Tuesday, January 31, 2012

செடிகள் முளைத்தால் பிடுங்கி எறியுங்கள்!


பல கோயில்களில், மதிற்சுவர்களில், கோபுரம், மற்றும் விமானத்தின் மேலேயே செடிகள் வளர்ந்திருப்பதைக் காணலாம். பறவைகளின் எச்சம், அவற்றின் மீது படுகையில், கொஞ்சம் ஈரப்பதம் இருந்தாலே போதும், அது பரவி விருஷம் ஆகிவிடும். சிறியதாகவே இருக்கையில் வேரோடு எடுத்துவிட வில்லையென்றால், அது அந்த கட்டிடத்தையே பெயர்த்துவிடும் அபாயம் உண்டு.

இன்று சிதிலமடைந்து காணப்படும் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் அஸ்திவாரம் பழுதானதாலோ, கட்டிடம் கட்டியதின் தவறாலோ பழுதடையவில்லை. மாறாக, கவனியாமையும், மரங்கள் வளர்ந்ததுமே சிதிலமடைந்ததற்கான காரணங்களாகும். தான் செல்லும் கோயில்களில் முளைக்கும் சிறிய செடிகளை அகற்றுவதை தம் பணியாகவே கொண்டார் 'அப்பர் பெருமான் அன்பதி' என்பதை அவர்தம் கையில் கொண்டிருந்த உழவாரக் கரண்டியால் நாம் அறிகிறோம்.

கருங்கற்களால் கோயில் அமைந்தது என்றால், கற்களைப் புரட்டிவிட்டு, செடிகளை மரங்களை அகற்றிவிடலாம். ஆனால் செங்கல் கட்டுமானங்களில் வளர்ந்துவிடும் செடிகளை அகற்றுவதில்,  சிதிலமடைதல் அதிகமாகும் அபாயம் உண்டு.


திருக்கோயில் மீது வளரும் செடிகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதையும்அவற்றின் அவசியத்தையும், முற்காலம் தொட்டே நமது முன்னோர்கள் கற்களில் பதிந்துள்ளார்கள் என்கிற செய்தி தெரியுமா?

திருச்சிராப்பள்ளி அருகே அமைந்துள்ள அன்பில் கிராமத்திலுள்ள நம்பியப்ப ஸ்வாமி கோயில் மற்றும் ஆச்சிராமவல்லியம்மன் கோயில்களில் காணப்படும் அக்கல்வெட்டுக்களின் வாசகங்கள் இதோ:

1. " ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்யுதய சாலிவாகன சகாப்தம் வருடம் 1797 கலியுகாதி வருடம் 4976 இதற்குச் சரியான தமிழ் பவ வருடம் ஆவணி மீ 31 அம்பலூற் ஆசறாமவல்லியம்மனங் கோவில் நம்பியப்ப சுவாமி கோவில் திருப்பணி வேலை பலபேற்வாணுயிற் ஆயிரத்தலவற் உபயம் இந்த திருப்பணியிற் செடிகள் முளைத்தால் கண்ட பேற்கள் பிடுங்கி சுண்ணாம்பு வெல்லமும் சேர்த்துப் பூசவும்."

2. "யிந்த திருப்பணியில் செடிகள் முளைத்தால் கண்ட பேர்கள் பிடுங்கி வேரை நசுக்கி சுண்ணாம்பு வெல்லம் சேத்து அந்தயிடத்தில் பூசவும், யிந்த படிக்கி ஆச்சிறாமவல்லி உத்தரவு. "

மேற்காணும் வாக்கியங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது பொதுவாகவே பல கல்வெட்டுக்களில் காண்பதே. கல்வெட்டு அடிப்பவர்கள் புலவர்களோ, தமிழ் அறிஞர்களோ அல்லர். அவர்கள் தம் தலைவர் அல்லது அரசரின் கூற்றையே கல்லில் வடிக்கின்றனர். இன்றைய ஷிமீணீனீஹீ ஷ்க்ஷீவீமீமீஷீஉ போல்!

எனவே எழுத்துப் பிழைகள் வருவது சகஜம். ஆனால் கருத்து பிழை இல்லையே! செடிகள் முளைத்தால் உடனே பிடுங்கி, சுண்ணாம்பு வெல்லம் வைத்து பூசவேண்டும் என்று சொல்வது, அந்த மதிலையோ, விமானத்தையோ, கோபுரத்தையோ காப்பாற்ற வேண்டும் என்கிற நற்சிந்தனையாலேயே!

இன்று உழவாரப்பணியில் தமிழகத்திலேயே சுமார் 600 க்கும் மேற்பட்ட நற்பணி மன்றங்கள் ஈடுபட்டுள்ளன. அதைப் போலவே அரசு சார்ந்த அறநிலையப் பணியாளர்களும், விளையும் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிற சிந்தனையைக் கொள்தல், பெரும் சேதங்களிலிருந்து கோயிலைக் காப்பதற்கு வழிவகுக்கும்.

அப்படி மரங்கள் வெட்டுவதற்க்கு ஈடாக மரங்கள் வளர்க்க வேண்டும் என்றால் கோயிலைச் சுற்றி அழகிய நந்தவனம் அமைத்து ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய மலர்ச் செடிகளையும், ஆமணக்கு, கொன்றை, வில்வம், பாரிஜாதம், இலுப்பை போன்ற பயன்மிகு மரங்களை வளர்க்கலாமே?


மரங்கள் வளர வேண்டியது, கோயிலைச் சுற்றி, கோயில் மேல் அல்ல.

இவ்வாறு அனைவரும் மரங்களைச் சரியான இடத்தில் வளர்க்கும் அரிய பணியினை மேற்கொண்டால், நமது பண்பாட்டு கலைச் சிறப்பை வெளிப்படுத்தும் திருக்கோயில்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

- கி. ஸ்ரீதரன்
(தமிழக அரசு தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பணி நிறைவு)

நன்றி: யாளி - ரீச் ஃபவுண்டேஷன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே! எங்கேனும் கோவில் சுவற்றிலோ கோபுரத்திலோ செடியோ, மரமோ முளைப்பதைப் பார்த்தால் உடனே அகற்றுவோம்! பழமையான கோவிலைக் காப்போம்!


1 comment:

koodal bala said...

நல்ல தகவல் !