Sunday, August 29, 2010

ஜாதிகளை இணைத்தால் பிரச்சனை!



ஜாதிகளை எல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் தான் சண்டை ஜாஸ்தியாகிறது. வாதத்தால் ஒற்றுமை ஏற்படுத்த முற்படாமல், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்று கூட இல்லாமல், பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லோரும் சேர்ந்து செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் உண்டாகி விடும்.

தானம் தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனசின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் நீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபஹ்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

"பாடும் பணி" யினால் ஜனங்களின் நெஞ்சம் உருகி பரமேஸ்வரனிடம் சேருமாறு செய்தது, அப்பர் ஸ்வாமிகளின் கைவண்ணம். அதோடு, தேக உழைப்பாக ஓர் உழவர் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் ப்ராகரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கினார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி, அம்மையப்பரிடம் பக்தி வைத்து எல்லோரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்ற அன்பில் ஒன்றுபட்டு சேவை செய்யும் போது களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமை ஏற்படும்.

'தனக்கு மிஞ்சி தானம்' என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் "தனக்கு" என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தருமத்திற்குச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தானம்". நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் அத்தனையையும் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரிதான் ஆசை. எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்" என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


No comments: