Friday, August 13, 2010

உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது!




"எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப்பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைபைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்."

"மிருகபலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்."

"புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும் பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் ப்ரகடனப்படுத்துங்கள்."

"சமய சாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமய சாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்."

"ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ மனதிற்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன் கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்."

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்."




சில சுவாரஸ்யங்கள்.:

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மைசூர் மகாராஜா, “நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை
விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தாராம். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார். சத்தியத்தின் வீரியம் இது தான் போலும்.


இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின் அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம். இன்றைக்கும் கிறிஸ்தவ அரசாங்கத்தின் பிடியில் தான் இந்தியா இருக்கிறது என்று
தெரிந்தால் மேலுலகத்திலும் அவர் நிம்மதி இழக்கலாம்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார். அதை வெளிப்படையாக விவாதித்தும் இருக்கிறார்.

அன்றைக்கே கூட கிறிஸ்தவ மத வெறியர்கள் இந்து சாமியார்களை அவமதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்பதற்கு சுவாமி விவேகானந்தரின் வரலாறே சாட்சி எனலாம். சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை. மும்பையில் பிறந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப் பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப் பற்றி அமெரிக்காவிலேயே அவதூறாகப் பேசவைத்தனர். அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லையாம். இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப் பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர். இந்த கொள்ளைக்கூட்டத்தை நம்பி இன்றைய இந்தியாவில் மந்தை மந்தையாக மதம் மாறும் கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

சுவாமி விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதைப் பத்தி பத்தியாகப் படிப்பாராம். நம்மைப் போல் வார்த்தை வார்த்தையாக இல்லை.

சிறப்பு தானே!




"அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுந்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளோ அல்லது வேறு காரனங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்போது சிந்திக்கவேண்டியது ஒன்று தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து அந்தக் கப்பலைப் பழுது பார்க்கப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து இந்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் பணிக்கு தருவோம். அல்லது அந்தப் பணியிலே தோல்வி கண்டால் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி மடிவோம். புறப்படுங்கள். நடைபோடுங்கள், தேசம் காக்க உங்களை அர்ப்பணியுங்கள்"

- சுவாமி விவேகானந்தர்


5 comments:

எஸ்.கே said...

பதிவு மிக நன்றாக இருந்தது!

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எஸ் கே!

virutcham said...

நல்ல பதிவு

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விருட்சம்!

Kaarthik said...

தேசம் காக்க தயார், மிக அற்புதமான பகிர்வு,
நன்றி தோழரே!