஸம்சய:" - இதில் சந்தேகமே இல்லை என்று காரண்டியும் கொடுக்கிறார்.

"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


3 comments:

Anonymous said...

//தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும்.//

A Supreme philosophy which is practically impossible.

To start with, we should atleast try to practice this at home and then gradually begin to spread our wings to other areas.

//தர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு //

Though pragmatic, yet another gem which is out of context in this Kaliyugam.

regards
mohan

Anonymous said...

//Though pragmatic //

pls read as "not pragmatic".

thanks
mohan

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு மோகன்! கலியுகத்தில் பெற்ற தாய் தந்தையரையே வெறுப்புடன் பார்க்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் என்ன. பெரியவர்களின் போதனைகள் அவர்களையும் சென்றடைய நாம் பாடுபடுவோம். மனித மனத்தால் முடியாதது இல்லையே!