Saturday, March 19, 2011

கல்யாணச் செலவைக் குறையுங்கள்!





விவாஹம் என்பது செலவில்லாத ஒரு வைதிக கர்மா தான். இதில் புதுமண தம்பதிகளுக்கு புதிய ஆடைகளும், சிறிய அளவிலான தங்கத்தில் திருமாங்கல்யம், ரொம்பவும் நெருங்கின பந்தங்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது மட்டுமே போதுமானது.


முஹூர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சத்தம் கேட்கச்செய்து அதற்காக ஏதாவது ஒரு தொகை கொடுப்பதும், வாத்தியார் தக்ஷ்ணை ஆகியவற்றை மட்டுமே செய்தாலே போதும். இவ்வாறு மிகச் சிறிய செலவில் திருமணம் செய்வதே சாஸ்திரபூர்வமானது தான். இப்படி சிம்பிளாக கல்யானம் செய்வது ஒரு பியூன் வேலை செய்பவர்களுக்கு கூட எளிதான காரியம் தான்.


பணம் கொழித்தவர்களும் கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே திருமணம் பண்ண வேண்டும். ஏனெனில் பணம் படைத்தவர்கள் தங்களிடம் பணம் இருக்கிறது என்கிற நினைப்பில் செய்யும் ஆடம்பர திருமணம் டாம்பீகம் போன்றவை மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாகிவிடுகிறது. பணம் இல்லாதவர்களுக்கு தாங்களும் இப்படி திருமணம் செய்ய வேண்டியது சமூகக் கட்டாயமாகிவிடுகிறது.


ஆகையால் கச்சேரி, ஆடம்பர விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வச்தியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கோ, பையணுக்கோ கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தண்டச் செலவாகப் போகக்கூடிய அவர்களது கரன்ஸி தர்ம கரன்ஸியாக மாறி புண்ணியத்தையாவது கொடுக்கும்.


இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால அடுக்குமாடிக் குடித்தனத்தில் வீட்டிலேயே செய்துவிட முடியாது தான். அதனால் தர்மசிந்தனை கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து வசதி இல்லாதவர்களுக்காக ஆங்காங்கே சின்னச்சின்ன கல்யாண மண்டபங்கள் இலவசமாக திருமணங்கள் நடக்கும் வகையில் கட்டித்தர வேண்டும். 


கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடும் இளம் பெண்களும் பையன்களும் பிற்காலங்களில் தனக்கு கல்யாணம் ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த துயரத்திற்கு பணமும் ஆடம்பரங்களின் மீதான கட்டாயங்களும் இருப்பது தான் காரணமாகிறது. 


இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்த்ரீ தர்மம் வீணாகி வருகிறது. நடக்கக்கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.


ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


.

No comments: