Friday, May 1, 2009

கீதோபதேசம்!

குந்தியின் மகனே கேள்!  

தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையை செய்து கொண்டே அவர்களால் எப்படி பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன் கேள்.  

இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ, யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்தக் கடவுளை தனக்குரிய அக்கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்.

விளக்கம்:

இங்கே கடமை எனக்குறிப்பிடப்படுவதை பெரும்பாலும் பலர் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்த்து பொருள் ஈட்டும் கடமையை மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். கடமை என்பது வெறும் அலுவலகத்தில் வேலை செய்வது அல்ல. கடமை என்பது ஒரு மனிதன் தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை. தனது மனைவியாகப்பட்டவளைக் காப்பாற்றும் கடமை. தான் ஈன்ற பிள்ளைகளைக் காக்கும் கடமை. தான் கொண்ட சமூகத்தைக் காக்கும் கடமை. தன்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகள், பறவைகள் மற்றும் சிறிய உயிர்கள் என எல்லா ஜீவராசிகளுக்கும் தன்னால் எந்த தீங்கும் நேரா வண்ணம் காக்கும் கடமை. பூமியில் ஜனிக்கும் எல்லா ஜீவராசிகளையும் காக்கும் இயற்க்கையை, நாம் காக்க வேண்டிய கடமை என்று எல்லா விதமான கடமைகளும் மனிதனைச் சேரும்.  

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இவ்வாறான கடமைகளைச் செய்யும் பொழுது அவனது சிந்தனை முழுவதும் தனது கடமையிலும் தன்னை காத்துக் கொள்வதிலுமே நிலைகொண்டிருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் இறைவனைப் பற்றி நினைக்கவே நேரம் இருக்காது. 

அவ்வாறு இருக்கும் போதும் ஒருவன் பரிபூரணமாக இந்தப் பிரபஞ்சத்தில் முழுமையாக வியாபித்திருக்கும் இறைவனை மனதில் பரிபூரணமாக் நினைத்தால் அவன் கடமைகள் முடியும் காலத்தில் இறைவனோடு பூரணமாக சேர்ந்து கொள்ள அதுவே உதவுகிறது. 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை ஒரு பிரயாணமாகவே நினைத்தல் வேண்டும். நாம் சென்று சேர வேண்டிய இடம் இந்த முழுமையான பிரபஞ்சத்திலும் அதில் நிலைத்திருக்கும் எல்லையற்ற சக்தியான இறைவனிடத்திலும் தான் என்பதை முழுமையாக உணர வேண்டும்.  

அவ்வாறு உணரும் பட்சத்தில் நமது போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே, நமது பிறவிக் கடமைகளைச் செய்து கொண்டே, நாம் இறைவனிடம் சேர வேண்டிய பிரயானத்தில் இருக்கிறோம் என்பதை இறைவழிபாடுகள் மூலம் அவ்வப்பொழுது தியானிக்க வேண்டும்.  

அவ்வாறு கடமைகளூடேயும் இறைவனை பூரணமாக வழிபடுபவன், உணர்வுகள் அமைதியடைகிறான். ஆத்மாவாகிய நாம் இறைவனோடு கலந்துவிட இதுவே வழிவகுக்கிறது.

No comments: