அதிகாலையின் அயர்ந்த தூக்கத்திலிருந்தேன். வழக்கம் போல என்னை எழுப்பினார் பால்காரர். அதிகாலையில் கதவில் கட்டியிருக்கும் பையை தோண்டி தொங்கிக் கொண்டிருக்கும் பால்கவர்களை பத்திரமாக சமயற்கட்டில் கொண்டு வைப்பது ஒரு மகத்தான வேலை.
காரணம் நாம் மறந்துவிட்டால் போச்சு பூனை பசியாறிவிடும். பூனை எப்படி பசியாறலாம், கன்றுக்குட்டிக்கே கொடுக்காமல் அல்லவா பசுவின் பாலை நாம் பறித்துக் குடித்துக் கொண்டிருக்கிறோம்? குறுக்கே பூனை வந்தால் விட்டுவிடுவோமா என்ன?
பாலுக்கு ஏங்கும் பூனை பாவம் தான். ஆனால் எறும்புக்கும், காக்கைக்கும், பூனைக்கும் ருசியாகப் பசியாற உணவளித்துவிட்டு உண்டு வாழ நாம் என்ன சங்ககாலத்திலா இருக்கிறோம்.
இது க்ளோபளைசேஷன் காலம். அடுத்தவர் வயிற்றிலிருக்கும் உணவைக்கூட பிடுங்கித் தின்று ஏப்பம் விடும் காலம். ஜீவகாருண்யத்திற்கெல்லாம் இங்கே இடமுண்டா என்ன?
பூனைக்கு ஜீவகாருண்யம் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, பசு ஈன்ற கன்றுக்குட்டிக்காவது நாம் ஜீவகாருண்யம் காட்டியே ஆக வேண்டும். நாம் எதையும் பெரிதாகச் செய்யவேண்டியதில்லை. பசு தன் குட்டிக்கென சுரக்கும் பாலை சொட்டுவிடாமல் கறந்து வடிகட்டி குடித்துவிடாமல் அதற்கும் கொஞ்சம் மிச்சம் வைத்தால் அதுவே நாம் கன்றுக்கு ஈனும் ஜீவ காருண்யம். சகோதரர்கள் இருவர் தாய்ப்பாலை பங்கிட்டுக் கொள்வதைப் போல மனிதர்களுக்கெல்லாம் இரண்டாம் தாயாக விளங்கும் பசுவின் பாலை அதன் குட்டியோடு நாம் பங்கிட்டுக் குடிக்க வேண்டும். அதுதான் தர்மம்.
ஆனால் வீட்டுக்கதவில் பால்போட்டுச் செல்பவரிடம் இந்தக் கவரிலிருக்கும் பால் எந்தப் பசுவோடது? அந்தப் பசுவின் கன்றுக்குக் கொஞ்சம் பால் மிஞ்சியதா? என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ஏதோ ஒரு பசு இன்றைக்கு நமக்கு பால் கொடுத்திருக்கிறது. அந்த பசு மாதா வாழ்க என எண்ணிக்கொண்டு அந்த நாள் டீ காபி குடிக்க வேண்டியது தான்.
சிறுவயதிலிருந்தே பசுக்களை அருகிலிருந்து பார்த்து வளர்ந்ததால் என்னையறியாமல் பசுவென்றால் ஒரு பாசம்.
மதுரை மாநகரில் வாசம் செய்த காலத்தில், காலையும் மாலையும் பசுவைத் தெருவில் கட்டி சுடச்சுட பால் கரந்து தருவார்கள். 100, 200 அரைலிட்டர் ஒரு லிட்டர் என சின்னச் சின்ன அளவைகளில் அளந்து ஊத்துவார்கள். இப்பொழுதெல்லாம் கவர்ப்பால், காலையில் கதவில் தொங்கும் பையிலோ டப்பாவிலோ வந்து விழுந்துவிடுகிறது.
பள்ளிக்காலங்களில் எங்கள் பக்கத்து வீட்டில் மாடு வளர்ப்பார்கள். 10, 12 பசுமாடுகள் அதே அளவு எருமைகளும் வளர்க்கப்பட்டன. வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு அவைகளின் நடவடிக்கைகளைப் பார்ப்பதே ஒரு அழகான அனுபவம்.
பசுக்கள் வைக்கோலைத் தின்பதும் அதனை ஆரஅமர அசைப்போட்டு கொண்டிருபதையும் அருகேயே இருந்து பார்ப்பதும் நேரம்போவதே தெரியாமல் இருந்தது. மாட்டுக்காரர் பால்கறந்து விட்டு மிச்சத்தை குடிக்க அதன் கன்றை அவிழ்த்து விடுவார். அது ஓடிவந்து மிச்சம் மீதிப்பாலை முட்டி முட்டி குடிப்பதும் அதன் தாய் நக்கிக்கொடுத்து உறவாடுவதும் ஒரு ரம்யமான அழகு.
எங்கள் வீட்டு வாசலிலேயே மாடு சாணியும் போடும், மூத்திரமும் கொட்டும். அப்போதெல்லாம் யாரும் சண்டைக்குப் போக மாட்டார்கள். சட்டம் பேச மாட்டார்கள். சானத்தை அப்படியே கையிலெடுத்து தண்ணீரில் கரைத்து வாசல் தெளித்து விட்டு பசுவைத் தொட்டு கும்பிட்டுச் சென்றுவிடுவார்கள்.
மாடு சினைபிடித்தால் அதன் பின்பக்கத்திலிருந்து நீர் வடியும். ஒருவித வாடை வந்து கொண்டே இருக்கும். இந்த மாட்டிற்குள்ளே என்ன நடக்கிறது என்று அறிய பள்ளிநேரம் போக மீதி நேரமெல்லாம் அந்த மாட்டையே உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் மாடு வித்தியாசமாக சப்தமெழுப்பும். கால்கள் அகலவிரியும். பின்பகுதியிலிருந்து பொத்தென்று நீர் கொட்டும். பின்னாடியே ஏதோ ஒன்று கஷ்டப்பட்டு வெளிவருவதை பதைபதைப்புடன் பார்ப்பேன். அது தலை.
ஆம் சிறிய கன்றுக்குட்டி, எட்டிப் பார்க்கிறது. முதலில் தலை, உடல் பின் வால் என்று மொத்தமும் வெளியே வந்து பொத்தென்று கீழே விழ, தாய்ப் பசு உடனே திரும்பி அதனை முகர்ந்து பார்த்து தலையால் தள்ளி நக்கிக் கொடுத்து அது நிற்க முயலும் போது தாங்கிப் பிடித்து அருகே அழைத்து இருத்திக் கொள்ளும். எத்தனை ரம்யமான தாய்சேய் உறவு. இயற்கையின் அத்தனை படைப்பிலும் உயர்ந்த படைப்பு தாய், அத்தனை உணர்ச்சியிலும் உயர்வான உணர்ச்சி தாய் பாசம்.
என்றைக்காவது ஒரு முறை ஏதாவதொரு பசுவின் கன்று இறந்து போகும். கன்றைக்கானாது பசுத்தாயின் கண்ணோரங்களில் வழியும் கண்ணீர் தாய்ப்பாசத்தின் உணர்ச்சிப்பூர்வ வெளிப்பாடு. வைக்கோல் உண்ணாது, பால் கறக்காது, இரவு உறங்காது ஈனமான சப்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கும். அதன் வேதனையைப் போக்க மாட்டுக்காரர் இறந்து போன கன்றின் தோலில் வைக்கோலை திணித்து நிஜக்கன்றுக்குட்டி போலவே பாடம் செய்து, பசுத்தாயின் கண்களில் படுமாறு தூரக்கம்பொன்றில் தொங்க விடுவார். அதனைப் பார்க்கும் பசு தன் கன்று தான் அங்கே இருக்கிறதென்று சமாதானமடைந்து நாளடைவில் துக்கம் மறந்து உணவைத் துய்த்து வாழத் துவங்கும். மனிதத் தாயோ, பசுத்தாயோ பாசத்தில் இருவரும் ஒருவரே என மனம் நெகிழச் செய்யும் பசுவின் உணர்ச்சிகளை அருகேயே இருந்து பார்த்த காலங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.
எல்லோருக்கும் தாய்!
சப்தமில்லாத ஒரு உணர்ச்சிப் போதனையை, எல்லா ஜீவராசியிலும் ஒரே உணர்ச்சியாய் இறைவன் இருக்கிறான் என்பதையும் கண் முன்னே காணக்கிடைக்கும் காட்சி அது. இந்தப் பசு என்கிற இரண்டாம் தாயால் மனிதர்கள் என்னவெல்லாம் நன்மை அனுபவிக்கிறார்கள்!
பசு தருவது:- பால், அதனால் நாம் அடையும் பயன், காப்பி, டீ, தையிர், மோர், பால்கோவா, பலவகை மில்க்ஸ்வீட்டுகள். குழந்தைக்கும் கொடுக்க ஏற்றது பசும் பால். சானமும், கோமியமும் கிருமி நாசினி! சானம் எருவாகி சமைத்துச் சாப்பிட உதவுகிறது. சானத்தை இலை தழைகளுடன் சேர்த்து அப்படியே குறிப்பிட்ட காலத்திற்கு கொட்டி வைத்தால் வயலுக்கு மிகவும் சுத்தமான சத்தான உரம் கிடைக்கிறது.
இன்னொரு முக்கியமான விஷயம், அறுவடை செய்து மிஞ்சிய வைக்கோலை மாடு உணவாக கொள்வதால் பெரிய வயல் கழிவை அதுவே கிரகித்துக் கொள்கிறது. அது மனித சுற்றுச் சூழலுக்கு நன்மையும் கூட. இப்படி மாடு பலவகைகளில் மனித வாழ்க்கையை காக்கிறது.
இப்படிப்பட்ட பசுமாடு நம் வீட்டருகே இருந்தால் அதனை குடும்ப உறுப்பினர் போல பாவித்து பாசம் காட்ட வேண்டாமா? ஆனால் இன்றைய நகர வாழ்க்கையில் அறுவெறுப்புடன் விரட்டுபவர்கள் அல்லவா அதிகரித்து விட்டார்கள். நன்றி கெட்ட ஜீவகாருண்யமில்லாத சக மிருகங்கள் அவர்கள்!
ரெண்டு பால்கவரை உள்ளே வைப்பதற்குள் என்னவெல்லாம் எண்ணங்கள் மனதில் ஓடிவிட்டன.
வெளியே ஏதோ கூச்சல் குழப்பம் கேட்க எட்டிப் பார்த்தேன். பக்கத்து வீட்டு சாஸ்திரிகள் வாசலில் எதிர் விட்டுக்காரருடன் தர்கம் செய்து கொண்டிருந்தார்.
காரணம் சாஸ்திரிகள் வீட்டு வாசலில் பந்தலிட்டு, ஒரு பசு மாடு கட்டிவைக்கப்பட்டிருந்தது தான். வேதபாட சாலை நடத்தும் சாஸ்திரிகளான அவருக்கு வேஷ்டி, புடவை, சொம்பு என நிறைய தானங்கள் அவ்வப்போது கிடைப்பது வழக்கம். அன்று யாரோ ஒரு பசு மாட்டை தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
வீட்டிற்கு வந்த பசுமாடு சாஸ்திரிகள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழையும் போது சறுக்கலான சிமெண்ட் தரையில் கால் வழுக்கித் தடுமாறி விழுந்து விட்டது. காலில் முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் 'மாங்' என்று கத்திக் கொண்டே இருந்தது. காம்பவுண்டுக்குள் பசுமாடு கஷ்டப்படுவதால் அதனை வீட்டிற்கு வெளியே பந்தல் போட்டு அமர வைத்திருக்கிறார்கள். வலி தாங்காமல் மாடு சப்தமிட்டுக் கொண்டே இருந்தது.
தாய்பால் மறந்த பின் மனிதர்களுக்கு இறக்கும் வரையிலும் பால் கொடுப்பது பசுமாடல்லவா! 'இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால்' என்பார்களே, அப்படி இறந்த பின்னும் பாலூற்றும் வளர்ப்புத் தாய் அல்லவா பசு! அதனால் அதன் வேதனையைப் பார்த்து எல்லோருமே கொஞ்சம் கலங்கித் தான் போனோம்.
கால்நடை மருத்துவருக்கும் சொல்லி அனுப்பி ஆயிற்று. முதல் நாள் இரவு சொன்னால் மறுநாள் மாலை தான் வந்து பார்த்தார். அவர் ரொம்ப பிஸி. தன்னுடைய இயலாமையைக் கூறி வருந்தினார். ஊசி போட்டு மருந்து கரைத்து குடிக்கச் செய்தார். இரவு முழுவதும் மாடு சப்தம் போட்டு மருந்து வேலை செய்தவுடன் அதிகாலை தான் அமைதியாகி இருந்தாள் பசுமாடென்கிற இரண்டாம் தாய்!
மாடு அமைதியாகிவிட எதிர் விட்டுக்காரர் கத்தத் துவங்கிவிட்டார். அவர் வீட்டெதிரே மாட்டை கட்டி வைத்திருப்பதை அவர் விரும்பவில்லையாம்! சாஸ்திர்களுடன் சண்டைக்கு வந்துவிட்டார்.
'மாடு சாணி போடும், மூத்தரம் பெய்யும் அதையெல்லாம் யார்யா சுத்தம்பன்றது..?'
'உங்களுக்கேன் சார் அந்தப் பிரச்சனை, நாங்க பண்ணிக்கிறோம்'
'நீங்க பண்ணிட்டா, நாத்தம் தாங்க முடியாது, கொசு வரும், ஏற்கனவே கொசுத்தொல்லை தாங்க முடியலை, இந்த மாட்டால இன்னும் அதிகமா கொசுவறப்போகுது, மொதல்ல மாட்டைக் கிளப்புங்கய்யா இங்கருந்து...!'
'அதெல்லாம் முடியாது, தோ பாருங்கோ, அது பாவம், ரொம்ப சாது, கால்ல அடிபட்டிருக்கு, அதால எந்திரிச்சு நிக்கக்கூட முடியலை. டாக்டர் நேத்து தான் மருந்து குடுத்துருக்கார். ரெண்டு நாள்ல அது நால்லாயிடும், நாங்களே நல்ல மாட்டுக்காரரைப் பாத்து கொண்டுபோகச் சொல்லி அனுப்பிடுவோம். அதுவரை பொறுத்துக்கோங்க!'
அந்தாள் கேட்கவே இல்லை, சிட்டில மாடு வளர்க்ககூடாதுன்னு ரூல் இருக்கு தெரியும்ல், நான் போலீஸ்ல சொல்லிடுவேன்' என்றெல்லாம் மிரட்டத் துவங்கினார்.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து பசு மாட்டின் இயலாமை நிலையை நீண்ட நேரம் பேசிப் புரியவைத்து ஜீவகாருண்யமில்லாத அந்த மிருகத்தை அதன் வீட்டுக்குள் அனுப்பிவைத்தோம்!
அன்றைய நாள் முழுவதும் அந்த மாட்டினருகிலேயே என்னையறியாமல் என் நேரத்தைக் கழித்தேன். நானும் சாஸ்த்திரிகளும் சேர்ந்து அதற்கு வைக்கோல் வாங்கிப் போட்டோம், அவ்வப்பொழுது, வாழைப்பழம், வாழை இலைகள் பறித்து தின்னக் கொடுத்தோம்.
வீட்டிலிருந்து வெளியே வந்து மாடு என்ன செய்கிறதென்று பார்ப்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. போகும் போது வரும்போதெல்லாம் அதற்குத் தடவிக் கொடுத்துச் சென்றேன். எதையும் எதிர்பாராதது போல அது தன் அசைபோடும் வேலையைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது எழ முயற்சிக்கும், கால் வலித்தால் கொஞ்சம் கத்தும்.
ஓரிருமுறை மருத்துவர் வந்து ஊசி போட்டும் மருந்து கொடுத்தும் ரெண்டு நாட்களில் தானே எழுந்து நின்றது. பசுத்தாய் குணமடைந்தாள்!
பிறகு சாஸ்திரிகள் அவருக்கு தெரிந்த மாடுவளர்ப்பவரிடம் பசுவைத் தாரை வார்த்தார். பிரிய மனமில்லாமல் பிரிந்து போனாள் பசுவென்ற வளர்ப்புத் தாய்!
மறுநாள் காலை, வெளியே ஏதோ கூச்சல்!
அதே எதிர் வீட்டுக்காரர், பால் கவர் போடுபவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்..
அவர் வீட்டுக்கு அன்று பால் கவர் போட லேட்டானதாம்...!