Monday, February 28, 2011

யார் குரு?


"குரு முகமாக கற்க சொன்னிங்க என் குருவை எவ்வாறு நான் தரிந்துகொள்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்க!" என்று நண்பர் அகோரி கேட்டிருந்தார்!


நண்பரே எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்!


குருவின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களது அறிவுரை. ஆனால் தற்காலத்தில் ஆன்மீக தேடலுக்கு விடை கொடுக்கக்கூடிய குரு யார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமானகாரியம். குரு என்பவர் யார் என்பதிலேயே நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.


யார் குரு?


தம்மைத்தாமே யோகி என்று கூறிக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் குருவாகிவிடுவார்களா?


தம்மைத்தாமே பரமஹம்சர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக விளக்கங்களைக் கூறி பிரபலமடைபவர்கள் குருவாகிவிடுவார்களா? அல்லது காவியும் கமண்டலமும் கொண்டவர்களும், ஜடாமுடிக்காரர்களும் குருவா?


வேதங்கள், சாஸ்திரங்கள் என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு கேட்கும்போதெல்லாம் விளக்கம் சொல்லி புரியவைப்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?


ஆனால் படித்தவைகளுக்கு விளக்கம் சொல்வது தான் ஒரு குருவாக இருக்கவேண்டியவரின் தகுதி என்றால் அதற்கு கற்றரிந்த பேராசிரியர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?


மூச்சுப் பயிற்சி, யோகாசனம் சொல்லித்தருகிறேன். உங்கள் மன அமைதிக்கு வழி கூறுகிறேன் என்று அழைத்து உடலாசனங்களைச் சொல்லித்தருபவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?


மூச்சுப் பயிற்சி, யோககலைகளில் சிறந்து விளங்கி அதைச் சொல்லித்தரும் தகுதியைக் கொண்டவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம் எனில் அதற்கு ஒரு உடற்பயிற்சியாளர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?


ஆனால் இவை யாவும் ஆன்மீகத்திற்கான படிக்கட்டுகளே! ஆன்மீக சாதகனுக்கான பாடங்களே! சாதகமும் தேடலும் நமக்குள்ளே நடக்கவேண்டும்! அதற்கு இவைகள் உதவும். 


அக்காலத்தில் குரு எனப்படுபவர்கள் சாதகங்கள் பல செய்து தவம் புரிந்து 
தான் உணர்ந்த ஆன்மீக அனுபவங்களை அவ்வழியே கற்றுத்தந்து ஆன்மீக மார்கத்திற்கு சிறப்பாக வழிகாட்டுவார்கள் எனப்படித்திருக்கிறோம். அனுபவத்தை அப்படியே பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பானதாகவும் நிதர்சனத்தை உணர்த்துவதாகவும் உண்மையை மெய்வழியில் விளக்குவதாகவும் இருக்கும். பரம்பரையாக இதைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால் இக்காலத்தில் படித்த விஷயங்களை கதாபிரசங்கம் மட்டுமே செய்துவிட்டு தன்னைத் தானே யோகி எனவும், பரமஹம்சர் எனவும், குருஜி எனவும் அழைத்துக்கொள்பவர்கள் அதிகரித்திருப்பதால் சாதகத்தின் மூலமாக கற்றுணர்ந்து அதை அப்படியே பயிற்சியாக கொடுக்கும் குரு யாரென்பது தெரியாமல் போய்விடுகிறது.


ஆக, சாதகம் செய்த குருவும் அரிது, அவர் வழியே சாதகம் செய்து வாழ்கை ஓட்டத்திலிருந்து விலகிப் போவது நமக்கும் அரிது. ஆக நமக்கு வாய்த்தது கர்மயோகம் தான்! கீதையைப் படியுங்கள்!


முதலில் ஒரு அடிப்படையை இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும்! இந்த பிரபஞ்சத்தில் நமக்கு துளியும் தெரிந்திராத ஒரு விஷயத்தை யாரும் நமக்குச் சொல்லித்தந்துவிடப்போவதில்லை!


பிறந்த குழந்தைக்கு பால் குடிக்கவும், வளர்ந்த மனிதனுக்கு காமுறவும் யாரும் கற்றுக்கொடுப்பதில்லல!


பிறப்பின் போதே அந்தராத்மாவில் படிந்திருக்கும் கற்பிதங்களை பிறந்தவுடன் நாம் செயல்படுத்திப் பார்க்கிறோம் அவ்வளவே!


ஆன்மீகமும் அப்படியே! நாம் சிலரிடம் கேள்வி கேட்டு அவர் நமக்கு விளக்கம் கொடுக்கும் போது "ஆங்! நானும் அப்படித்தான் நினைத்தேன்...!" என்போம். காரணம் அதுபற்றிய கேள்வியும் பதிலும் நம் மனதில் ஏற்கனவே பொதிந்திருக்கும். அதை வெளிக்கொண்டுவர ஒரு கருவி தேவைப்பட்டிருக்கும். நாம் யாரிடமிருந்து பதில் பெறுகிறோமோ அவரை கருவியாக்கிக் கொண்டோம், அவ்வளவுதான்!


குருவும் அப்படியே!


பாரதப்போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணனும் அதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனனும் அவ்வழியே உரையாடியவர்கள் ஆவர். அர்ஜுனனின் மனதிலும் ஏற்கனவே ஆன்மீகமும் பிறவி மறுபிறவி பற்றிய சிந்தனைகளும் இருந்திருக்கும். போருக்கான அந்த இக்கட்டான சூழலில் அதனை அவன் உணர மறுக்கிறான். அதனால் மனம் பிறழ்கிறான். கண்ணன் உள்ளே புகுந்து ஏற்கனவே அர்ஜுனன் மனதில் பொதிந்திருக்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறான்.


"அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம்.  அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்."  


என்று அவன் அந்தராத்மாவின் ஒளியைத் தூண்டி விடுகிறார்.


இதனால் விழிப்படைந்த அர்ஜுனன் கண்ணன் வழியிலேயே போர் செய்து
வெற்றியும் பெருகிறான்.


ஆன்மாவைப்பற்றி அறிய முற்படுவதே ஆன்மீகம். அறிதல் என்றால் தெரிந்து கொள்ளுதல் அல்ல. உணர்தல். நமக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை உணர்வதும் நாம் ஆன்மா என்பதை உணர்வதும் ஆன்மீகம். அதை நமக்கு உணர்த்துபவர்கள் யாரோ அவரே குரு!


எப்படி உணர்வோம்!


ஆன்மா ஒரு மகாசக்தி! அதே நேரத்தில் மிகவும் நுண்ணிய பொருள்! அதன் அதிர்வுகளை நமக்கு உணர்த்துபவர் யாரோ அவரே குரு! ஒரு தொடுதல் மூலம், ஒரு பார்வை மூலம், ஒரு அருகாமையின் மூலம் நம்மிடம் யார் அதிர்வை உருவாக்குகிறாரோ, நம் உச்சந்தலையில் மொத்த சக்தியும் ஒன்று சேர மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு நம் உடலில் அதிர்வை உண்டாக்கி நம் சக்தியை நமக்கே அடையாளப்படுத்திவிட்டு எதுவும் தெரியாத மாதிரி யாரால் அமர்ந்திருக்க முடியுமோ அவரே குரு!


அர்ஜுனனுக்கு கண்ணன் அவ்விதமே காட்சியளித்தான். தன் சுயரூபங்களின் மகாசக்தியை வெளிப்படுத்தி அர்ஜுனனின் அந்தராத்மாவை அதிரவைத்தான்.


அப்படி ஒரு குரு உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதன் பின் நீங்கள் இச்சமூகத்தில் சஞ்சரிக்க மாட்டீர்கள்!


அப்படி ஒருவர் உங்கள் ஆன்மாவை அதிரவைத்தாரென நீங்கள் உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்! ஏனெனில் தேடுதல் எனக்கும் உண்டு!


அப்படி ஒரு குரு கிடைக்கும் வரை கீதையும், உபநிஷத்துமே உங்களது குருவாக இருக்கட்டும்!


உங்கள் சுய சோதனைகளும் சாதகங்களுமே உங்கள் குருவாக இருக்கட்டும்!


அதுவரை நீங்கள் மன அமைதியுடன் ஆன்மாவை உங்களுக்குள்ளே தேட துவங்குங்கள்!


உங்கள் தேடுதலே உங்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.


தேடுதல் தொடரட்டும்! 


தேடுதல் தொடரும் வரை எனக்கு கண்ணனே குரு! உங்களுக்கு?


.

14 comments:

kppradeep said...

Fantastic post. In this fast world great saints teachings are our Guru. This has been told by Super Star Rajini sir as all the real saints/yogis have confined themselves to the mountain caves.
Keep it up sir

thiruchchikkaaran said...

அப்படி போடு!

அசத்தலான புரட்சிக் கட்டுரையைக் கொடுத்து இருக்கிறார் இராம்.

சொன்னால் கோவித்துக் கொள்வார்கள், பலர் இன்னும் குரு தான் எல்லாம், குரு இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது என்றெல்லாம் எழுதி, இன்றைக்கு வாழும் யாராவது ஒருவரை குருவாக வைத்துக் கொண்டால் தான் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் , யார் காலிலாவது விழு என்ற கட்டாயத்துக்கு தள்ளுகிறார்கள்.

தைரியமான கட்டுரையை தந்த இராம் அவர்களை வாழ்த்துகிறேன்.

உணவுக்கு உடைக்கு இதற்க்கு மேலே எதையும் எதிர்பார்ப்பவன் எப்படி ஆன்மீக வாதியாக முடியும். ஐந்தாயிரம் கோடி சொத்து என்கிறார்கள். மூச்சு பயிற்சி சொல்லித் தரேன், ஏழாயிரம் ரூபாய் கொடு என்கிறார்கள். வாழும் வகையை சொல்லித் தருவதாக் சொல்லி இவர்கள் வாழ வழி செய்கின்றனர்.

ஆதி சங்ககரர் கையில் காசு வைத்து இருந்தாரா?

தியாகராஜர் வீட்டிலே மணி அரிசி இல்லாத நிலையிலும் தஞ்சை அரசர் கொடுத்த பதவியை, பொன்னை , பொருளை வேண்டாம் என்று சொல்லவில்லையா?


பட்டினத்தார் கோடிப் பொன்னை தூக்கி எரிந்து விட்டு கட்டிய வேட்டியுடன் வெளியேற வில்லையா?

சுவாமி விவேகானந்தர் பிச்சாண்டித் துறவியாக சென்னைக்கு வந்தார். அவர் புகழ் பெற்ற பின்பும், அவர் துவங்கிய மடங்கள் , மக்களின் சேவைக்கு தானே தவிர ,அவர் கடைசி வரை அடுத்த வேலை உணவு எங்கே என்று இருந்தவர்தான். இவங்க தான் உண்மையான ஆன்மீக வாதி

ஆன்மீக வாதி காட்டிலோ, குகையிலோ இருக்கலாம்! ஆனால் ஆன்மீகவாதி மக்கள் மத்தியில் இருக்க முடியாது என்று இல்லை, சங்கரர், விவேகானந்தர் , தியாகராஜர், பட்டினத்தார் போன்றோர் குகையையோ மலையையோ தேடவில்லை

hayyram said...

//உணவுக்கு உடைக்கு இதற்க்கு மேலே எதையும் எதிர்பார்ப்பவன் எப்படி ஆன்மீக வாதியாக முடியும்// உண்மை.

முக்கியமாக ஆன்மாவை உணரவைக்கும் குருவாக எப்ப்டி இருக்க முடியும்?

ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறாக மூச்சுப் பயிற்சி, யோகக்கலை என்று பாடம் எடுப்பவர்களை விலக்க வேண்டும் என்றோ, ஒதுக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. அவர்களின் பலருடைய சமூகத்தொண்டு மதிக்கப்பட வேண்டியதே!

ஆனால் ஆன்மாவை உணரும் ஆன்மீக சாதகத்தை போதிக்கும் வழியில் தான் நம்மை ஒருவர் வழிநடத்திச் செல்கிறாரா? அவ்வழி நோக்கித்தான் நம் பயணம் நடக்கிறதா என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டியது சாதகனுக்கு முக்கியம்! இல்லையேல் ஒரு சராசரி பாடம் எடுத்து பயிற்ச்சி கொடுப்பவரிடம் வாழ்க்கை முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டு வீனடிக்கப்படும்.

//. மூச்சு பயிற்சி சொல்லித் தரேன், ஏழாயிரம் ரூபாய் கொடு என்கிறார்கள்.// இதைப் படித்த உடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகிராம் சுரத்குமார் பற்றி கேள்விப்பட்ட வரையில் அவர் தன்னை கடைசி வரை பிச்சைக்காரன் என்றே அழைத்துக்கொண்டாராம். அதே நேரத்தில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் அனுபவங்களை வாசிக்கும் போது மிகவும் ஆழமான ஆன்ம உணர்வை அவருக்கு உணர்த்தி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இப்படி எந்த போகத்திலும் ஆட்படாமல் மரத்தடியில் உட்கார்ந்திருப்பவர்கள் கூட ஆன்மாவை உனரவைக்கும் குருவாகலாம். ஆனால் அது நமக்கு விதிக்கப்பட்டிருந்தால் கிடைக்கும். அதுவரை தேடுவோம்...ஆன்மாவை நமக்குள்ளே!

hayyram said...

thanks pradeep!

thiruchchikkaaran said...

இராம், மூச்சப் பயிற்சி உட்பட எந்த ஒரு உடற் பயிற்சியாளரையும் நாம் ஒதுக்க சொல்லவில்லை.

ஆனால் அவர்களை ஆன்மீகக் குருவாகக் கருத முடியுமா என்பதே கேள்வி!


மூச்சுப் பயிற்சிக்கு ஒரு சீடனிடம் ஏழாயிரம் வாங்கப் படுகிறது. மொத்தம் இப்படி சேர்ந்த தொகை எவ்வளவு. இவ்வளவு பணம் அவர்களுக்கு எதற்கு? அர்த்தம் அனர்த்தம் , பொருள் சேர்ப்பது கெடுதியை தரும் , பணம் உள்ளவன் சொந்த மகனைப் பார்த்து பயப் பட வேண்டியுள்ளது என்றால் சங்கரர். நிதி சால சுகமா என்றார் தியாகராஜர்.

நிதி எவ்வளவு சேர்ந்தது என்று கணக்கு பார்க்கின்றனர் இன்றைக்கு தங்களைக் குருவாகக் காட்டிக் கொள்பவர்கள். ஏனெனில் "இராமு நீ சந்நிதி சேவா சுகமா" என்கிற சுகத்தை அவர்கள் உணரவில்லை என்பதாகவே கருத முடியும்.

thiruchchikkaaran said...

//ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறாக மூச்சுப் பயிற்சி, யோகக்கலை என்று பாடம் எடுப்பவர்களை விலக்க வேண்டும் என்றோ, ஒதுக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. அவர்களின் பலருடைய சமூகத்தொண்டு மதிக்கப்பட வேண்டியதே!//


Gymமில் உடற்பயிற்சி பயிற்றுவிப்ப ருக்கு கூட வணக்கம் செலுத்தி மரியாதை செய்கிறோம், அது நமது பண்பாடு.

ஆனால் இதில் சமூகத் தொண்டு என்று எப்படியாகும். மூச்சுப் பயிற்சி , யோகம் காசுக்கு தானே சொல்லித் தருகிறார்கள்!

hayyram said...

// மூச்சுப் பயிற்சி , யோகம் காசுக்கு தானே சொல்லித் தருகிறார்கள்!
// உண்மை. எப்போது காசு கொடு என்று கேட்கிறார்களோ அது ஆன்மீகம் இல்லை. இது போன்றவர்களை பயிற்றுவிப்பாளர் என்கிற நிலையில் மதித்தால் போதுமானது. சிலர் தங்கள் வாழ்க்கையையே துறந்து சீடர்களாகி பின்னால் சென்று விடுகிறார்கள். அது தான் சங்கடம்!

அகோரி said...

மிகவும் நன்றி உங்கள் கருத்துக்கள் புரிவும்படி இருந்தது

hayyram said...

நன்றி அகோரி, உங்கள் சந்தேகங்கள் கூட என் தேடலை அதிகரிக்கிறது. சேர்ந்து தேடுவோம்.

Kannan said...

திரு அகோரி, என் அனுபவத்தில் ரமண மகரிஷியின் சில வாய் மொழிகள் உதவி உள்ளன. அவை புத்தக வடிவில் இங்கே உள்ளது இலவசமாக. இவை உங்களுக்கு உதவ கூடும்.

http://www.sriramanamaharshi.org/bookstall/downloadbooks.html

அகோரி said...

திரு Kannan ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி

Unknown said...

நீங்கள் கூறிய படி ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடந்தது !! உச்சந்தலையில் நம் மொத்த சக்தியும் ஒன்று சேர அசைவற்று போனேன். அந்த அதிர்வை எப்படி விவரித்து சொல்வது என தெரியவில்லை... எல்லையில்லாத சந்தோசத்தை .. எனது மறக்க முடியாத அனுபவம் அது !! இடைவிடாத கிருஷ்ணனை நினைத்து .... கீதையை கிட்டத்தட்ட ஒரு வருடம் மேலாக தினமும் படிக்க ஒரு நாள் மட்டும் இது நடந்தது ..... இதற்கு எனக்கு குரு தேவைப்படவில்லை ..... எனது குரு கண்ணனும் பகவத் கீதையும் தான் !!!

TTGOPINATHG THANGARAJ said...

Well Said., When religion ruins spiritual begins. Many saints are coming and went back in this world. Some what enlightened people are really seeking their Guru., But real Guru will come without asking of his sishya's wishes. This is truth but our seeking continued.,Until we get..

Thanks for the Good Information. :)

Dr.Anburaj said...

பல நல்ல தகவல்கள் தொகுப்பாக சுவாமி விவேகானந்தரின் ஞானதீபத்தில் உள்ளது. விவேகானந்தர் ” குருவிடம் அன்பு காட்டு.அடிமையாய் இராதே” என்று தெளிவாக கூறுகிறார் துறவிகளும் சமய கல்வி பயிற்சி அளிக்க முன்வருபவர்களும் மனதர்களே.அவர்களை நாம் தேவையில்லாமல் தலையில் வைத்து கூத்தாடுகின்றோம்இகாலில் விழுந்து கும்பிடுகின்றோம். காலைக் கழுவி குடிக்கின்றோம். .... பல முட்ாள்தனங்கள். நிதானமான ஒரு உறவு முறை வேண்டும். குருவும் மனிதனே.விவேகானந்தரை க் கூடமனிதனாகப் பாரக்க வேண்டும்.
தெய்வ அவதாரமாக பாரக்கும்போது அவரது போதனைகள் நமக்கு மலைப்பாகத்தெரியும்.பின்பற்றிப் பார்க்க துணிவு வராது.