Saturday, February 11, 2012

நம்மோடு பேசும் மழை!



அது ஒரு அனுபவம்!

ஆம் சுவையான அனுபவம்! அனுபவங்கள் தான் நம்மைச் செதுக்கும் சிற்பி! அனுபவங்கள் உளியைப் போன்றது. உளி தரமாக இருந்தால் செதுக்கப்படும் சிற்பம் சிலையாகும். உளி ஒழுங்கற்றிருந்தால் கல் தூளாகுமே ஒழிய சிற்பமாகாது. நல்லனுபவங்கள் நம்மை சிற்பமாக செதுக்குகின்றன.

கேரளாவில் பாலக்காடு அருகே நெல்லியம்பதி என்று ஓரிடம் இருக்கிறது. மலைகளினூடே செல்லும் சாலைகள். சாலையைக் குறுக்கே கடந்து செல்லும் அழகான சிறிய நீர்வீழ்ச்சிகள். நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் உயர்ந்த மரங்கள். பச்சைப் பசேலெனத் தேயிலைத் தோட்டங்கள் என்று அற்புதமான மலையுச்சி அது.


அந்தப்பகுதி மக்களின் அழகான ஊட்டி. அன்றொரு ஓணம் பண்டிகையின் போது அந்த இடம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. வளைந்து வளைந்து செல்லும் அருமையான
மலைப்பாதையில் மேலே செல்லச்செல்ல அற்புதமான அனுபவம். ஆம், மலை உச்சியின் மேலேயே சேட்டிலைட்டுக்குப் போட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டம் சேட்டிலைட்டுகள் பார்த்து பொறாமைப்படும் படியாக மலைச்சாலைகளில் இறங்கி  நடமாடத்துவங்கியது.


எதிரே குறிப்பிட்ட தூரத்திற்கு என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்ற எனது தலையில் தண்ணீர்படலம்! நான் மேகங்களை அனைத்துக் கொண்டு உறவாடினேன். மெல்லிய காற்று சில்லென்று என்னை குளுமைப்படுத்தியது. மேகங்களோடு சேர்ந்து காற்றும் என்னை வரவேற்று, ஒன்றாய்க் கூடித் தழுவிக் கொண்டதாகவே மகிழ்ந்தேன். 

ஆம், நாம் நேசித்தால் அவைகள் நம்மோடு உறவாடும். இயற்கைக்கும் உணச்சிகள் உண்டு. அவைகள் நம்முடன் பேசும். கட்டிக்கொள்ளும். தழுவும். தாலாட்டுப் பாடி உறங்கச்செய்யும். சப்தம் போட்டு எழுப்பும்! அடித்துத் துறத்தும். எல்லாவற்றிர்கும் காரணங்கள் உண்டு. அதனை உணர்ந்து கொள்ளும் பக்குவத்திலிருந்து நாம் வெகு தூரம் வந்துவிட்டோம். இயற்க்கையுடனான உணர்ச்சி ததும்பும் உறவாடலை நாம் மறந்து விட்டோம். அவற்றை அக்ரினையாகப் பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம்.

ஆனால் இயற்கை என்பது, தாய், தந்தை, சகோதரன், நண்பன், தெய்வம், குறிப்பிட்டுச் சொன்னால் இவை எல்லாமும் நானே என்று கூறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

உச்சிமலை சென்று செங்குத்துப் பாறையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போதும் அந்த மேகங்கள் என்னை விடவில்லை. முகத்தோடு ஒட்டி உரசி விளையாடிச் சென்றது. காற்றில் அவற்றை உறிஞ்சிக் குடித்தேன். கைகளால் தொட்டு மகிழ்ந்தேன். ஒரு அடி எடுத்து வைத்தால் அதள பாதாளம். ஆனால் பயம் வரவில்லை. அவற்றை நேசித்தேன்.

பண்டிகை நாளென்பதால் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ராஜாக்களாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் என் நண்பர்கள்! சின்னதும் பெரிதுமாக பல வகையில் குரங்குகள்.

சிறுவயதில் 'கபீஷ்' என்ற பெயரில் சித்திரக்கதையில் படித்துப் பாசத்தின்பாற்பட்ட குரங்குகள் என்றைக்கும் என் குழந்தைப் பருவ நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

உச்சிப்பாறையின் உச்சியில் இவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்றெண்ணி அவர்கள் அருகே வந்தனர். என் பைகளின் என்ன வென்று நோட்டம் போட்டனர். முன்னே வந்து என் முகத்தைப் எட்டிப் பார்த்துவிட்டு சுற்றி சுற்றி வட்டமிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றுவிட்டனர்.

