Sunday, May 30, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 6


தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்ற இரு இளைஞர்கள் நண்பர்களாயிருந்தனர். அவர்கள் வியாபாரத்திற்காக ஒர் நாள் பயணம் சென்றனர். வழியில் ஒரு காட்டில் அவர்களுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன.

தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் "நாம் இருவரும் இதை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழலாம்" என்றான். ஆனால் துஷ்டபுத்திக் காரனோ வஞ்சகம் ஒன்றை நினைத்தான். அவன் தர்மபுத்தியிடம் "இப்போது இந்தப் புதையலை நாம் ஊருக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். தற்போது செலவுக்காக ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். மீதியை இந்த மரத்தடியில் புதைத்து வைப்போம். பின்னர் தேவைப்படும்போது வந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.

துஷ்டபுத்தியின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத தர்மபுத்தி அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் புதையலை மரத்தடியில் புதைத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தனர். துஷ்டபுத்தி தன் கையிலுள்ள காசுகளைச் சீக்கிரமே செலவு செய்து விட்டான். மரத்தடியிலுள்ள மொத்த காசுகளையும் தர்மபுத்திக்குத் தெரியாமல் தாமே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவன் காட்டுக்குச் சென்று மொத்த தங்கக் காசுகளையும் எடுத்து வந்தான்.

சில மாதங்கள் கழிந்தன. தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் வந்தான். மரத்தடியிலுள்ள காசுகளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று அழைத்தான். இருவரும் காட்டிற்குச் சென்றனர். மரத்தடியில் தோண்டினர். அங்கே புதையல் பானையைக் காணவில்லை. காசுகளை துஷ்டபுத்திதான் எடுத்திருக்க வேண்டும் என தர்மபுத்திக்கு சந்தேகம் வந்தது. அவன் அதுபற்றி துஷ்டபுத்தியிடம் கேட்டான். துஷ்டபுத்தியோ தான் எடுக்க வில்லை என்று மறுத்தான். இறுதியாக தர்மபுத்தி அரசரிடம் சென்று வழக்கு தொடுத்தான்.

துஷ்டபுத்தி அரசரிடம் "அரசே! நான் நண்பனுக்குத் துரோகம் செய்பவன் அல்ல. காசுகளை நான் எடுக்கவில்லை. இதற்கு வனதேவதையே சாட்சி" என்றான்.

"வன தேவதை வந்து சாட்சி சொல்லுமா உனக்காக?" என்றார் அரசர்.

துஷ்டபுத்தியோ காட்டிற்கு சென்று வனதேவதையிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்றான். மறுநாளே கட்டுக்குச் சென்று பார்ப்போம் என்று அரசர் முடிவு செய்தார்.

அன்றைய இரவு வீட்டிற்கு வந்த துஷ்டபுத்தி தன் தந்தையை அழைத்தான். நடந்த அனைத்தையும் கூறினான். பிறகு தன் தந்தையையே வன தேவதை போல் நடிக்கத் தயார் செய்தான். அன்றிரவே ஒரு மர பொந்தில் தந்தையை ஒளிந்திருக்கச் செய்து அரசர் கேட்கும் போது தன் மகன் குற்றவாளி இல்லை என்று அசரீரி போல பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

மறுநாள் அரசரும் துஷ்டபுத்தி மற்றும் தர்மபுத்தி ஆகியோரும் காட்டை அடைந்தனர். வனதேவதையிடம் அரசர் கேள்வி கேட்டார். உடனே மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை "நான் வனதேவதை பேசுகிறேன். என் பிள்ளை குற்றம் செய்யவில்லை. தர்மபுத்தி தான் திருடினான்" என்று அசரீரி போலக் கூறினார்.

அரசர் அந்த மரபொந்திற்கு அருகே சென்று சற்று நேரம் அமைதியாக சிந்தித்தார். அரசருக்கு சந்தேகம் வந்தது. தர்மபுத்தியோ அரசரிடம் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவும், உண்மையைக் கொண்டு வெளியே கொண்டு வர ஒரு யோசனை இருப்பதாகவும் கூறினான். அரசர் அவ்வாறே செய்யுமாறு தர்மபுத்தியை அனுமதித்தார்.

தர்மபுத்தி ஓடிச் சென்று காய்ந்த சருகுகளையும் குச்சிகளையும் திரட்டி வந்து, மரத்தடியில் போட்டு தீமூட்டினான். குபுகுபுவென தீப்பற்றிக் கொண்டது. தர்மபுத்தியின் செயலைக் கண்டு மன்னர் திகைத்தார்.


சற்று நேரத்தில் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டிருந்த துஷ்டபுத்தியின் தந்தைக்கு உடல் வெந்து போனது. மறுநொடியே மரப்பொந்திலிருந்து அவர் வெளியே குதித்தார்.

"மன்னா! ஏதோ பிள்ளைப் பாசத்தால் என் மகனுக்காக நான் தான் மரப்பொந்திலிருந்து வனதேவதை போல பேசினேன்" என்று உண்மையைக் கூறிவிட்டார். காசுகளைத் திருடியதோடு அல்லாமல் நண்பன் மீது பழியும் சுமத்திய துஷ்டபுத்திக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

நீதி: பேராசை பெருநஷ்டத்தையே தரும்.

Monday, May 24, 2010

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!


மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி!



தூர்தர்ஷனில் முன்பு ஒளிபரப்பிக் கொண்டிருந்த மகாபாரதத்தில் காட்சி ஆரம்பிக்கும் போது ஒரு சக்கரம் சுழலும். 'நான் காலம் பேசுகிறேன்' என்று பின்னனியில் குரல் ஒலிப்பதாகக் காண்பித்திருப்பார்கள்!

சாந்தனு மகராஜனில் துவங்கி பல தலை முறைகளைக் கடந்து கதை சொல்லப்படும் போதும் அதே காலம் அதே குரலில் பேசிக்கொண்டிருக்கும். ஒரு இதிகாசத்தை படமாக்கும் போதும் வெறுமனே வர்த்தக எண்ணத்துடன் மட்டுமே படமாக்காமல் அந்த இதிகாசத்தின் மகிமையை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை இதிகாசத்துடன் இனைத்து காட்ட முடியும். ஆம்! காலம். அது என்றைக்கும் இருக்கக் கூடியது. மைக்ரோ முதல் மாக்ரோ வரை எந்த ரூபத்திலும் நிலையான இயக்கத்துடன் இருப்பது காலம் ஒன்று மட்டுமே.

அத்தகைய காலத்தையும் அதன் சுழற்சியையும் யாரும் ஒரு வாழ்க்கை பருவத்தில் கணித்து விட முடியாது. பல முறை பிறப்பெடுத்து ஒவ்வொரு முறையும் விட்ட இடத்திலிருந்து ஆராய்ந்து மேலும் மேலும் உணர்ந்தறிபவர்கள் மட்டுமே காலத்தின் சுழற்சியை முழுமையாக கண்டறிய முடியும். அப்படி உணர்ந்து பார்த்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்டதாகக் கூறப்படுவதே நாம் பார்க்கும் நாள், வருடம், யுகம் போன்ற காலக்கணக்குகள். சூரிய உதயத்தின் அனு அளவு காலத்தில் துவங்கி யுகக் கணக்கு வரை இப்படி துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள்.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது. மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது. வருடம் என்றால், பூமி சூரியனை சுற்றும் ஒரு முழுச்சுற்று.

இப்படிப்பட்ட காலக்கணக்கின் படி தான் பஞ்சாங்கம் மற்றும் ஜோடித ஸாஸ்திரங்கள் கணிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இப்படியே வருடங்கள் சுற்றி சுற்றி லட்சக்கனக்கான வருடங்கள் ஆனால் அதை யுகம் என்கிறார்கள். சரி அப்படி எத்தனை வருடங்கள் சுற்றினால் ஒரு யுகம் வருகிறது என்றும் என்னென்ன யுகங்கள் எத்தனை வருடங்கள் என்றும் பார்க்கலாம்!

கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்

திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)

கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.

(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.

அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

ஆம், காலம் சக்கரம் அல்லவா!

இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..

கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.

கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.

பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.

பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.

மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.

மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.

பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.

அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)

ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.

மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.

ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)

ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.

மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.

அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.

புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.

மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.

தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)

திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!

அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு!

இந்தப் படத்துக்கும் கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!


ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.

பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.

கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.

பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)

ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.

சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.

மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
(வன்னி மரங்கள் எப்படி இருக்கும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

இப்படியெல்லாம் நடக்குமாம். இவற்றில் தற்காலத்தில் எவையெல்லாம் கலியுகத்திற்கு பொருத்தமாக நடக்கிறது என்று யோசித்துக் கூறுங்கள் பார்ப்போம்.



கல்கி வருவாரோ இல்லையோ கலியுகத்தில் நாம் காலத்தை ஓட்ட வேண்டுமே!

கொசுறு: தொலைக்காட்சிகள் கூட்டாக சேர்ந்து மறைக்கும் அதிர்ச்சி தகவல் -
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளைக் கடந்தி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஒரு பாதிரியாரும் அடக்கம். செய்தி இங்கே

கலிகாலத்தில் இப்படித்தான் நடக்குமாமே! ஈஸ்வரோ ரக்ஷது!

Friday, May 21, 2010

கல்யாணப் பத்திரிக்கையும், காலக்கணக்கும்!




வானவியல் ஆராய்ச்சியாளர்கள் பூமி தோன்றியகாலத்தை அறியவும், காலச்சுழற்சி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தை புரட்டிப் பார்த்தால் பல லட்சம் ஆண்டுகளின் சுழற்சி பற்றிய கணக்குகளை மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மைக்ரோ லெவல் முதல் மேக்ரோ லெவல் வரை காலத்தை மிக அற்புதமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

வெள்ளைக்காரனுக்கு மட்டுமே மூளை இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டு அறிவு ஜீவிகளையும், கால கணக்கு முறையையே வெள்ளைக்காரன் தான் கண்டு பிடித்தான் என்று நம்மை நம்ப வைக்கும் ஏமாற்றுக்காரர்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட வேதங்களில் துல்லியமான காலக்கணக்குகள் உள்ளன. பிரபஞ்சத்தின் கால அளவிலிருந்து நானோ ஸெகண்டுகள் வரை நம்மவர்கள் துல்லியமாக கணித்திருப்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் பற்றி சிறிது பார்ப்போம்!

முதலில் அனு. இதை விட சிறியதாக பிளக்க முடியாத ஒன்றை அனு என்கிறோம் அல்லவா. காலமும் அப்படியே என்கிறார்கள் பெரியோர்கள். இதை விட சிறியதாக கணிக்க முடியாத காலத்தை அனு என்று கூறி அங்கிருந்தே துவங்குகிறார்கள்.

அதாவது ஒரு வினாடியை விட மிகச்சிறியது அனு.

2 பரம அனுக்கள் = 1 அனு

(அனுவிலும் சிறிய காலம் இருக்கிறது, எனவே இரண்டு பரம அனு சேர்ந்தால் ஒரு அனுவாகிறதாம்)

3 அனுக்கள் = 1 த்ரிசரனு
3 த்ரிசரனு = 1 த்ருடி
100 த்ருடிகள் = 1 வேதம் (இது ஒரு கால அளவிற்கான பெயர். ரிக் யஜுர் அப்படியல்ல)
3 வேதங்கள் = 1 லவம்
3 லவங்கள் = 1 நிமிஷம்

(இப்போதிருக்கும் நிமிஷத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. இது அதை விட சிறிய அளவு)

4 நிமிஷங்கள் = 1 க்ஷனம் (ஒரு க்ஷனம் கூட பொறுக்கமாட்டான் என்பார்களே, அதுதான்.)
5 க்ஷனங்கள் = 1 காஷ்டா
15 காஷ்டா = 1 லகு
15 லகுக்கள் = 1 நாழிகை
2 நாழிகை = 1 முகூர்த்தம்
30 முகூர்த்தங்கள் = 1 நாள்

ஆக ஒரு நாளை மைக்ரோ முதல் மேக்ரோ வரை எப்படி பிரித்திருக்கிறார்கள் என்று பாருங்கள். சரி இவற்றை தற்பொழுதைய ஆங்கிலேயனின் நேரப்படி எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம். ஒரு முகூர்த்தம் என்பது எத்தனை நேரம் தெரியுமா? நாற்பத்தெட்டு நிமிஷங்கள் ஆகும். அதாவது 30 முகூர்த்தங்கள் என்பது ஒரு நாள்.

30 முகூர்த்தங்கள் (பெருக்கல்) 48 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

அவற்றை ஆங்கில மணிநேரத்தில் கொண்டு வரலாம்.

1440 நிமிடங்கள் / 60 நிமிடங்கள் = 24 மணி நேரம். (அதாவது ஒரு நாள்)

ஆக 48 நிமிடங்கள் கொண்ட முப்பது முகூர்த்தங்களை ஒரு நாள் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.

சரி நாழிகை?

60 நாழிகை = 1 நாள், அதாவது ஒரு நாழிகை என்பது ஒரு முகூர்த்தத்தில் பாதி.

1 நாழிகை = 24 நிமிடங்கள், 2 1/2 நாழிகை = 1 மணி நேரம். (48 + 12 = 60 நிமிடங்கள்).

சரி இதையெல்லாம் இப்போது பார்ப்பதில் என்ன பலன் என்கிறீர்களா? இந்த நாழிகை மற்றும் முகூர்த்தம் என்ற கால அளவை நாம் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், கல்யாணப் பத்திரிக்கைகளில் நாம் இன்னும் தமிழர் முறைப்படியான காலக்கணக்கிலேயே நமது கல்யாண நேரத்தை அச்சடித்து கல்யாணத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? நம் பாரம்பரிய கால அளவைகளை நாம் அப்படியே விட்டு விட்டு மறந்து போய் விடுதல் ஒரு வாழ்க்கையா? இப்படிப்பட்ட கணிதப் பாரம்பரியம் கொண்ட வரலாறு கொண்ட மனிதர்கள் நாம் என்பதை உணர்ந்து பார்க்கக் கூட நேரம் இல்லாமல் மடிந்து போனால் அதனால் நம் சந்ததி இழக்கப் போகும் விஷயங்களின் மதிப்பை நாம் அறிவோமா? நமது பாரம்பரிய அறிவை நம்மிடம் இருந்து அழித்து, நமது பொக்கிஷத்தைத் திருடி நம்மிடமே வேறு பெயரில் விற்று காசாக்கும் வெள்ளையனின் வாழ்க்கை முறைக்கு அடிமையாகி வாழ்வதும் ஒரு வாழ்வா? ஆக நாம் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் முகூர்த்தம் என்ற கால அளவை பற்றி குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளவாவது செய்வோமே!




திருமண பத்திரிக்கைகளில் இத்தனை நாழிகையிலிருந்து இத்தனை நாழிகை வரை என்று முகூர்த்தத்தை குறிப்பிடுவோம். உதாரணமாக 7 1/2 (ஏழரை) நாழிகையிலிருந்து 10 நாழிகைக்குள் என்று எழுதியிருக்கும். சூரியோதயத்தின் போது முதல் நாழிகை துவங்குகிறது.

அப்படியெனில் சூரியோதயத்தில் இருந்து 7 1/2 யாவது நாழிகை என்றால், நம் கடிகாரப் படி காலை 9 மணி ஆகிறது. அதாவது 6 மணிக்கு சூரியோதயம் என்று வைத்துக் கொண்டால், நாழிகை 7.5 (பெருக்கல்) 24 நிமிடங்கள் = 180 நிமிடங்கள். அதாவது மூன்று மணி நேரம் (180 / 24 = 3). எனவே, சூரியோதயம் 6 மணி (கூட்டல்) 3 மணி = காலை 9 மணி.

ஆக 7 1/2 நாழிகையிலிருந்து 10 நாழிகை என்பது இரண்டரை நாழிகை. இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம் என்பதால் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை முகூர்த்தம் வைத்திருக்கிறோம் என்று சிம்பிளாக GMT நேரத்தை சொல்லி விடுகிறோம்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நாழிகையை கூறும் முன்னர் உதயாதி என்று எழுதுவார்கள். உதயாதி என்றால் சூரியன் உதயமாகும் நேரம் என்று பொருள். சூரியன் உதயமான நேரத்திலிருந்து ஏழரையாவது நாழிகையில் நமது முகூர்த்தம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சூரியன் உருவாவதிலிருந்து தான் நமக்கு ஒரு நாள் பிறக்கிறது. அதையே உதயாதி என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

எனவே உதயாதி 6 மணிக்கு எனக்கொண்டால், சூரிய உதயத்திலிருந்து முதல் 24 நிமிடங்கள் ஒரு நாழிகை. 48 நிமிடங்கள் இரண்டாவது நாழிகை. இப்படியே ஏழரையாவது நாழிகை வந்தால் காலை 9 மணியாகிறது. 60 வது நாழிகை முடியும் போது அந்த நாள் முடிகிறது. பின் மீண்டும் சூரியோதயத்தில் புதிய நாள். இப்படியே மைக்ரோவிலிருந்து எழுந்து மேக்ரோவிற்கு சென்றால் அது இன்னும் விரிவடைகிறது.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது. .
மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது.
வருடம் என்றால், பூமி சூரியனை சுற்றும் ஒரு முழுச்சுற்று.

நமது காலக்கணக்கு என்பது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததாகும். பூகோள ரீதியாகவும் ப்ரபஞ்சத்தின் போக்கையும் கொண்டே காலக்கணக்கு உண்டாக்கப்பட்டது. இப்போது நாள் கணக்கிலிருந்து மாதக்கணக்கிற்கு வருவோம். மாதத்தை இரண்டு பதினைந்து நாட்களாக
பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை "பக்ஷம்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்ஷம் என்றால் பதினைந்து நாள்.

சந்திரனின் வளர் பிறை, தேய் பிறை நாட்களை பக்ஷம் என்கிறார்கள். அதனை சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் என்று கூறுகிறார்கள். நமது நாட்காட்டிகளில் பார்த்திருப்போமே, ஓரிடத்தில் "சுக்ல" என்று எழுதியிருக்கும். அமாவாசையிலிருந்து துவங்கி பௌர்ணமி வரை பதினைந்து நாட்கள் சுக்ல பக்ஷம் என்றும், பௌர்ணமியிலிருந்து மீண்டும் அமாவாசை வரை வரும் பதினைந்து தினங்களை க்ருஷ்ண பக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.

க்ருஷ்ண பக்ஷம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? க்ருஷ்ண என்றால் கருப்பான என்று பொருளாம். அமாவாசை என்பது இருட்டு அல்லவா. எனவே அமாவாசையை நோக்கிச் செல்லும் பதினைந்து தினத்தை க்ருஷ்ண பக்ஷம் என்று அழைக்கிறார்கள்.

க்ரகங்களின் சுற்றுப்பாதையை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கணக்கீடுகளும் அதற்கான பெயர்களும் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு எதிர்வரும் நாள் அமாவாசையா அல்லது பௌர்ணமியா என்று சந்தேகம் வந்தால் மற்றவரிடம் "நாம் என்ன பக்ஷத்தில் இருக்கிறோம்?" என்று கேட்கிறார் எனக்கொள்வோம். அவரும் "க்ருஷ்ண பக்ஷம் 5 வது நாள்" என்று கூறினால், அடுத்த பத்தாவது நாள் அமாவாசை என்று பொருள். சுக்ல பக்ஷம் 7 வது நாள் என்றால் அடுத்த 8 வது நாள் பௌர்ணமி என்று கொள்ளலாம். க்ரகங்களின் சுற்றுப்பாதையை இப்படி நடைமுறை வாழ்க்கையோடு பழக்கப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள் என்பது விளங்குகிறது.




இப்படிப்பட்ட காலக்கணக்குப் படிதான் பஞ்சாங்கம் மற்றும் ஜோடித சாஸ்திரங்கள் கணிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் பெரியோர்கள். பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட நாழிகையில் சரியாக சூரிய கிரகணம் துவங்கும் என்றும் சந்திர கிரகணங்கள் துவங்கும் மற்றும் முடியும் என்றும் துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் சூரிய கிரகனத்தை வேண்டுமானாலும் இப்போதே கணக்கிட்டு சொல்லி விடமுடியும் என்கிறார்கள் காலக்கணக்கீட்டு நிபுணர்கள். வெள்ளைக்காரன் அதை வாங்கி வைத்து வின்நோக்கியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பின்னர் ஆம் என ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய காலக்கணக்கீட்டை அடிப்படையான பஞ்சாங்கத்தை அவமதித்தும் தமிழ் வருடப்பிறப்பின் போது கோவில்களில் அதைப் படிக்கக்கூடாது என்று அவற்றை அடியோடு அழிக்கப்பார்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்.

நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொண்டு நாம் தான் நம் பொக்கிஷங்களைக் காக்க வேண்டும்.

இந்த வருட தமிழ் புத்தாண்டின் போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூட இந்த வருட அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் இருக்காது என்று தெரிவித்தார்களாம். வெயிலின் ஆரம்பத்தில் இந்த கணிப்பு சந்தேகத்திற் குரியதாக இருந்தது என்றாலும் வழக்கத்திற்கு விரோதமாக இந்த மாதத்தில் வந்து நடனமாடிய லைலா பஞ்சாகத்தில் கூறியதை ஊர்ஜிதம் செய்து விட்டாள் என்பதை நினைவு கூறுகிறேன்.

அது மட்டுமல்ல தமிழகத்தில் இந்த வருடம் பூகம்ப பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டதாம். பக்கத்து வீட்டுப் பாட்டி தாடையில் கைவைத்து சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கேனும் பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தால் நம்பலாமா என்பதைச் சொல்லுங்கள். மற்றபடி நம் கையில் என்ன இருக்கிறது?

எல்லாம் அவன் செயல். ஈஸ்வரோ ரக்ஷது!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

(அடுத்தது யுகம் பற்றிய கணக்கை பார்ப்போம்)


Saturday, May 15, 2010

ஆசையே துன்பங்களுக்குக் காரணமாம்!



சிலருக்கு சர்க்கரை வியாதி இருக்கும். ஆனால் இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை விட முடியாமல் தவிப்பார்கள். விசேஷ நாட்களில் வீட்டம்மணிகள் சக்கரை வியாதி கணவன் மார்களின் கைகளில் திருட்டுத் தனமாக புகுந்து விடும் இனிப்புப் பண்டங்களை பிடுங்கி வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். 'ஏங்க திங்காதிங்க... உங்களுக்கு சுகர்ன்னா ஏன் கேக்க மாட்றீங்க்!" என்று அன்போடு அதட்டுவார்கள்.

ரத்தக் கொதிப்பு இருக்கும் பெண்களை 'உப்புகாரத்தோடு திங்காதேன்னு சொன்னா கேக்க மாட்டேன்ற, அப்பறம் தலை சுத்துது, மயக்கம் வருதுன்னு சொன்னா நான் பாக்க மாட்டேன், சொல்லிட்டேன்?' என்று அன்புடன் எச்சரிக்கும் கணவன் மார்களையும் பார்த்திருப்போம்.

இந்த எச்சரிக்கைகளும், அடக்க முடியாத ஆசைகளும் நம்மை விட்டு நீங்குவதே இல்லை. ஏன்? மனிதனின் ஆசைகள் என்றைக்கும் குறைவதே கிடையாது. புலன்களை மனிதர்களால் அடக்க முடிவதே இல்லை. புலன்களால் எழும் காமம் கூட இயற்கையானதே ஆயினும்
அதை எப்படியேனும் தீர்த்துக்கொண்டே ஆக வேண்டும் என்ற அடக்க முடியாத உந்துதல் பல சமூகத்தவறுகளுக்கு காரணமாகிவிடுவதும் உண்டு.

ஆனால் ஆசைகளை அடக்கி வாழ்பவனே நிம்மதியான வாழ்வை பெறுவான் என்கிறார்கள் பெரியோர்கள். அதாவது ஆசையால் உண்டாகும் உந்துதலிலிருந்து விடுபட வேண்டும். சிற்றின்பங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்ற வேட்கையை, வெறியை மனதில் வைத்துக் கொள்ளாமல் வாழ வேண்டும். நிம்மதியான மன அமைதியுடனான வாழ்க்கைக்கு அதுவே வழி. சுருக்கமாகச் சொன்னால் 'டெம்ப்ட்' ஆகாதீங்க!


அட, 'டெம்ப்ட்' ஆகாதீங்கன்னு சொல்றேன்ல!


சிற்றின்ப மயக்கத்தைப் பற்றி வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்..

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

அதாவது, நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும் என்கிறார்.

மேலும்...

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை என்றும் கூறுகிறார்.

ஒரு உதாரணத்திற்கு இப்படிச் சொல்லலாம், சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புப் பொருள்கள் மீது ஆசை கொள்ளாதிருந்தால் அந்தப் பொருள்களால் உண்டாகப்போகும் துன்பத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். ஆனால் மேற்சொன்ன விஷயங்கள் நிரந்தரமான பரமாத்ம நிலையை அடைய வேண்டும் என்கிற பொருளில் சிற்றின்ப ஆசைகள் கொள்ளாதீர்கள் என்று சொல்லப்பட்டவை ஆகும்.

கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.

"அர்ஜுனா! மனிதனின் புலன்கள் அதிக சக்தி உடையவை. ஏனெனில் ஆன்ம உலகிற்காக முயற்சி செய்யும் ஞானிகளைக் கூட அவர்கள் தங்கள் புலன்களை அடக்க முயற்சி செய்தாலும், கொந்தளிக்கும் இயல்புடைய புலன்கள் அவர்களின் மனதை வலிமையாகக் கவர்ந்து கொண்டு போகின்றன.

பலம் பொருந்திய அத்தகைய புலன்கள் அனைத்தையும் நன்றாக தன் வசப்படுத்திக் கொண்டு மன உறுதியுடையவனாய் என்னிடத்தே நிலை பெற்ற மனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் யாருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவனது புத்தியே நிலையானது" - என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

ஆசைகள் அளவற்றது என்பதையும் அது எத்தனைகாலம் வாழ்ந்தாலும் தீர்க்க முடியாதது என்பதையும் யயாதி என்ற மன்னனின் கதை மூலம் நம் முன்னோர்கள் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

விருஷபர்வா அசுரகுல அரசன். அவருக்கு குல குருவாக சுக்ராச்சாரியார் இருந்தார். அரசனின் மகள் சர்மிஷ்டையும் குருவின் மகள் தேவயானியும் தோழிகளாக இருந்தார்கள். ஒரு நாள் மன்னரின் மகள் அவமதித்து விட்டதால் இந்த இரு தோழிகளுக்கும் சண்டை மூண்டு விட்டது. இதனால் சுக்கிராச்சாரியார் தனது மகளின் விருப்பத்திற்கினங்க நாட்டை விட்டு வெளியேற நினைத்தார். ஆனால் விஷயம் அறிந்து மன்னர் விருஷபர்வா, சுக்கிராச்சாரியாரின் மகளிடம் மன்னிப்பு கோரினார். இந்த அவமதிப்புக்கு பரிகாரமாக சுக்கிராச்சாரியாரின் மகள் தெய்வயானியின் விருப்பப்படி அவளின் பணிப்பெண்ணாக தன் மகளை ஒப்புக்கொடுத்து விட்டான்.

