Showing posts with label bhagavath geetha. Show all posts
Showing posts with label bhagavath geetha. Show all posts

Monday, September 6, 2010

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 2





சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:|

"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"

தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்||

"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களுமே அவர்களது வகையை
நிர்ணயிக்கிறது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?

பொதுவாக மனிதர்கள் எதையுமே தனதாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவன். மனிதன் மட்டுமல்ல
ஏறக்குறைய அனைத்து விலங்குகளுமே தனது குட்டி, தனது இருப்பிடம், தனது வாழ்வெல்லை
என தனக்கு என்று எதையும் பகுத்து வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவை. இதனால்
பொதுவுடைமையாக எந்த ஒரு கருத்தையும் நீண்ட நாளைக்கு வைத்துக் கொள்ள முடியாது.

எல்லோருக்கும் பொது என்ற கம்யூனிஸமும் உடைந்து தூளாகிப்போவதும் மனிதர்களின்
இந்தப்போக்கினால் தான் என்பது உடைந்து போன கம்யூனிச நாடுகளே சாட்சி!

உதாரணமாக அரசு ஆட்சி என்பது அதிகாரக்கையிருப்பிற்கும், சுக போகத்தை அனுபவிப்பதற்கும்
அல்ல. சுயநலமில்லாத சேவையாக மக்களுக்கான தொண்டாகவே ஆட்சியை நடத்த வேண்டும்.
ஆனால் இந்த பரந்த பொதுவுடைமை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி அமைப்பு
அதை அனுபவித்தவர்களால் தமதாக்கப்பட்டு அதிகாரமும் அரசின் கஜானாவும் ஆள்பவனுக்குச்
சொந்தம் என்று மாறிவிடுகிறது. ஆள்பவன் தன்னை ஆண்டவன் என்றே அழைத்துக் கொள்ளத்
துவங்குகிறான். அவனது சந்ததிகளுக்கும் அத்தகைய சுகபோகங்களை கொடுக்கவும் அவர்கள் அதை விட்டுவிடக்கூடாது எனவும்
விரும்புகிறான். இவ்வாறு மனிதர்கள் எதையும் தமதாக்கிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக
இருப்பதால் பொதுவான எதையும் தனதாக்கிக் கொண்டு காலப்போக்கில் அதையே தனது
அடையாளமாகக் கொண்டு விடுகிறான். அடுத்த சந்ததியினருக்கும் அதையே உரிமையாக்குகிறான்.

கீதையில் பிறப்பு எதுவாகிலும் ஒருவணது குணத்தையும் செயல்களையும் கொண்டே மனிதர்கள்
இன்ன வகையினர் என பிரிக்கப்படுகிறான். ஆனால் நாளடைவில் ஒருவன் தான் எந்த
பிரிவைச் சேர்ந்தவன் என்பதே தனது அடையாளமாகக் கொள்கிறான் என வைத்துக்கொள்வோம்,
அவனுக்கு குழு மனப்பான்மை உருவாகிறது. ஒரே வகையினர் ஒரு குழுவாக புழங்கத் துவங்குகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வர்ணத்தவர்களும் குழுவினர்கள் ஆயினர். பின்னர் குழுவினர்களுக்குள்
பிரிவுகள் அவர்களுக்குள் உட்பிரிவுகள் என்று உருவாகிறது. அவைகளே இன்றைக்கு
ஜாதிகள் என அடையாளம் காணப்படுகின்றது. குணங்களாக வகைப்படுத்தப்பட்டவை
காலப்போக்கில் ஜாதிகள் என்ற பெயருடன் குழுக்களானது பிரபஞ்ச இயக்கவிய லின் ஒரு
பன்பேயன்றி அது தனிப்பட்ட கடவுளால் அல்லது மதத்தினரால் பிரிக்கப்படுவதில்லை. அவைகள்
தானே உருவாகின்றனவே அன்றி உருவாக்கப்படுபவை அல்ல.

உதாரணமாக நிறமற்ற கடல் நீர் பரவி ஓடி பல இடங்களில் சேரும் போது அவை நிறைந்திருக்கும் மண்ணுக்கேற்ற
நிறத்தை பெறுகிறது. நீல நிறமாக, செந்நிறமாக, பச்சை நிறமாக கடல் தோற்றமளிக்கும். தாம் கொண்ட மண்ணின் நிறத்தை தாங்கி
நிற்கும் நீரை நீல ஜாதி நீர், சிவப்பு ஜாதி, நீர், பச்சை ஜாதி நீர் என்று அழைத்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் மனிதர்கள் வகைகளாகி வகைகள் குழுக்களாகி, குழுக்கள் ஜாதிகளாகி இருக்கின்றன.
எப்படி பரந்து விரியும் கடல் நீர் வெவ்வேறு நிறத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாதோ அதேபோலவே
மனிதர்களுக்குள் குழு உருவாவதையும் தவிர்க்க முடியாது. அவைகள் ஜாதிகளாவதும் காலத்தால் நிகழ்வதே
அன்றி தனி மனிதர்களாலோ அல்லது குழுக்களாலோ அல்ல! சரி அவை நிகழ்வதெப்படி?




உதாரணமாக குணத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை நல்லவன் , கெட்டவன் என்று பிரித்துக்
கூறுகிறோம். இவையெல்லாம் நல்ல குணங்கள்,
இவையெல்லாம் கெட்ட குணங்கள் என்று பிரித்து
நல்ல குணம் கொண்டவர்களை நல்லவர்கள் என்றும் கெட்ட குணம் கொண்டவர்களை
கெட்டவர்கள் என்றும் கூறுவதில்லையா! அப்படி ஒரு வகைப்படுத்தல் தான் வர்ணங்கள்.
பின்னாளில் குணங்களின் அடிப்படையில் நல்லவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
அதையே தங்கள் குழு அடையாளமாகக் கொள்கிறார்கள். தங்களை
நல்லவன் ஜாதி என்றும் கெட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை கெட்டவன் ஜாதி
என்றும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிறந்தவர்கள் அந்த ஜாதிக்காரர்கள்
என்றும்
அழைத்து அதையே வழக்கமாக்கிக் கொண்டால் அது ஜாதியாகி விடுகிறது. பிறகு
அதற்குள்ளேயே பிரிவுகளும் வந்து ஏற்றத்தாழ்வுகளும் வந்துவிடுகிறது.

நல்லவன் ஜாதிக்காரன் அதே ஜாதியில் திருமணம் செய்வார்கள். கெட்டவன் ஜாதிக்காரனும் அவ்வாறே!
உதாரனமாக டாக்டர் கம்யூனிட்டி, வக்கீல் கம்யூனிட்டி, சார்டர்ட் அக்கவுன்டன்ட் கம்யூனிட்டி, தொழிலாளர் கம்யூனிட்டி
என்று குழுக்கள் உருவாகிறது. டாக்டர் குழுவைச் சேர்ந்தவர்கள் டாக்டரையே மனமுடிக்க விரும்புவார்கள், வக்கீல் வக்கீலையும்
சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் அதே குழுவிலும் தேடுவார்களே அதுபோல.

இவைகளில் ஏற்றத்தாவு எப்படி உண்டாகிறது. வக்கீல் குழுவிற்கும், போலீஸ் குழுவிற்கும் ஏன் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வு இருந்ததில்லையே? காலப்போக்கில் குழுக்களுக்கிடையே
உண்டாகும் முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகின்றனவே அன்றி இவற்றிர்கு தனிப்பட்டவர்கள் பொறுப்பாக முடியாது.
முரன்பட்ட எந்தக் குழுவிற்கும் ஏதாவது அடிப்படை ஞாயம் இருக்கலாம். ஆனால் அவைகள் உருவாவதும் களையப்படுவதும்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்படித்தான் மக்களிடம் ஜாதிகள் உருவாகின. நல்லவன் ஜாதியில் பிறந்தவன் கெட்ட குணங்களோடும், கெட்டவன் ஜாதியில் பிறந்தவன்
நல்ல குணங்களோடும் இருக்க முடியும்! ஏனெனில் குணங்களின் வகைப் பெயர் தங்கி விட்டதே தவிற குணத்தால்
மனிதன் வகைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே அடிப்படையில் ஜாதிகள் கிடையாது. பின்னால் குழுமயமாக்கப்பட்டது.

ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் வேதத்தில் ஜாதி சொல்லியிருக்கிறது என்று இந்து தர்மத்தையே பழிக்கிறார்கள். ஞான
சூனியத்தின் அடையாளம்.

சரி, இவை எல்லாவற்றிர்கும் மேலாக ஜாதிகளை உண்டாக்கியதே பிராமணன் தான்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சட்டத்தை வகுத்தவனும் பிராமணனே என்றும்
எந்த ஆதாரமும் இல்லாமல் வாழும் மக்களுக்கிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து
வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அதை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் குறைந்த பட்சம்
இந்து தர்மத்தை விளங்கிக்கொள்ளும் புத்தகங்களைக் கூட புரட்டிப் பார்க்காமல்
அவற்றை அப்படியே நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டங்களும் இருக்கின்றன.

தர்மத்தின் படி பார்த்தாலுமே ப்ராமணனுக்கு அரசாளும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
அரசை ஆள்பவனே சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொண்டவனாகிறான். அதிகாரம்
கையில் இல்லாத ஒருவன் சட்டத்தை இயற்றுவது சாத்தியமில்லாத போது பிராமணன்
ஏற்றத்தாழ்வுக்கான சட்டத்தை எப்படி இயற்றி இருக்க முடியும்?

ஒரே குற்றத்தைப் புரிந்த நால்வரில் ப்ராமணனே கடும் தண்டனையைப் பெற்றான் என்ற
இதிகாச நிகழ்வைப் பார்ப்போம்!

மகாபாரதத்தில் அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பாண்டவர்களை திருதிராஷ்டிரன்
வேண்டா வெறுப்பாக நாட்டிற்குள் மீண்டும் அழைத்து வருகிறான். நாட்டின் இளவரசர்
பட்டத்தை துரியோதனனுக்குக் கொடுப்பதா இல்லை யுதிஷ்டிரனுக்குக் கொடுப்பதா?
யாருக்குக் கொடுத்தாலும் எனக்குத் தானே தலைவலி என்று தலையில் கைவைத்து கருணாநிதி
போல அமர்ந்திருக்கிறான்.



அந்த நேரம் அரசவையில் ஒரு வழக்கு வருகிறது.

ஒரு பிராமனன், ஒரு சத்ரியன், ஒரு வைசியன், ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து
ஒருவனை கொன்று விடுகிறார்கள். மன்னர் இவ்வழக்கை விசார்க்கிறார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை
தனது மகன் துரியோதனன் கூறுவான் என்று கூறிவிடுகிறார். காரணம் துரியோதனன் சிறந்த
நீதிமான் எனவே அவனுக்கு இளவரசர் பட்டத்தை வழங்கலாம் என்று திட்டமிட்டார்.
துரியோதனன் எழுந்து "ஒருவனைக் கருணை இல்லாமல் கொலை செய்த இவர்கள்
நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்றான்.

ஆனால் குலகுருவாக இருந்த கிருபாச்சாரியார், யிதிஷ்டிரனுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது
அவசியம் என எடுத்துக்கூற திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க
அழைக்கிறார்.

யுதிஷ்டிரன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? சூத்திரனுக்கு நான்கு வருடம் கடுங்காவல்
தண்டனையும், வைசியனுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனையும், சத்ரியனுக்கு பதினாறு
வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறான். அதேநேரம் பிராமனருக்கு மரண தண்டனை
விதிக்கிறான். காரணம் சூத்திரன் ஞாய தர்மங்களை அறியமாட்டான், அதனால்
அவனுக்கு குறைந்த தண்டனையும், வைசியன் கொஞ்சம் விஷயஞானம் உள்ளவன் அதனால்
அவனுக்கு 8 வருடமும், நாட்டை காக்க வேண்டிய பொறுப்புள்ள க்ஷத்ரியன் அதற்கு எதிர்மாறாக
நடந்து கொண்டதால் அவன் செய்த தவறுக்கு இரு மடங்கு தண்டனையும்,
பிராமனன் ஞாய , தர்மம் தெரிந்தும், பாவ, புண்ணியங்கள் குறித்து உணர்ந்திருந்தும் குற்றம் புரிந்ததால்
அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்" என்றான்.


'யுதிஷ்டிரனின் தீர்ப்பு தர்மத்தின் வழியினதே' என்றுகுல குரு கிருபாச்சாரியார்
ஆமோதிக்கிறார். சிறந்த நீதிமானாக அவையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுதிஷ்டிரனே
அந்நாட்டின் இளவரசராக அறிவிக்கப்படுகிறான்.

இங்கே நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட தீர்ப்பு கூட ஜாதியின்
அடிப்படையில் இல்லை. ஒருவனது வாழும் வகைக்கு எவ்வளவு விரோதமாக இருந்திருக்கிறான்
என்பதை மனதில் வைத்தே அவனுக்கு தண்டனையின் அளவு நிர்ணயிக்கப் படுகிறது. பிராமணன் என்பதால் பச்சாதாபம் காட்டப்படவில்லை. ப்ராமணன் என்பதால் தேவையற்ற மரியாதை கொடுக்கப்படவில்லை.
ஒரு வேளை பிராமணன் தண்டனைச் சட்டத்தை நிர்ணயித்திருந்தால் ஞாய, தர்ம, பாவ, புண்ணியங்கள்
அனைத்தும் அறிந்தவன் நான் என்பதால் நான் செய்வது எதுவும் குற்றமாகாது என்று
சட்டம் இயற்றி இருக்கலாமே! ஆனால் கடுமையான தண்டனையை அவன் பெறுகிறான்.
க்ஷத்ரியனால் விதிக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டு தண்டனையும் ஏற்கிறான்.

எனவே ஜாதீய ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வாழும் வகைக்கான சட்டங்களையும்
இயற்றியவன் ப்ராமணன் இல்லை என்பது இதிகாச ஆதாரங்களில் இருந்தே புலனாகிறது.

எனவே சமூகத்தின் ஜாதிகள் என்ற குழு மனப்பான்மை வாழும் மக்களுக்குள் காலப்போக்கில்
தானாகவே உருவானதாகவே இருக்குமேயன்றி தனி ஒரு மனிதர்களால் ஒரே கடவுளால் உருவாக்கப்படவில்லை
என்பதே நிதர்சனம்!

உலக நாடுகள் முழுவதிலும் ஒரே மதம் ஒரே கடவுள் என்றிருக்கும் மதத்தினருக்குள்ளும்
ஜாதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதே இதற்கு கண்கூடான சாட்சி!

ஆக இந்து தர்மத்தில் ஜாதிகள் போதிக்கப்படுவதில்லை, இந்துக்கடவுளரும் ஜாதிகளை உருவாக்கவில்லை என்பதே "நிஜம்"!

உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் இவற்றைத் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்வார்கள்
என்பதே "நிஜம்"!

நீங்கள் உண்மையான பகுத்தறிவு கொண்டவரா? அப்படியெனில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .....

"இந்து தர்மம் என்பது மனோவியலும், அறிவியலும், பகுத்தறிவும் ஆகும்"


Sunday, August 8, 2010

கீதோபதேசம் - நீ அழியாத பரம்பொருள்!



அர்ஜுனன் கேட்கிறான்..

பரமேஸ்வரா! புருஷோத்தமனே! நீ உன்னைப் பற்றி விளக்கிக் கூறிய உன் தெய்வீக வடிவத்தைக் காண விரும்புகிறேன்.

இறைவா, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று நீ நினைத்தால், யோகேஸ்வரா உன்னுடைய என்றும் அழிவற்ற உருவத்தை எனக்குக் காட்ட வேண்டும்.