அந்தக் 'கபீஷ்' கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஆர்வம், எத்தனை உற்சாகம், பூமிப்பந்தின் மொத்த ராஜ்ஜியமும் தமக்கே என்கிற ஆனந்தம். அவைகளை அன்புடன் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.


பல மணி நேரம் அந்த மலை உச்சியின் அமைதியை ரசித்து விட்டு கிளம்பலானேன். மிக அருகே இருந்தமேகம் இன்னும் குளிர்ந்து மழையாகப் பெய்தது. நனைந்தேன். அந்த ஈரத்தை ரசித்தேன். புறப்படும் நேரத்தில் இன்னும் நெருக்கமாக என்னைத் தழுவிக்கொண்டதாக மகிழ்ந்தேன். 

வானத்தைப் பார்த்து நாக்கை நீட்டி மழை நீரை வாஞ்சையுடன் குடித்தேன். என்னைத் தழுவிக்கொண்ட உன்னோடு நான்  என்றும் ஜீவித்திருப்பேன் என்று மனதாரக் கூறிவிட்டு புறப்பட்டேன். மழையோடு காற்றும் கைகோர்த்துக் கொள்ள குளிரில் பற்கள் டைப்படித்தன. வீடு போகும் வரை என்னை மறக்காதே என்று காற்று என்னைக் குளிர்வித்தனுப்பியதாக பூரித்தேன். வீடு சென்றேன். வீடு செல்லும் வரை என்மீது விழுந்த மழையின் துளிகளைத் துடைக்கவில்லை.



அன்று ஒரு வரண்ட நாள். வெறித்த வெள்ளை வானம் சூடாக சுட்டெரித்த தினம்.

இரவு கண்ணயர்ந்த நேரம். வாசலில் அழைப்புமணி சத்தம். வெளி வேலையாகச் சென்ற என் சகோதரர் இரவு தாமதமாக வீடு வந்தார். கதவைத் திறந்து விட்டு உள்ளே சென்று மீண்டும் படுத்துக் கொண்டேன்.

அயர்ந்த உறக்கத்தில் அப்படி ஒரு சப்தம். பலமான காற்று! ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன. ஜன்னலுக்கு வெளியே இருந்த தகடுகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்களில் தண்ணீர் தடதடவென விழும் சப்தம். ஆம், திடீரென வெளியே மழை!

விழிப்பு வந்த நிலையில் கூடத்திற்குவந்தேன். அதிர்ச்சி காத்திருந்தது. வாசற்கதவு பெரிதாகத் திறந்திருந்தது. கூடத்திற்கு வெளியே சென்று பார்த்தால் வாசலில் இரும்புக்கதவு முழுதுமாகத் திறந்திருந்தது. மணியைப்பார்த்தேன். சரியாக ஒன்று! நள்ளிரவில் கதவு திறந்து கிடக்க ஒரு வித பதற்றத்துடன் வீடு முழுவதும் அவசர அவசரமாக சுற்றிப் பார்த்தேன். மழை நீர் விழும் சப்தம் வெளியே இன்னும் கேட்கிறது.

வீட்டுக்குள் யாரும் இல்லை. அரையில் சகோதரர் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் பொறி தட்டியது. அவர் வரும்போது கதைவைத் திறந்துவிட்ட நான் பூட்டாமல் உள்ளே சென்று விட்டேன். நான் பூட்டுவேன் என்றெண்ணி சகோதரரும் போய் தூங்கிவிட்டார். ஆனால் கதவு திறந்தபடியே இருந்திருக்கிறது. முன்னிரவு தாண்டி நள்ளிரவும்!

அவசரமாக ஓடிச்சென்று வாசற்கதவைப் பூட்டி, கூடத்தின் கதவையும் நன்றாகப் பூட்டிவிட்டு உள்ளே சென்றேன். அப்படா என மனது சமாதானம் அடைந்தது.

பூட்டிய வீட்டிலேயே ஆட்டயைப் போடுபவர்கள் ரோட்டுமேலிருக்கும் ஒரு வீடு, வாசல் திறந்து வா வா எனக் கூப்பிட்டால்...!

நல்ல வேளை அப்படி ஏதும் நடப்பதற்குள் மழை வந்து எழுப்பியது என்றெண்ணினேன்.

ஆமாம், மழை எங்கே?

வெளியே இப்போது தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

காற்றில்லை! முழுவதும் அமைதியான சூழல்! ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்!

அதே வரண்ட வானம்!

யார் என்னை எல்லாவற்றிலும் காண்கிறானோ, என்னிடம் எல்லாவற்றையும் காண்கிறானோ, அவன் என் பார்வையிலிருந்து மறைவதில்லை. நானும் அவனது பார்வையிலிருந்து மறைவதில்லை! 

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்!

No comments: