Monday, February 6, 2012

கீதோபதேசம் - சத்துவம், ரஜோ, தமோ!



அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.
  
அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.
  
அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!


- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.


1 comment:

premprakash said...

very nice article. thanks sir.