Thursday, September 9, 2010

வக்கிர புத்தி சினிமாக்களால் கல்லா கட்டும் இயக்குனர்கள்!




ஐயஹோ! என் வீட்டை சமூக ஆர்வலர்கள் தாக்கி விட்டார்கள் என்று ஒரு இயக்குனரும் என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்கள் என்று நடிகையும் மாறி மாறி போலீஸுக்குத் தகவல் கொடுத்து பத்திரிக்கையில் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் போலீஸார் இருவரையும் விசாரித்து தங்கள் திரைப்படம் பற்றிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் என்று சந்தேகம் தெரிவிகிறார்கள்.

செய்தி - "கார் உடைப்பு விவகாரம் குறித்து இயக்குனர் சாமி ஒத்துழைப்பு தரவில்லை என்று போலீசார் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மிரட்டல் ஆசாமி குறித்து சாமி சரியான ஆதாரம் தரவில்லை என்றும் இயக்குனர் சாமி ஒத்துழைத்தால் மட்டுமே உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட விளம்பரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் இயக்குனர் சாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மிரட்டல் ஆசாமி குறித்து இயக்குனர் சாமிக்கு தான் தெரியும் என்று நடிகை அனகா நழுவிக் கொண்டார். இதனைத்தொடர்ந்து உண்மையைத் தெரிவிக்காவிட்டால் இயக்குனர் சாமியை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்"

இத்தனை பரபரப்பை உண்டாக்கி இவர்கள் சந்தையிட நினைத்தது என்னவோ கள்ளத்தொடர்பு திரைப்படத்தை தான்.

சொல்லக்கூசும் உறவில் கள்ளத்தொடர்புக் கதை ஒன்றை திரைப்படமாக்கி அதை எப்பாடு பட்டாவது குடும்பங்களுக்குள் பரப்பி விட வேண்டும் என்றும் அதன் மூலம் நாலு காசு பார்த்து விட வேண்டும் என்று நினைக்கிறார் படத்தின் இயக்குனர்.

ஆனால் சமூகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறேன் என்பது இது போன்ற சினிமாக்காரர்களின் சப்பைக் கட்டுக்களாக இருக்கிறது. இந்த இயக்குனரும் அதையே தான் இந்த விஷயத்தில் வழி மொழிந்திருக்கிறார். சமூகத்தில் நடப்பது என்றால் இந்தப்படத்தை எடுத்த இயக்குனர் வீட்டில் நடந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா? இவரும் சமூகத்தில் தானே இருக்கிறார்!

தன் வீட்டில் குறையில்லை என்பார்கள் இது போன்ற ஆசாமிகள். ஆனால் மற்றவர் வீடுகளுக்குள் தனது வக்கிரக்கற்பனையை நுழைத்து விடுவார்கள்! இது போன்ற திரைப்படங்களைப் பார்த்து யாராவது இப்படியும் உறவு இருந்தால் நன்றாக இருக்குமே என்று தூண்டப்பட்டுவிட்டால் நாறப்போவது எவன் குடும்பமோ தானே என்கிற அலட்சியம் தான்!

சமூகத்தில் இப்படி நடந்தால் என்ன ஆகும் என்று காட்டுவதற்குத்தான் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகிறார் இந்தப்படத்தின் இயக்குனர். அதற்குப் பதிலாக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நேர்மறைக் கதாபாத்திரத்தின் மூலம் உலகுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லலாமே!

நம் முன்னோர்கள் அத்தகைய வழிகளைத்தானே பின்பற்றினார்கள்! ராமனை நாயகனாக்கி இப்படித்தான் ஏகபத்தினி விரதனாக வாழ வேண்டும் என்று இளைஞர்கள் மனதில் பதிய வைத்தார்கள். சீதையை நாயகி ஆக்கி இப்படித்தான் பெண் கற்புக்கரசியாக வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்கள். இதைக்கேட்ட மக்களுக்கு வேறு குணங்களைப் பற்றிய சிந்தனையே கூட இல்லாமல் நேர்வழி வாழ்வை நேசிக்கத்துவங்கினர். ஆனால் அதே காவியங்கல் வேசிப்பெண்ணின் வாழ்க்கையைக் காட்டி இப்படி வாழாதீர்கள் என்று கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஓஹோ இப்படியும் வாழலாம் போலிருக்கிறதே என்று அதையே வழியாகவும் கொள்ளக்கூடும்!

'நல்லதைத் தின்ன நினைப்பவன் நரகலைக் கையில் எடுப்பானேன்?' நேர்மறையாக ஒரு நல்ல கதாபாத்திரத்தை வலிமையாக காட்டி அதன்மூலம் சமூகத்திற்கு செய்தி சொல்லாமல் கொடுத்த காசுக்கு நல்ல சீன் வருதா என்று நாக்கை தொங்க போட்டு உட்காரச்செய்யும் ஒரு வக்கிர புத்தி திரைப்படத்தை எடுத்து அதற்கு சப்பைக்கட்டு காரணத்தையும் கூறும் இயக்குனர் சாமி கண்டனத்திற்கு உரியவர். நாட்டில் நடப்பதைத்தானே காண்பிக்கிறோம் என்று எங்கோ ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை எல்லோருக்கும் பரப்பி விளம்பரப்படுத்துவது சினிமாக்காரர்கள் சமூகத்திற்கு செய்யும் தீங்குதானே அன்றி சிறிதளவும் நன்மை இல்லை.

பாலச்சந்தரின் 'நெற்றிக்கண்' போன்ற படங்களை உதாரணமாக கூறி இருக்கிறார் இந்த கள்ளத்தொடர்பு பட இயக்குனர்.

பொதுவாக கற்பனையாளர்கள் யாராக இருந்தாலும் தமது சொந்த அனுபவம், தனது ஆசைகள், அல்லது தமது ஆழ்மன வக்ரங்கள் போன்றவற்றை அஸ்திவாரமாகக் கொண்டே கற்பனைகளைப் புனைவார்கள் என்பது இயல்பு! அந்த வரிசையில் வக்ரத்தை படமாக்கி அதன் மூலமே பிரபலம் அடைந்த பெருமனிதர் பாலச்சந்தர் என்றால் மிகையாகாது. அரங்கேற்றம், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, மன்மதலீலை, தப்புத் தாளங்கள் என்று இவரது படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!

இப்படி வக்கிரத்தினிப்பை சினிமாவில் கையாண்டு இயக்குனர் சிகரம் என்று பெயர் வாங்க பாலச்சந்தரால் முடியும் போது அதே வழியில் தமது ஆழ்மன வக்கிரத்தை படமாக எடுத்து 'இயக்குனர் குன்றாக' ஆவது ஆக மாட்டோமா என்ற கனவு இயக்குனர் சாமிக்கு மட்டும் வராதா என்ன? அந்த கனவில் தான் பாலச்சந்தரை துணைக்கு அழைத்திருக்கிறார் போலும்!

எது எப்படியோ, இது போன்ற படங்கள் வெளியாவது தடுக்கப்பட முடியாமல் அல்லது தவிர்க்க முடியாமல் போனால், இவையெல்லாம் சேர்ந்தது தான் தமிழ் சினிமா என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்!

இப்பல்லாம் வீட்டுக்குள்ளே தானே கக்கூஸும் இருக்கு! - 'All in one Roof'

3 comments:

sundar said...

Cinema is the biggest bane in India.It would be great if the Government restricts the number of films that would be produced in a year and also ban shows during School and college hours at theatres and also over Satellite channels to save the society

Unknown said...

great... miga thelivaga eduthuraitheergal. sattiyil iruppathuthane agappayil varum athupolthan inthamathiri padam eduppavargal manthum ithu nichayamaga aduthavarai thoondividum...

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சுந்தர் மற்றும் குனா!