பகவான் கூறுகிறார்...

"பார்த்தா! பலவகைப்பட்ட பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய் இனி பார்!"

ஆதித்யர்களையும், வசுக்களையும், ருத்ரர்களையும், அசுவினி தேவதைகளையும் மருத்துகளையும் அர்சுனா! இதுவரை காணாத அதிசயங்கள் பலவற்றைப் பார்.

அர்ஜுனா! எனது இவ்வுடலில், ப்ரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் ஒருங்கிணைந்திருப்பதைப் பார். இதைத்தவிர மேலும் பார்க்க விரும்பும் வேரு பலவற்றையும் இப்போது பார்.

ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நினையைப் பார்."

ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.

அப்போது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவாதி தேவனின் அந்த உடலில் ஒன்றுகூடி இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.

பிறகு அர்ஜுனன் பெருவியப்புடன் ரோமம் சிலிர்க்க குனிந்த தலையுடனும் கூப்பிய கரங்களுடனும் இறைவனை வணங்கிக் கூறலானான்.

"இறைவா! உன் உடலில் தேவர்கள் அனைவரையும் பல்வேறு உயிர்களின் கூட்டத்தையும், தாமரை மலரின் மேல் அமர்ந்துள்ள இறைவன் பிரம்மாவையும், ரிஷிகள் அனைவரையும் தேவலோகத்துச் சர்ப்பங்களையும் காண்கிறேன்.

உலக வடிவுடைய உலகநாயகா! எண்ணில் அடங்கா கைகள் வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையற்ற பரந்த உருவத்தை எங்கும் காண்கிறேன். மேலும் உமது தொடக்கத்தையோ நடுப்பகுதியையோ, முடிவையோ என்னால் காண முடியவில்லை.

சிவனின் அடியையும் முடியையும் காணமுடியாமல் விஷ்னும் ப்ரம்மாவும் தோற்ற கதையை இதோடு ஒப்பிடலாம். ப்ரபஞ்சம் என்பது அளப்பரிய அளவு பெரியது என்பதை ஒரு உருவகத்தோடு நம் மனதில் பதிய வைக்க இவ்வாறு கதைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதையே இங்கே அர்ஜுனன் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. மிகப்பெரிய சக்தியான இந்த ப்ரபஞ்சத்திற்கும் ஒரு மூலசக்தி அல்லது ஆதார சக்தி ஒன்று இருக்கிறது. அறிவியல் தான் எல்லாம் என்று கூறும் அறிவியளாலர்களின் கணிப்பிற்கும் அடங்காத அந்த சக்திமூலத்தை தான் இறைவன் என்று அழைக்கிறோம். அந்த சக்திமூலத்தை காணும் பாக்கியத்தையே அர்ஜுனன் அடைந்திருக்கிறான் என்பதை கீதை உணர்த்துகிறது.


"க்ரீடம் அணிந்து, கதையையும், சக்கரத்தையும் ஏந்தி எங்கும் பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாய் காண்பதர்கு அரியவராய் சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உன்னைக் காண்கிறேன்.

ஆரம்பம், நடு முடிவு இல்லாதவரும் முடிவில்லாத சக்தியை உடையவரும், எண்ணற்ற கைகளை உடையவரும், சூரிய, சந்திரர்களே கண்களாய் கொழுந்து விட்டெரியும் நெருப்பே வாயாகக் கொண்டவரும், தன்னுடைய சுடரொளியால் ப்ரபஞ்சத்தையே எரிக்கின்றவரும் ஆகிய உம்மைக் காண்கிறேன்.

நீ அழியாத பரம்பொருள், அறியத்தக்கவனும் நீயே. இந்த உலகத்திற்கு ஒப்பற்ற உறைவிடமும் நீயே. நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவனும் நீயே! என்றென்றும் உள்ள பரமாத்மா நீயே!"

என்று கூறி ஸ்ரீ க்ருஷ்ணரை நான் என்ற நினைவையே துறந்து திறந்த ஆன்மாவாக சரணடைகிறான் அர்ஜுனன்.



Thursday, August 5, 2010

என்னை மட்டுமே நினைத்திரு!


'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்து விடக்கூடாது. வியாபர வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகீக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை. பணத்திற்காக பறக்காத போது பகவத் சிந்தனைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்கியமும் தன்னாலேயே உண்டாகும்.

ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.

தர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றைப் தீர்கமாகப் பின்பற்றி அதன் வழி நடப்பதே மிகப்பெரிய நற்காரியமாகும்.

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குக் குறுக்கு வழி இல்லையா? ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. "என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்து விடுகிறான்" என்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைத்திருக்கிறார். "நாஸ்தி அத்ர ஸம்சய:" - இதில் சந்தேகமே இல்லை என்று காரண்டியும் கொடுக்கிறார்.

"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


Saturday, June 26, 2010

கீதோபதேசம் - ஞானத்தை பெற்று செயல்படு!



"பரந்தாமா! வேள்விகளில் சிறந்தவையாக கருதப்பட வேண்டியது எது என்பதை எனக்கு விளக்குவாய்" என்று அர்ஜுனன் கேட்கிறான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"அர்ஜுனா! பொருட்களால் வேள்வி செய்வதை விட ஞான வேள்வியே மிகவும் மேலானது. செயல்கள் அனைத்தும் ஞானத்திலேயே வந்து முடியப் பெருகின்றன.

மெய்ப்பொருளைக் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். அதை வணக்கத்துடனும், தொண்டு செய்வதன் மூலமும், கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதாலும் நீ அதைக் கற்றுக் கொள்".

(எதைச் சொன்னாலும் அதை விசுவாசிக்க வேண்டும், அப்படியே நம்ப வேண்டும் என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கூறவில்லை. கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிந்து கொள்ளச் சொல்கிறார். இந்து தர்மத்தின் சிறப்பம்சமே அதுதான்).

"பாண்டவ! அதைத் தெரிந்து கொண்ட பிறகு, மீண்டும் நீ இத்தகைய மதி மயக்கத்தை அடைய மாட்டாய். அதன் மூலம் உயிர்கள் அனைத்தையும் எனக்குள்ளும், உனக்குள்ளும் காண்பாய்."

ஒரு தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். துறவி ஒருவர் அவர்களை விலக்கி விடச் சென்றார். ஆனால் கோபத்திலிருந்த அவர்கள் துறவியையும் தாக்கி விட்டனர். இதைப் பார்த்த துறவியின் சீடரோ அவரை பத்திரமாக கூட்டி வந்து அவருக்கு ஒத்தடம் கொடுத்தார். "என்ன நடந்தது" என்று வினவினார். அதற்கு துறவியோ "அங்கே அடித்தாய், இங்கே அரவனைக்கிறாய்" என்றார். தன்னை அடித்ததும் அனைத்ததும் ஒரே உயிர் தான் என்பதை துறவி இவ்வாறு விளக்குகிறார்.

"அர்ஜுனா! நீ பாவிகளுக்குளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமாகிய படகின் உதவியால் பாபங்கள் அனைத்தையும் கடந்து விடலாம்..

"பார்த்தா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்து சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பானது எல்லாப் பாபங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது."

"ஞான விட தூய்மையாக்கும் பொருள் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. குற்றம் குறை இல்லாமல் பூரணமாக யோகத்தைப் பயிற்சி செய்து பக்குவம் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஞானத்தைத் தன்னிடத்தில் தானே காண்கிறார்கள்.

அறியாதவனும், நம்பிக்கை இல்லாதவனும், சந்தேகத் தன்மை கொண்டவனும் ஒருவன் அழிவை நோக்கிச் செல்கிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமோ, மறு உலகமோ அல்லது இன்பமோ எதுவும் கிடையாது.

"தனஞ்செய! யோகத்தினால் செயல்களை எல்லாம் துறந்தவனும், ஞானத்தால் எல்லாச் சந்தேகங்களையும், போக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் ஒருவனைச் செயல்கள் கட்டுப்படுத்தாது.

எனவே, உன் அறியாமையால் தோன்றி உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்தி விடு. யோகத்தையே சரணாக அடைந்து விடு. எழுந்து செயல்படு அர்ஜுனா!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.



Wednesday, June 9, 2010

கீதோபதேசம் - எந்த உயிரையும் வெறுக்காதே!



அர்ஜுனன் கேட்டது!

எப்பொழுதும் இடைவிடாது யோகத்தில் உறுதியுடனிருந்து உன்னைத் தியானிக்கும் பக்தர்கள், அழிவற்றப் பரம்பொருளை வழிபடுவோர் இவர்களுள் யார் சிறந்த யோகிகள் ஆவார்?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி, எப்பொழுதும் பக்தியுடனும் மாறாத உறுதியுடனும், மிகவும் மேலான நம்பிக்கையுடனும் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களை நான் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்று கருதுகிறேன்.

எவன் ஒருவன் எந்த உயிரையும் வெறுக்காமல் இருக்கிறானோ, எல்லோரிடமும் நட்பு கொண்டவனாக, கருனை உள்ளவனாக இருக்கிறானோ, பற்றற்றும், நான், எனது என்ற எண்ணத்தை எல்லாம் அறவே கைவிட்டவனாக இருக்கின்றானோ, இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையில் இருக்கிறானோ, மன்னிக்கும் பாங்கும், பொறுமை உடையவனாகவு இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எப்போதும் போதும் என்ற மனத்திருப்தி உடையவனாகவும், தியானத்தில் உறுதியாகவும், திடசித்தம் உடையவனாகவு, யோகப் பயிற்சியில் அனுபவம் பெற்றவனாகவும் இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எவனொருவன் தன்னடக்கம் உள்ளவனாகவும் உறுதியான கொள்கை உடையவனாகவும், தனது மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாகவும் யார் இருக்கிறானோ அத்தகைய பக்தனே எனக்குப் பிரியமானவன்.

தனஞ்செயா! எவன் உலகுக்கு யாதொரு துன்பமும் இழைப்பதில்லையோ, உலகால் துன்பமடையாமலும் இருக்கிறானோ, எவன் மகிழ்ச்சி, கோபம், அச்சம், கவலை ஆகியவை நீங்கியவனாக இருக்கிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன்.

எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், திறமைசாலியாய், பற்றின்றி எல்லாவற்றையும் சமமாக கருதுபவனாய், கவலையற்றவனாய், எல்லா ஆடம்பரங்களையும், செயல்களையும் துறந்தவனாய் என்னிடம் பக்தியோடு இருப்பவன் எவனோ அவனே எனக்குப் பிரியமானவன்.

மகிழ்ச்சியடைதலும், வெறுத்தலும், துயரமடைதலும், விரும்புதலும் இன்றி, நல்லது, கெட்டது எல்லாவற்றையும் எவன் துறந்து விடுகின்றானோ, அந்தப் பக்தனே எனக்குப் பிரியமானவன்.

அர்ஜுனா! விரோதியையும், நண்பனையும் ஒரே விதமாகக் கருதுபவனும், மானம் அவமானம், குளிர்-உஷ்ணம், இன்பம்-துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருதுபவனும், பற்றுதலில் இருந்து விடுதலை பெற்றவனும் எனக்குப் பிரியமானவன்.

புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுபவனும், மௌனமாக இருப்பவனும், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவனும் உறுதியான உள்ளம் படைத்தவனும், பக்திமானாகிய அவனே எனக்கு பிரியமானவன்.

அர்ஜுனா! நான் கூறியுள்ளபடி தர்மத்தின் சாரமான இதை யார் நம்பிக்கையுடனும், என்னைலட்சியமாகக் கொண்டு என்னை யார் பின்பற்றுகிறார்களோ, அத்தகைய பக்தர்களையே நான் மிகவும் விரும்புகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்