அதாவது முனிவரின் மகளுக்கு மன்னரின் மகள் பணிப்பெண். இந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் அரசன் யயாதி சுக்கிராச்சாரியாரின் மகள் தெய்வயானியை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். தெய்வயானியுடன் அவன் ஊர் திரும்பும் போது அவளுக்கு பணிப்பெண்ணாக இருந்த மன்னரின் மகள் சர்மிஷ்டையும் உடல் செல்ல வேண்டியதாகிறது.

இங்கே தான் யயாதியின் ஆசைக்குச் சோதனை தொடங்குகிறது. சர்மிஷ்டையை தன் மகள் தெய்வயானியுடன் அனுப்பும் முன் சுக்கிராச்சாரியார் யயாதியிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். “இவள் விருஷபர்வாவின் மகள். தேவயானியின் பணிப்பெண், ஆகையால் இவளையும் என் மகளுடன் அனுப்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ இவளுடன் பேசுவதோ, இவளைத் தீண்டுவதோ கூடாது” என்று எச்சரித்தார்.

ஆனால் ஆசை யாரை விட்டது. என்ன தான் பணிப்பெண்ணாக வேலை செய்தாலும் மன்னரின் மகளான சர்மிஷ்டைக்கு தானும் ராஜா யயாதியின் மனைவியாக வாழவேண்டும் என்ற ஆசை பிறந்தது. யயாதிக்கும் தெய்வயானியையும் தாண்டி சர்மிஷ்டை மீதும் ஆசை வந்தது. இருவரும் ஒருவராக கலக்க இரு மனைவியரைக் கொண்ட மன்னனாக யயாதி வாழத்துவங்கினான்.


யயாதி-சர்மிஷ்டையின் பந்தத்தை தேவயானி அறிந்தாள். தந்தையிடம் அது பற்றிக் கூறினாள். சுக்கிராச்சாரியார் கடும் கோபம் கொண்டார். யயாதியை உடனே முதுமையடையும் சாபத்தைக் கொடுத்தார். இச்சாபத்தை அடைந்த யயாதியின் கை கால்கள் நடுங்கத் தொடங்கின. தலை நரைத்தது. உடனே வயோதிகன் ஆனான் யயாதி.

யயாதி சுக்கிராச்சாரியார் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். தீராத ஆசைகள் அதிகம் கொண்ட எனக்கு மீண்டும் இளமை திரும்ப அருளுங்கள் என்றான். அதற்கு சுக்கிராச்சாரியார் ‘ஒரு வாலிபன் தனது இளமையை விரும்பி உனக்கு அளிக்க முன்வந்தால், இந்த முதுமையை அவனுடன் மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறினார்.

சுக போகங்களில் அதிகமான ஆசை கொண்ட யயாதி அசிங்கமான முதிய தோற்றத்தை மாற்றி இளமையை மீண்டும் அடைய முயன்றான். தனது மூத்த மகன் யதுவிடம் சென்று நடந்தவற்றைக் கூறி அவனது இளமையை சிறிது காலத்திற்கு அவனுக்கு அளிக்க வேண்டினான்.

அதற்கு யது ‘தந்தையே இடைக்காலத்தில் வந்த உனது மூப்பை ஏற்றுக்கொள்ளும் வல்லமை எனக்கு இல்லை’ என்று கூறி மறுத்துவிட்டான். தேவயானியின் இரண்டு குமாரர்களும் சர்மிஷ்டையின் முதல் இரண்டு மகன்களும் தங்கள் இயலாமையைத் தெரிவித்ததும், இறுதியாக தனது கடைசி மகன் பூருவை யயாதி அணுகி, அவனுடைய இளமையைச் சிறிதுகாலம் தனக்கு அளிக்க வேண்டினான்.

பூரு ‘தந்தையே, ஒருவனுக்குத் தந்தைதான் உடலை அளிக்கிறார். தந்தையின் அருளால் தனயன் உயர்ந்த சிறப்புகளை அடையக்கூடும். தந்தைக்குக் கைமாறு செய்ய மகனால் முடியுமா? தந்தையின் எண்ணத்தைக் குறிப்பால் உணர்ந்து செய்பவன் தலைமகன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று உணர்ந்து அவர் சொல்லியதை மனமுவந்து செய்து முடிப்பவன் இடைமகன்.

தந்தையின் கட்டளையை விருப்பமில்லாமல் நிறைவேற்றுபவன் கடை மகன். தந்தை சொற்படி நடக்காதவன் அழுகிய குப்பைக்குச் சமம் என்பது எனக்குத் தெரியும். எனவே தந்தையே நான் மனமுவந்து எனது இளமையை உங்களுக்கு அளித்து உங்கள் முதுமையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பணிவுடன் கூறினான்.

பூருவின் இளமையைப் பெற்றுக்கொண்ட யயாதி, சிற்றின்பத்தில் உழன்றான்.

மேன்மேலும் மகிழ்ச்சியாக ஆசைகளை அனுபவிக்கலானான். அவன் தொடர்ந்து பல நூறு ஆண்டு காலம் இளமையாகவே இருந்தான். சிற்றின்ப சுகங்களை முழுவதுமாக அனுபவித்து வந்தான். ஆனால் மாறாத இளமையும் சுகபோக வாழ்வும் பெண்ணாசையும் மீண்டும் மீண்டும் அனுபவித்து அதுவே அவனுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தியது. எத்தனைகாலம் ஆனாலும் ஆசைகள் தீர்வதே இல்லை என்பதை அவன் உணரத்தொடங்கினான். காலப் போக்கில் ஆசை ஒரு பொழுதும் அடங்காது. அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டேபோகும் என்பதை உணர்ந்தான்.

தீயில் எவ்வளவு விறகுபோட்டாலும், அத்தனையையும் அது எரித்துவிட்டு, மேலும் விறகு வேண்டி நிற்பதுபோன்று காமத்திற்கு எத்தனை தீனிபோட்டாலும் அது மேலும் மேலும் வளருமேயன்றி ஒருபொழுதும் குறையாது என்ற ஞானம் யாயதிக்கு உதித்தது.

அக்கணமே, யயாதி பூருவிடம் அவனது இளமையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு
தனது முதுமையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆட்சியைத் தன் மகன்களிடம் கொடுத்துவிட்டு, கானகம் சென்று சித்தத்தை சிவன்பால் வைத்து வீடுபேறு பெற்றான்.

எனவே, ஆசைகள் அடங்காதது என்றும் நமது மனத்தை புலன்கள் ஆட்சி செய்யாமல் காத்துக் கொண்டால் எத்தகைய சூழலிலும் ஆசையால் உண்டாகும் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பதும் யயாதியின் வாழ்க்கை மூலமாக புலனாகிறது.

அது சரி...ஆசையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ரொம்ப ஸிம்பிள், 'டெம்ப்ட்' ஆகாதீங்க.

அதுதான் முதல் படி!

தானம் செய் நெஞ்சே, தானம் செய்!



ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. அன்னதானத்திற்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும் உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்திரம் - தத்த" - அதாவது "தானம் செய்". நல்ல கொடையாளியாக இரு என்பது தான் அது. மற்ற மந்திரங்களை எல்லாம் ஜபித்துக் காட்டலாம், இந்த 'தத்த' மந்திரத்தை செயலில் பண்ணிக் காட்ட வேண்டும்.

வைத்துக் கொண்டு அனுபவிப்பதை விட,கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரி வாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தால் கர்வம் கொண்டான். இதனால் தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

'தானம் கொடுக்கிறோம்' என்று சொல்வது கூடத் தவறு தான். 'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், அதனால் கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகத்தான் கொடுக்க வேண்டும். 'பியாதேஹம்' என்கிறது உபநிஷதம். கொடுக்கிறவன் தான் பயப்பட வேண்டும்.

'ஸம்வித்' துடன் என்று சொல்கிறது. 'ஸம்வித்' என்றால் 'நிறைந்த ஞானம்' என்று பொருள். கொடுக்கிறவன் , வாங்கிக் கொள்பவன் இரண்டு பேரும் உண்மையில் ஒருவனே தான் என்ற அறிவுதான் அந்த 'ஸம்வித்'. ஆக கொடுப்பதில் கூட நான் கொடுத்தேன் என்ற கர்வம் கூடாது.

(இன்றைய அரசியல் வாதிகளோ மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுத்து விட்டு நான் கொடுத்தேன் என்று பாராட்டு விழாவே நடத்திக் கொள்கிறார்கள். அதாவது நமது பையில் கைவிட்டு பணத்தை எடுத்து நம்கையிலேயே கொடுப்பவர்கள் கொடையாளிகளாம்.)

சரி, இப்படி தானம் கொடுப்பதால் என்ன பலன்? தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லோரும் சேர்ந்து குளம் வெட்டினால் அப்போது கொஞ்சம்கொஞ்சமாக நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் தண்ணீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்கு சமம்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.