Saturday, June 26, 2010

கீதோபதேசம் - ஞானத்தை பெற்று செயல்படு!



"பரந்தாமா! வேள்விகளில் சிறந்தவையாக கருதப்பட வேண்டியது எது என்பதை எனக்கு விளக்குவாய்" என்று அர்ஜுனன் கேட்கிறான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"அர்ஜுனா! பொருட்களால் வேள்வி செய்வதை விட ஞான வேள்வியே மிகவும் மேலானது. செயல்கள் அனைத்தும் ஞானத்திலேயே வந்து முடியப் பெருகின்றன.

மெய்ப்பொருளைக் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். அதை வணக்கத்துடனும், தொண்டு செய்வதன் மூலமும், கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதாலும் நீ அதைக் கற்றுக் கொள்".

(எதைச் சொன்னாலும் அதை விசுவாசிக்க வேண்டும், அப்படியே நம்ப வேண்டும் என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கூறவில்லை. கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிந்து கொள்ளச் சொல்கிறார். இந்து தர்மத்தின் சிறப்பம்சமே அதுதான்).

"பாண்டவ! அதைத் தெரிந்து கொண்ட பிறகு, மீண்டும் நீ இத்தகைய மதி மயக்கத்தை அடைய மாட்டாய். அதன் மூலம் உயிர்கள் அனைத்தையும் எனக்குள்ளும், உனக்குள்ளும் காண்பாய்."

ஒரு தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். துறவி ஒருவர் அவர்களை விலக்கி விடச் சென்றார். ஆனால் கோபத்திலிருந்த அவர்கள் துறவியையும் தாக்கி விட்டனர். இதைப் பார்த்த துறவியின் சீடரோ அவரை பத்திரமாக கூட்டி வந்து அவருக்கு ஒத்தடம் கொடுத்தார். "என்ன நடந்தது" என்று வினவினார். அதற்கு துறவியோ "அங்கே அடித்தாய், இங்கே அரவனைக்கிறாய்" என்றார். தன்னை அடித்ததும் அனைத்ததும் ஒரே உயிர் தான் என்பதை துறவி இவ்வாறு விளக்குகிறார்.

"அர்ஜுனா! நீ பாவிகளுக்குளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமாகிய படகின் உதவியால் பாபங்கள் அனைத்தையும் கடந்து விடலாம்..

"பார்த்தா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்து சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பானது எல்லாப் பாபங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது."

"ஞான விட தூய்மையாக்கும் பொருள் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. குற்றம் குறை இல்லாமல் பூரணமாக யோகத்தைப் பயிற்சி செய்து பக்குவம் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஞானத்தைத் தன்னிடத்தில் தானே காண்கிறார்கள்.

அறியாதவனும், நம்பிக்கை இல்லாதவனும், சந்தேகத் தன்மை கொண்டவனும் ஒருவன் அழிவை நோக்கிச் செல்கிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமோ, மறு உலகமோ அல்லது இன்பமோ எதுவும் கிடையாது.

"தனஞ்செய! யோகத்தினால் செயல்களை எல்லாம் துறந்தவனும், ஞானத்தால் எல்லாச் சந்தேகங்களையும், போக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் ஒருவனைச் செயல்கள் கட்டுப்படுத்தாது.

எனவே, உன் அறியாமையால் தோன்றி உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்தி விடு. யோகத்தையே சரணாக அடைந்து விடு. எழுந்து செயல்படு அர்ஜுனா!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.



4 comments:

Sivasubramanian said...

ஐயா,

ஒரு சிறு சந்தேகம்.நமக்கு கெடுதல் செய்பவரை என்ன செய்வது? இறை பார்த்து கொள்ளும் என்று விட்டு விடுவதா? இல்லை அவனை தண்டிக்க, திருத்த இறை நமக்கு கொடுத்த சந்தர்ப்பம் என்று அவனை எதிர் கொள்வதா?
நாம் அவனை விட்டு விட்டால் அதை அவன் சாதகமாக்கிக் கொண்டு மேலும் மேலும் நம்மை துன்புறுத்த மாட்டானா?

தயவு செய்து விளக்கவும்.

hayyram said...

ஐயா, மிகப்பெரிய கேள்வியை இந்த சிறியவனிடம் கேட்டு விட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை ஆன்மீகமும், லௌகீகமும் இரு குதிரைகள். அதில் நாம் லௌகீகக் குதிரையில் அமர்ந்து கொண்டு ஆன்மீகக் குதிரையை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். முழுமையாக அதில் ஏறி அமர்ந்து செல்லும் வரை இது போன்ற விஷயங்கள் குழப்பத்தையே உண்டாக்கும். நாம் லௌகீக வாழ்க்கையில் இருக்கும் வரை சாமானியர்களான நாம் வாழ்வதற்காக போராடித்தான் ஆக வேண்டும். அப்போராட்டத்தில் நமக்கு கெடுதல் செய்பவரை எதிர்த்து வெல்வதும், அவ்வெற்றியின் மூலம் நமது வாழ்க்கையையும் நம்மைச் சார்ந்தோர் வாழ்வையும் காப்பது நமது கடமையாகிவிடுகிறது.

உணர்ச்சி மேலிடாமல், தீங்கிழைத்தவர் மேல் வெறி கொள்ளாமல் இழைக்கப்பட்ட தீமைக்கு ஞாயம் கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு போராட வேண்டியது அவசியமாகிறது.

மற்றவைகளை சூழ்நிலை தீர்மானிக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் அர்ஜுனன் கூட நிற்கிறான். எதிர்த்துப் போராட மனமற்றவனாய் வில்லைக் கேழே போட்டவனிடம் கண்ணன் கூறுவதும் அது தானே. நீ போராட வேண்டியது உனது கடமை. உன் கடமையைச் செய் என்று தைரியம் ஊட்டுகிறார். தர்மம் நம் பக்கம் இருந்தால் நாமும் நம் கடமையைச் செய்வோம். பலன்களை கிருஷ்னார்பனம் என்று அவனிடம் விட்டு விடுவோம். லௌகீகனால் அது தான் முடியும்.

ஒரு வேளை நாம் முழுமையாக ஆன்மீகக் குதிரையில் சவாரி செய்யத் துவங்கிவிட்டால் பின்னர் புத்தரைப் போல சித்தர்களைப் போல சிரித்துக் கொண்டே எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடுமே. அதனால் இப்போது நீங்கள் (நாம்) போராடும் கடமை கொண்டவர் என்பதில் தெளிவோடு இருங்கள்.

Sivasubramanian said...

மிக தெளிவான விளக்கம். புதிய கோணத்தில் விஷயத்தை பார்க்க சொன்னதில் தெளிவு. சில நேரங்களில் இது கர்ம வினையா? இல்லை எதிர்த்து போராடுவதா? என்று மனது குழம்பும்.சிலரை( ஊரை அடித்து உலையில் வைத்தவன்,கடமையை செய்ய தவறியவன்)பார்க்கும்போதெல்லாம் "ஐயோ! இவனெல்லாம் நல்லா இருக்கானே? என்று மனம் வெதும்பும்.அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ஆவேசம் வரும்.அதே சமயம் இது கர்மவினையோ? இதை அனுபவிக்கத்தான் வேண்டுமோ? என்று மனம் சஞ்சலம் கொள்ளும்.என்னால் செய்வது கலிகாலம்.
உங்கள் மேன்மையான பதிலிற்கு நன்றி.

hayyram said...

திரு. Sivasubramanian , தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.