Saturday, September 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 18



"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

மூலப் ப்ருக்ருதியான அண்டத்தின் மகா சக்தியை சாதகங்களை செய்தவர்கள் மட்டுமே காண முடிகிறது. ஆன்மாவை உணர்ந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்தவர்கள் மகா சக்தியை தரிசிக்கிறார்கள். மகா சக்தியை எந்தெந்த லோகத்தில் எந்தெந்த நிலையில் நம்மால் காணமுடியும் என்பதை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்ல் போல் தெளிவற்றும் பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது"

இவ்வாறான அகக்காட்சி தெளிவுற்று மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நான் ஆன்மா என்பதை எவன் நிலையாக உணர்கிறானோ அவனே ஞானியாவான். அவ்வாறு குழப்பங்களில் இருந்து விடுபட மனிதன் தான் கொண்ட உடலும், உடலால் உணரப்படும் விஷயங்களையும் தனித்தனியே பிரித்தறிந்து அவை ஆன்மாவிலிர்ந்து வேறுபட்டது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் உணர வேண்டும். அதை எவ்வாறு செய்வதென்பதை எமதர்மன் எடுத்துரைக்கிறார்.

"புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

மனிதர்கள் உட்பட உலகில் உள்ள யாவும் ப்ரபஞ்சத்திலிருந்து பிரிந்து வந்த ஒரே தன்மையிலான பொருளே! எனவே மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருள்களின் தன்மைகளைக் கொண்டதாக இருப்பதே இயல்பு.

உதாரணமாக பெரியோர்கள் இவ்வாறு பகுக்கிறார்கள்!

காது ஒலியை பெறுவதற்கு வின்னை நோக்கி இருக்கும் செலுத்து சக்தி.
மூக்கு காற்றின் அழுத்தத்தத நோக்கி இருக்கும் வாயு சக்தி!
கண் ஒளியை நோக்கி இருக்கும் அக்கினியின் சக்தி!
நாக்கு சுவையைத் தேடி இருக்கும் தண்ணீரின் சக்தி!
உடம்பு மணத்தினால் இயங்கும் பூமியைப் போன்ற இயங்கு சக்தி!

இப்படி ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன எனலாம். இவைகள் விழிப்பு நிலையில் செயல்பட்டு கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி இருக்கின்றன. இவ்வகைப் புலன்கள் அனைத்தும் உயிர்சக்தியோடும் பிராணனோடும் சம்பந்தப்பட்டவை. இவ்வகைப் புலன்களுக்கும் ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே இதன் மூலப்பொருள் என்பதை உணரவேண்டும்.



"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்"

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. ஆனால் இவ்வாறு புலன்கள் செயல்படுவது அவற்றின் தனித்தன்மையே அன்றி இதயக் குகையில் உரைந்திருக்கும் ஆன்மாவிற்கும் புலன் இயக்கங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை யார் ஆழ்ந்து உணர்கிறார்களோ அவர்களது புலன்கள் மீதான மோகமும் இயக்கமும் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன.

மேலும் மரணமில்லா நிலையை அடையும் வழியை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் எனப்படுவது அண்டவெளியின் மைய சக்தி எனக்கொண்டால் அதை அனுவிலும் அனுவான மனிதக்கண்களால் காண முடியாது என்பதே உண்மை. இதனை ஆன்மாவை உணர்ந்தவர்கள் ஆன்மரூபத்தில் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் மட்டுமே காண முடியும்.

இதையே கீதையில் பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார்...

"அர்ஜுனா! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."



ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."


(ஆன்மாவை அறிவோம்...)


மரணத்திற்கு அப்பால் - 19



No comments: