இன்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 148 ஆவது பிறந்தநாள்!
சுவாமி விவேகானந்தர் தனது வாழ்வின் லட்சியமாக இவ்வாறு சொல்கிறார்
"மக்களுக்கு அவர்களுடைய தெய்விகத் தன்மையை எடுத்துப் போதிப்பதும் வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும் தான் என்னுடைய லட்சியம்."
இளைஞர்களை வழிநடத்தும் ஓர் பிரகாசமான வழிகாட்டியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர்.
"ஓ வீரனே, துணிவு கொள். 'நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்' என்று கர்வத்துடன் சொல். அதை உரத்த குரலில் பெருமையாகக் கூறு. 'இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை...இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்'.
நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
அறியாமை மிக்க, உயிரற்ற புல்பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது.
தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதைவிடப் போர்களத்தில் மாய்வதே மேல். சகோதரா, துக்கங்களைக் கண்டு அழுவது கூடாது. மரணமோ, நோயோ உனக்கில்லை. துன்பமோ துரதிஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப் படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
இவனை 'நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், 'முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை'. அது தான் வழி. உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை - எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.
'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப்
பொருட்படுத்தாது இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
இரவும் பகலும் திரும்ப திரும்ப பிரார்தனை செய் 'ஓ உலக நாயகியே! என் பலவீனத்தைப் போக்கு, என் கோழைத்தனத்தைப் போக்கு! என்னை மனிதனாக்கு!
- சுவாமி விவேகானந்தர்.
2 comments:
//வீரத்துறவி//
எல்லாத்தையும் துறந்தவர் ஏன் வீரத்தை துறக்கல! பின் எப்படி அவர் துறவி!?
//எல்லாத்தையும் துறந்தவர் ஏன் வீரத்தை துறக்கல! பின் எப்படி அவர் துறவி!?//
பூனை வெளிய வருது :-)
Post a Comment